
திறமைகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல்தான் மேலாண்மைக் கல்வியில் சொல்லிக் கொடுக்கின்றனர். இதுபோன்ற படிப்புகளுக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. நமது நாட்டில் கூட எம். பி. ஏ படிப்புக்கு மாணவ மாணவிகள் போட்டி போட்டு நிற்கின்றார்கள். இந்தப் படிப்பு படித்தவர்கள் உடனடியாக வேலைக்குப் போய் விடுவதால் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர். நிறுவனங்களும் மேலாண்மை படிப்பு படித்தவர்களை உடனடியாக வேலைக்கு சேர்த்துக் கொள்கின்றன.
கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உழைப்புக்கு ஒரு காசு. வேலை வாங்குபவனுக்கு பத்து காசு. இது சாதாரண வார்த்தை அல்ல. மேலாண்மையின் சாராம்சம் இதில்தான் அடங்கியிருக்கிறது. எப்படி யென்றால் ஒரு வீடு கட்ட பல கொத்தனார்கள் தேவைப்படுகிறார்கள். அங்கு சித்தாள், பெரியாள் என்று பல பேர்கள் இருப்பார்கள்.
இவர்கள் அனைவரையும் வேலை வாங்க ஒரு காண்டிராக்ட் இருப்பார். அவருக்கு ஒரு கல்லை கூட வைக்கத் தெரியாது. ஆனால் நன்றாகக் கட்டடம் கட்டும் கொத்தனாரை அப்படிச் செய், இப்படிச்செய் என்பார். அவரும் குனிந்த தலை நிமிராமல் செய்வார்.
கொத்தனாரைக் கூப்பிட்டு கட்டிட முதவாளி ஒரு லோடு மணல் வேண்டும் என்று கேட்டால், எனக்குத் தெரியாது காண்டிராக்ட்டரிடம் சொல்லுங்கள் என்பார். சரி அந்த ஒயரை மாட்டுங்கள். பல்ப் எரியும் என்றால் எனக்குத் தெரியாது எலக்ட்ரீஷியனைக் கேளுங்கள் என்பார். இதே வேலையை ஓரு காண்டிராக்ட்ரிடம் சொன்னால் உரியவர்களிடம் கூறி எல்லா வேலைகளையும் பார்த்து விடுவார்.
அதனால்தான் கொத்தனார் வாரத்தின் முடிவில் ஆயிரம் ரூபாயும், காண்டிராக்டர் 5000 ரூபாயும் வாங்குகிறார். இப்போது புரிகிறதா. வேலை செய்கிறவனைவிட வேலை வாங்குகிறவருக்குதான் அதிக சம்பளம். இந்த வேலை வாங்கும் ஆற்றலைதான் மேலாண்மையில் சொல்லித் தருகிறார்கள்.
நன்றாக வீடு கட்டத் தெரிந்த கொத்தனாரிடம் யாரும் வீடு கட்டுவதற்கான முழு பொறுப்பையும் கொடுக்க மாட்டார்கள். கட்டடம் கட்டத் தெரியாவிட்டாலும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் உள்ள காண்டிராக்டரிடம்தான் ஒப்படைப்பார்கள். ஒருங்கிணைப்பு ஆற்றல் உள்ளவர்களை பொறுப்பு தேடிவரும்.