கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் புதிதாக சேரப் போகும் வேலைக்கு ஜம் என்று டிரஸ் செய்துகொண்டு எம் பி ஏ படித்த வாலிபன் அந்தக் குறிப்பிட்ட அலுவலகத்திற்கு சென்றான். வாயிலில் இருந்த செக்யூரிட்டி விவரம் கேட்டுவிட்டு செக் செய்து உள்ளே செல்ல அனுமதித்தான்.
அவன் அந்தச் சிறிய கம்பெனியின் முதலாளியைக் காண சென்றான். அவரது கேபின் கதவை தட்டிவிட்டு, அனுமதி பெற்று உள்ளே சென்றான். அங்கு நடுத்தர வயது உடையவர், உட்கார்ந்து இருந்தார். இந்த வாலிபனை அமரச் செய்தார். அவனை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார்.
இவன் சிறிது குழம்பிவிட்டான். அவனுக்கு இன்டெர்வியூ எல்லாம் முடிந்து, வந்த அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்படி இன்று வேலையில் சேர, அதுவும் அசிஸ்டென்ட் மானேஜர் பதவிக்கு , வந்து இருந்தான். இந்த மனிதர் இன்டெர்வியூ செய்யாவிட்டாலும் இவர் இவனது பயோ டேட்டா பார்த்து இருப்பார், இவனது இன்டெர்வியூ பெர்பார்மன்ஸ் பற்றியெல்லாம் அறிந்து இருப்பார் என்று நம்பினான். அவர் கேட்டதற்காக , அவனைப் பற்றி கூறினான்.
அவர் அவனை கூர்ந்துக் கவனித்தப்படியே எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டார். காபி வந்தது. குடிக்கச் சொன்னார். அவரும் பருகினார். சிறிது நேரம் கழித்து, “இந்தக் கம்பெனியில் உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?” என்று வினவினார். இவனும் கூறினான். கூறிவிட்டு, "சார் ! எனக்கு உங்கள் கம்பெனியில் சேர்ந்து பணிபுரிய சந்தர்ப்பம் அளித்ததற்கு மிக்க நன்றி. நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கேன்...!" என்று புன்னகையுடன் முடித்து விட்டு, அவர் என்ன கூறப் போகிறார் என்று எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினான்.
அவர் அவனது பயோ டேட்டாவை அவனிடம் கொடுத்து கடைசி பாராவைப் படித்துக்காட்டச் சொன்னார். அவனுக்கு ஏன் என்று புரியாவிட்டாலும் படித்துக் காட்டினான். அதில் அவன் எந்த வேலை கொடுத்தாலும் ஆவலுடன் செய்வேன், உண்மையாக நடந்துக்கொள்வேன் என்று இருந்தது.
அவன் பயோடேட்டாவை பெற்றுக்கொண்டு அவர் கூறினார்,
"உங்களுடைய பணி ஆரம்பம் ஆகின்றது, இப்பொழுது முதல்…" என்றார். மகிழ்ச்சி, ஆர்வம் அதிகரித்த அவனுக்கு காத்திருந்தது ஷாக்..!
“உங்கள் முதல் பணி” என்று கூறிவிட்டு, கீழே குனிந்து ப்ரூம் ஸ்டிக்கியை எடுத்து அவன் கையில் கொடுத்து இந்த அறையைப் பெருக்குங்கள் என்றார். அவன் ஆடிப்போய் விட்டான்.
"சார்... ! என்ன இது. நான் ஒரு எம் பி ஏ. பட்டதாரி. அதன் அடிப்படையில்தான் எனக்கு இங்கு வேலை கொடுத்துள்ளீர்கள். என்னை அவமானப்படுத்த வேண்டாம்..!", என்றான்.
அவர் பொறுமையாகப் பதில் அளித்தார், "நான் அந்த புகழ் பெற்ற அயல்நாட்டு பல்கலைகழகத்தில் எம் பி ஏ படித்துவிட்டு, எம் எல் படித்தவன். என் தந்தை சேர்த்து வைத்து இருக்கும் சொத்து அடுத்த பல தலைமுறை களுக்கு போதும். இருந்தும் நான் வேலை செய்யும் என் அலுவலகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் குறிப்பாக இருப்பேன். என்னை பொறுத்தவரையில் எந்த வேலையும் இழிவானது இல்லை. வேலை செய்ய தெரிந்தால்தான், சரிவர வேலை பிறரிடமிருந்து வாங்க முடியும். குனிந்தால்தான் மேலே நிமிர்ந்து முன்னேற முடியும் . ஒருவேளை இந்தக் குறிப்பிட்ட வேலை செய்பவர் வர முடியாமல் போனால் அல்லது எமெர்ஜென்சி என்றால் நாமே எந்த வேலையை செய்யவும் தயங்கக் கூடாது, தடுமாறக் கூடாது", என்று கூறியவர் அவரே அந்த ப்ரூம் ஸ்டிக்கினால் கிடு கிடுவென்று குனிந்து நன்றாக பெருக்கிவிட்டு அமர்ந்தார்.
பிறகு கூறினார், "சொல்வது சுலபம். செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. தங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத்தான், தாங்கள் எழுதி கொடுத்திருந்த பயோ டேட்டாவின் குறிப்பிட்ட பகுதியைத் தங்களை விட்டே படிக்கச் சொன்னேன். இப்பொழுது உங்களுக்குப் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
"அதிர்ச்சி எப்படி வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எப்படி. எதிர் கொண்டு சமாளித்து வேலையை முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள தயங்கக் கூடாது, என்று கூறி விட்டு, அந்த வாபலிபனுக்கு என்ன வேலை என்பதை விளக்கினார். அந்த வாலிபனும் புரிந்துக்கொண்டு வேலையில் சேர்ந்து படிப்படியாக வாழ்க்கையில் முன்னுக்கு வரும் பாதையில் பயணிக்கத் தொடங்கினான்.
(உண்மை நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.)