வெற்றி என்ற ஒற்றைச் சொல் எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருக்கிறது. தோல்வி என்ற அனுபவம் பலருக்கு படிப்பினையாக இருந்தாலும் சிலருக்கு அது மனத்தளர்ச்சியை தருகிறது. முயற்சிகளில் தோல்வி ஏற்படுவது சகஜம். அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவதே வெற்றியை நோக்கி நடை போடச் செய்யும். ஆனால் அந்த மனத்திண்மை எல்லோருக்கும் இருப்பதில்லை. அதை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வெற்றி பெற்ற பலரின் சரித்திரங்களை புரட்டிப் பார்த்தால் ஒன்று புலப்படும். அது மீண்டும் மீண்டும் முயற்சித்தல் என்கிற செயல்தான். எந்த ஒரு நபருக்கும் ஒரே முயற்சியில் வெற்றிக்கனி கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நிலைக்காது.
உயர்ந்த லட்சியங்களை அமைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற திட்டங்கள் தீட்டி அவற்றை செயல்பாடுகளாக மாற்றும்போது மன உறுதியுடன் செயல்பட வேண்டும். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதற்கு ஏற்ப செய்யும் முயற்சிகளில் பல தோல்விகளை சந்திக்கலாம். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயற்சிப்பது தான் புத்திசாலித்தனம். பலரும் தோல்வி தந்த அதிர்ச்சியை ஏற்க முடியாமல் முயற்சியை கை விடுகின்றனர்.
தான் நிச்சயம் ஜெயித்தே தீருவேன் என்று நினைக்கும் மனிதன் முயற்சிகளில் தோற்றாலும் அவற்றை கைவிடுவது இல்லை. மீண்டும் மீண்டும் முயல்கிறான். 100% சரியான மனிதன் யாரும் இல்லை. தவறுகள் நிகழ்வது சகஜம். இ எந்த மனிதன் புரிந்து கொள்கிறானோ அவன் தன் முயற்சிகளை தொடர்கிறான்.
லட்சியத்தை நோக்கிய பயணத்தில் செயல்பாடுகள் சிறந்ததாக இருக்க வேண்டும் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட வேண்டும் அது தினந்தோறும் நடக்க வேண்டும். விக்ரமன் படத்தில் வருவது போல ஒரே பாடலில் வெற்றியாளர்களாக கோடீஸ்வரர்களாக ஆக முடியாது. அதற்கான காலம் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். வாழ்வை மாற்றும் வெற்றிக்கு காத்திருக்கும் பொறுமை வேண்டும். ஒவ்வொரு வெற்றியும் முதலில் கடினமானதாக இருக்கும் நடுவில் குழப்பமானதாக ஆனால் இறுதியில் அது பிரம்மாண்டமாக இருக்கும்
ஒவ்வொரு நாளையும் வாழ்க்கையின் முதல் நாள் போல கருதி முயற்சிகளைத் தொடர வேண்டும். மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். நேற்றைய தோல்விகளையும் அவமானங்களையும் மறந்து விட்டு இன்றைய நாளை புதிதாக தொடங்க வேண்டும். ஆனால் நேற்றைய தோல்வி சொல்லிக் கொடுத்த அனுபவப் பாடத்தை மட்டும் மனதில் நிறுத்தி முயற்சிகள் தொடரப்பட வேண்டும்.
ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகள் தோல்வியில் முடிந்த பின்னர் தான் தாமஸ் ஆல்வா எடிசனால் மின்சார பல்பைக் கண்டுபிடிக்க முடிந்தது. அத்தனை சோதனைகளும் தோல்வியில் முடிந்ததை எண்ணி அவர் கவலைப்படவே இல்லை.
ஒருமுறை அவருடைய ஆய்வகத்தில் பல வருடங்களாக சேர்த்து வைத்திருந்த ஆய்வுக் குறிப்புகள் அனைத்தும் எரிந்து சாம்பலான போது அவர் அழவில்லை. மனம் கலங்கவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைந்தார். "நான் இதுவரை முயற்சி செய்யாத புதிய வழிகளில் என்னுடைய செயல்பாடுகளை தொடர்வேன்" என்று சொன்னார். அத்தகைய தன்னம்பிக்கையும் தொடர்ந்த முயற்சியும்தான் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளிக்க வைத்தது.