வாழ்க்கையில் சாதிக்க ரஷ்ய விஞ்ஞானி கூறும் 8 வழிகள்!

8 ways to achieve in life.
8 ways to achieve in life.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆயினும் ஒருவருக்கு பிரத்தியேகத் திறமைகள் இல்லாவிட்டாலும் கூட , மனம் தளராமல் தமது சுய முயற்சியினாலும், பயிற்சிகளினாலும் திறமையையும், ஆளுமையையும் வளர்த்து கொள்ள முடியும். இதற்கு எட்டு வழிகள் உள்ளன என்கிறார் மோரிஸ் இமோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி. அவைகள் என்னென்ன பார்க்கலாம்.

1) குறிக்கோள் அவசியம்:

முதலில் தகுதியான நல்ல குறிக்கோளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குறிக்கோளே உங்களது முயற்சிகளுக்கு ஒரு நோக்கத்தை வழங்கும். உங்கள் முயற்சிகளை அதன்பால் குவிக்க உதவும். இதனால் உங்களுக்கு ஒரு முக்கியமான காரியார்த்த நோக்கு மிக்க குண நலம் ஏற்பட்டுவிடும்.

காரியார்த்த நோக்கு இருந்தால் உடல் உறுப்புகளை எல்லாம் மிகவும் சுறுசுறுப்பான நிலையில் வைத்திருப்பதும் சாத்தியமாகும். எவ்விதமான குறிக்கோளும் இல்லாமல் வாழ்பவர்களோ விரைவில் முதுமையடைந்து விடுகிறார்கள். அவர்களது திறமைகளும் விரைவில் குன்றி விடுகின்றன.

2) மன உறுதிக்கு பயிற்சி தேவை:

மன உறுதி என்றால் எதைச் செய்தாக வேண்டுமோ அதைச் செய்து முடிக்குமாறு தன்னைத்தானே வற்புறுத்தி செயல்படச் செய்யும் திறன் தான். சராசரி திறமை இருந்தாலும், மிகுந்த மனவுறுதியைப் பெற்றுள்ள பலர் வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்து விடுகிறார்கள். அதே சமயம் திறமை இருந்த போதிலும் மன உறுதி இல்லாததால் பலர் எதையும் சாதிக்காமல் போய்விடுகிறார்கள்.

3) உடலை வலுபடுத்திக் கொள்ளுங்கள்:

உடல் இயக்கத்திற்கு அன்றாடம் மிக முக்கியத்துவம் கொடுங்கள். தற்போது மெஷின்களை நம்பி மனிதன் உடல் உழைப்பை குறைத்து கொண்டான். அதன் விளைவாக பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதோடு தொடங்குங்கள். உடற்பயிற்சி அவரவர் உடல் சக்திக்கு ஏற்றவாறு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி மனிதனை ஆரோக்கியமான வலுவுள்ள மனிதனாக உருவாக்குகிறது. வாழ்க்கையில் சாதிக்க ஆரோக்கியம் முக்கியம் அல்லவா?

4) சரியாக உண்ணுங்கள்:

உங்களுக்கு நீங்களே உதவிக் கொள்ள வேண்டும் என்றால் பசி உணர்வு ஏற்படாத அளவுக்கு குறைத்தே உண்ணுங்கள். சாப்பிடுவதை நன்றாக மென்று உண்ணவும் கற்றுக் கொள்ளுங்கள், உணவை எவ்வளவு குறைத்து உண்ணுகிறீர்களோ அவ்வளவுக்கு அதிகமாக தண்ணீரையும் நாள் முழுவதும் அருந்துங்கள். சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட உடல் பலம் அதிகரித்து வேலை செய்யும் திறன் பெருகும்.

5) அலைபாயும் மனதை கட்டுப்படுத்துங்கள்:

ஒரு கடிதம் எழுத காகிதத்தை மேஜை மீது வைத்துப்பேனாவையும் கையில் எடுக்கிறீர்கள். அடுத்த கணமே உங்களது சிந்தனை தறிகெட்டு சிதறிப் போய் கடிதம் எழுத முடியாமல் எழுந்து விடுகிறீர்கள். மனித மனதின் இந்த சித்து விளையாட்டு காரணமாக எத்தனையோ நல்ல காரியங்கள் நடைபெறாமல் போயிருக்கின்றன. கவனத்தை ஒரு விஷயத்தில் குவிக்கும் திறமையை பயிற்சியின் மூலம் அதிகரித்து கொள்ளலாம். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரே சிந்தனையில் தனது கவனத்தை குவிக்கும் திறன் இருந்ததால் தான் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளை செய்ய முடிந்தது.

6) சரியாக பேச கற்றுக் கொள்ளுங்கள்:

பிறரிடம் பேசும் போது மனம் கவரும் படி பேசுவது சாதிக்க உதவும். நினைவு அரங்கில் எவ்வளவுக்கு எவ்வளவு விஷயங்கள் நிலைத்து இருக்கின்றனவோ அந்தளவுக்கு விஷயங்களை வாரி வழங்கும் காரியமும் மூளைக்கு எளிதாகி விடுகிறது. இதற்கு தினமும் பல விஷயங்களை படிப்பது அவசியம்.

இதையும் படியுங்கள்:
Minimalism: மினிமலிசத்தைக் கடைப்பிடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 
8 ways to achieve in life.

7) வேலையை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்:

ஒவ்வொருவருக்கும் வேலை செய்யும் திறன் எந்தெந்த நேரத்தில் மிகவும் மேலோங்கி இருக்கிறது. எந்தெந்த நேரத்தில் மிகவும் தாழ்ந்து இருக்கிறது என்பதை கொண்டு அதன் படி வேலை செய்தால் சலிப்பு தோன்றாது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பிறகு மாலை 4மணி முதல் 8 மணி வரையிலும் தான் மிகவும் பயன்மிக்க நேரங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

8) ஓய்வு எடுக்கவும் நேரம் தேவை:

ஒய்வு நேரத்தை சரி வரப் பயன்படுத்திக் கொள்ளலாம் இருப்பவர்கள் பல்வேறு உடல்நலக்குறைவுக்கு ஆளாகிறார்கள். களைப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்ளுங்கள். இதற்கு விடுமுறையை நல்ல முறையில் செலவிடுங்கள். களைப்பை தடுப்பதற்காக உடலை தளர்த்தும் முறையை பின்பற்றுங்கள். மதிய நேரத்தில் சிறிய தூக்கம், எந்த விதமான சிந்தனை இல்லாமல் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து இருப்பது போன்றவைகள் இதற்கு உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com