
ஒரு முயற்சியில் இறங்கி, தொடர்ந்து உழைத்து, வெற்றியும் பெற்ற பிறகு தோற்றுப் போனவர்கள் உண்டு.
நம் இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸின் வாழ்க்கையைக் காண்போம். வானொலியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜகதீஷ் இறங்கினார். தமது ஊரில் கிடைத்த கருவிகளையே செம்மைப்படுத்திக் கடுமையாக உழைத்தார். முயற்சியில் வெற்றியும் பெற்றார்.
ஆனால் அந்த வெற்றியின் பயன் கிடைக்கவில்லை. வெற்றியின் புகழ் கிடைக்கவில்லை. ஜகதீசர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறியாமலே மார்க்கோனியும் அதே முயற்சியில் ஈடுபட்டார். வெற்றியும் பெற்றுவிட்டார். தாம் கண்டு பிடித்ததை உலகுக்கு உடனே அறிவித்துவிட்டார்.
ஜகதீஷ் தாமதித்தார். மார்க்கோனி முந்திக் கொண்டார். அதனால் தம் உழைப்பின் பயனை அவர் அடையவில்லை.
'காலதாமதம் சாலவும் தீது' என்பது மனோன்மணிய நாடக உரை. ஜகதீசர் விடா முயற்சியால் பெற்ற வெற்றி வீணாய்ப்போனதை அறிந்து விசனத்தில் ஆழ்ந்து விடவில்லை. வெற்றியே தோல்வியாய்ப் போனதால் விரக்தியும் கொள்ளவில்லை. மீண்டும் முயன்றார்.
இம்முறை தாவரத்துக்கு உயிர் உண்டு என்னும் பேருண்மையைக் கண்டு பிடித்தார். கண்டுபிடிப்பை வெளியிடத் தாமதம் செய்யவில்லை. அறிவித்தார். தமது கண்டுபிடிப்பை நேரடியாக நிரூபிப்பதற்காக ஒரு சிறிய ஆய்வுக்கூடத்துடன் (லேப்) இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குச் சென்றார். நிரூபித்தார்.
கடந்த முறை தவறிய வெற்றியை இம்முறை அடைந்தார். இதுதான் உழைக்கும் முறை; ஊழையும் உப்பக்கம் காணும் முறை.
ஐகதீசர் போல முதல் வெற்றியில் ஏமாந்தவர்கள் பலர் உண்டு. தேர்வானாலும் அறிவியல் ஆய்வானாலும் வியாபாரமானாலும் வேறு தொழிலானாலும் செயல் ஆனாலும் சரி, எந்தத் துறையிலும் தோல்வியை கண்டு பயப்படாதீர்கள் அச்சத்தை அகற்றுங்கள் அசைவிலா ஊக்கம் பெறுங்கள் அயராமல் உழையுங்கள் நம்பிக்கையே உங்கள் துணை.
தோல்வி அடைகிற செயல் அல்லது தொழில் என்று ஒன்று இல்லை. ஆனால் தோல்வி அடைகிறவர்கள் என்று சிலர் உள்ளனர்.
அதனால் தோல்வி நேரும்போது, உங்கள் செயலைக் குறை சொல்லாதீர்கள்; தொழிலைக் குறை சொல்லாதீர்கள். அவை தோல்வியடையக் காரணமான குறை ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கிறது என்பதை உணருங்கள். அதைக் கண்டுபிடித்து, நீக்கிவிட்டால், தோல்வி தூரப்போகும். தோல்லி, தோல்வியடையும்.
அதன் பிறகு ஜெயிப்பது நிஜம்!