தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப சில குழந்தைகள் பெற்றோர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பார்கள். சிலர் அதற்கு எதிர்மறையாக நடந்து கொள்வதும் உண்டு. இன்னும் சிலர் பெற்றோரே எதிர்பார்க்காதபடி நடந்து நற்பெயரை சிறுவயதிலேயே பெறுவதுண்டு. சிறுபிள்ளையாக இருக்கும்பொழுது எப்படி நடந்து கொண்டாலும் குழந்தைகளின் குறும்புத்தனத்தை ரசிப்பவர்கள்தான் பெற்றோர்கள். ஆனால் அவர்கள் வளர்ந்து வரும் பருவத்தில் எப்படி நடந்து கொள்கிறார்களோ அது எல்லா பெற்றோர்களின் மனதிலும் அப்படியே நின்றுவிடும். அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்கள் இவர்கள்.
மகன் இரவில் மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தான். வயோதிக தாய் படுக்கையில் இருந்தவாறு நீர் கேட்டாள். பாத்திரத்தில் நீர் இல்லை. வெளியே சென்று கொஞ்ச தூரத்திலிருந்த கிணற்றில் நீரிரைத்து எடுத்து வந்தான் மகன். தூக்கத்தில் இருந்து தாயை எழுப்பாமல் அவர் எழுந்து கொள்ளும்வரை அருகிலேயே நீரை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். காலையில் கண்விழித்த அன்னை மகனே இரவு முழுவதும் இப்படியே நின்று கொண்டிருந்தாயா? என்று கேட்டார். ஆமாம் உங்களுக்கு தாகம் எடுக்கும்போது நீர் தர வேண்டாமா? என்றான் அவன். அந்தச் சிறுவன்தான் ஈரான் நாட்டின் தலைசிறந்த சமயச் சான்றோரில் ஒருவரான பாயசீத்புஸ்தாமி என்பவர்.
கோபாலகிருஷ்ண கோகலே காந்திஜியிடம் நீங்களும் உங்கள் பெற்றோரும் காட்டில் சென்று கொண்டிருக் கிறீர்கள். அப்போது சிங்கம் ஒன்று எதிரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார். "முதலில் நான் சிங்கத்திற்கு இறையாவேன். அதனால் என் பெற்றோர் பிழைத்துக் கொள்வார்கள் அல்லவா?" என்றார் காந்திஜி அமைதியாக! இப்படி பெற்றோரே எதிர்பார்க்காதபடி நடந்து கொண்டவர்கள் இந்த இருவரும்.
மகன் சறுக்கும்போது செதுக்கிய தாய் இவர்தான். மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் காலத்தில் ஒருமுறை ஔரங்கசீப் பின் மகன் வழி தவறி சிவாஜியின் ஆளுகைக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் நுழைந்து விட, அவனைப் பிடித்து வந்த மராட்டிய வீரர்கள் மன்னனிடம் கொண்டு வர, அப்போது சிவாஜி நமக்கும் அவுரங்க சீப்புக்கும்தான் விரோதம். அவர் மகன் என்ன செய்வான்? என்று கூறி விடுவித்தது பெண்மைக்கே பெருமை சேர்க்கும் பெருந்தன்மை என்று கூறலாம்.
இந்தக் கதையை கேட்ட சிறுவர்கள் கேட்ட வினா என்னவென்றால் இவர்களெல்லாம் பெயர் பெறுவதற்காக இப்படி நடந்து கொண்டார்களா? அல்லது நடந்து கொண்டதால் நல்ல பெயர் பெற்றார்களா? என்பதுதான்.
ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகன் சான்றோன் எனக் கேட்ட தாய்!
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொள் எனும் சொல். என்பவை களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பெற்றோரும் பிள்ளைகளும் எவ்வாறு ஒருவருக்கு ஒருவர் இயைந்து, இணைந்து, புரிந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான்.
நாம் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கை அல்ல.
நம்மையே நாம் செதுக்கிக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை!! அதற்கு ஆரம்ப வழிகாட்டிகள்தான் பெற்றோர்.