நம்மை நாமே உயர்வாக எண்ணுவது மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படை. சுயமதிப்புக் குறையும்போது மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுதலை மனம் எதிர்பார்க்கும். நம்மைப் பற்றிய எண்ணங்களை உயர்வானதாக உள்ளம் கூறும்போது, அதற்குத் தேவையான செயல்களை உடல் செய்யும்போது தன்னம்பிக்கை தானாகவே வேரூன்றும். மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டுமென்றால் முதலில் நாம் நம்மை மதிக்கவேண்டும். உயர்ந்த சுயமதிப்பு என்பது கர்வம் கொள்வதல்ல. தற்பெருமை அல்ல. சுயமதிப்பு என்பது நம்மைப் பற்றி நாம் கொள்ளும் கருத்து. அது குறைந்தால் சோர்வு வரும். தன்னம்பிக்கையும் குறையும்.
முயற்சி செய்தால் நம் மதிப்பை நாமே அதிகரிக்க முடியும். சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் என்ன என்பதை சிந்தித்து, அதை நிவர்த்தி செய்யமுயல வேண்டும். உங்களைப் பற்றி நீங்களே மற்றவர்களிடம் எதிர் மறையாகப் பேசவேண்டாம். உங்கள் திறமைகளை உயர்த்தும் வகையில் உங்களுக்குள்ளே சிறு சிறு சவால்களை ஏற்படுத்தி அவற்றைச் சென்றடையுங்கள்.
ஒரு நாள் அரசர் ஒருவர் தன் மந்திரியுடன் நகர்வலம் சென்றார். மக்கள் எல்லோரும் அவரை அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள விரும்பினார். ஆனால் மக்கள் அவருடன் வந்திருந்த மந்திரியை மட்டும் பார்த்து வணக்கம் செய்வதையும் அரசைக் கண்டு கொள்ளாததையும் பார்த்து வருத்தம் அடைந்தார்.
அவர் மந்திரியிடம் "இந்த மக்கள் எல்லோரும் என்னைக் கண்டு கொள்ளாமல், உங்களுக்கு மட்டும் வணக்கம் செலுத்துகிறார்கள், அவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களா" எனக் கேட்டார்.
அதற்கு மந்திரி "எனக்கு அவர்கள் யாரையும் தெரியாது. அவர்களைப் பார்த்து நான் வணக்கம் செய்தேன். பதிலுக்கு அவர்களும் என்னை வணங்கினார்கள்" என்றார். யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும் என்பதை அரசர் நன்றாகவே புரிந்து கொண்டார்.
நீங்கள் உங்கள் சுயமதிப்பை உயர்த்த உங்கள் திறமைகள், பலங்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வையுங்கள். நாள்தோறும் சிறு சிறு செயல்கள் செய்வதன் மூலம் உங்கள் சுயமரியாதையும், சுய மதிப்பும் அதிகமாகும்.