.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
மனிதர்கள் கோடிக்கணக்கில் பிறக்கும்போது அவர்களுக்கான உணவு உறைவிடம் குடிநீர் வசதிகளை இயற்கை பார்த்துக் கொள்ளும் என விட்டுவிட முடியாது. ரசாயன உரங்கள் வீரிய விதைகள் கலப்பினப் பசுக்கள் என விஞ்ஞானம் விரைந்து செயல்படுகிறது. மாறிவரும் உலகில் மாபெரும் தேவை எரிபொருள்.
2011ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி மெக்சிகோ நாட்டின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏ 320 ரக ஏர்பஸ் விமானம் ஏஞ்சல் அய்யினோ கார் சோ நகரம் வரை விரைவாகப் பறந்து வந்து ஒரு சாதனை நிகழ்த்தியது. அதன் எரிபொருளில் பெட்ரோலுடன் மனிதன் செயற்கையாக செய்து வைத்த காட்டு ஆமணக்கு எண்ணை 30 பர்சென்ட் கலந்து விமானம் ஓட்டப்பட்டது. காட்டு ஆமணக்கு எண்ணை நடைமுறைக்கு வந்தால் காற்று மாசு குறையும். அதுமட்டுமல்ல தரிசு நிலங்களில் ரயில் பாதைகளின் ஓரமாக காட்டு ஆமணக்கு பயிரிடுதல் மூலம் கோடிக்கணக்கான ரூபாயாக இந்தியாவுக்கு மிச்சமாகும். இவையெல்லாம் விஞ்ஞானிகள் மனித குலத்துக்கு அளித்த பரிசுகள்.
இதை தூக்கிச் சாப்பிடுகிறார்போல் சீன விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பு செய்தனர். ஒரு குழந்தை தாயிடமிருந்து பெறும் தாய்ப்பாலின் தன்மையோடு பால் தருகின்ற பசுக்களை உருவாக்கினார்கள். கோடிக்கணக்கான மக்களின் துயர் நீக்கிய சாய்பாபாவின் நுரையீரல்கள் மற்றும் சிறுநீரகங்களை சரிசெய்ய விஞ்ஞானம் உதவியது. மெய்ஞானத்தின் மகத்தான அடையாளமான சத்திய சாய்பாபா அவர்களுக்கு விஞ்ஞானம் தான் எத்தனை உபயோகமானது என்று உணர்த்தி இருக்கிறது. விஞ்ஞானத்தின் மரபணு மாற்றம் மனிதகுலத்தை மாற்றும் என ஓரு தரப்பும் இல்லை மனித குலத்திற்குப் பேரழிவாகும் என இன்னொரு தரப்பும் விவாதிக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் மரபியல் மாற்றம் செய்யாமல் நெரிகா என்ற புது அரிசியைக் கண்டுபிடித்தனர். இது கடுமையான சூழலுக்கு ஏற்றது. செயற்கை உரம் தேவையில்லை. குறந்த நீரில் அதிக விளைச்சல் கிடைக்கக் கூடிய இதை எல்லா நாடுகளும் முயற்சி செய்யலாமே. அளவுக்கு மீறி இயற்கை வதைக்கப்படுவதால் மனித சமுதாயம் சீரழிகிறது. காடழித்தல் மிருகவதை செய்தல் சுரங்கம் தோண்டுதல். போன்றவற்றால் பல நச்சுக்கிருமிகள் வெளியேறி மனித சமுதாயத்தை அச்சுறுத்துகிறது. 1485 இல் இங்கிலாந்தில் 20 000 பேர்களை பலி கொண்டது வியர்வை நோய். 1950 இல் அர்ஜன்டைனா நகர் பாம்பாஸ் பகுதியில் ஜினின் நச்சு தோன்றியது. 1994 இல் இந்தியாவில் ப்ளேக் நோய் பரவியது. 2001 ல் டெங்கு காய்ச்சல் பரவியது. 2019இல் கொரோனா ஆட்டிப் படைத்தது. இயற்கையை சீண்டியதால் வந்த விளைவுகள் இவை.
விண்ணும் மண்ணும் மரமும் செடியும் கொடியும் காற்றும் கடலும் யாவும் இயற்கையே. இயற்கை மனித சமுதாயத்தை நலமுடனும் வளமுடனும் வாழவைக்கும் ஆற்றல் உடையது. மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ முற்பட வேண்டும். இயற்கையின் இருப்பையும் இயல்பையும் பாதுகாப்பது சமுதாயக் கடமை.