Sigmund Freud பற்றி நான் ஒவ்வொருமுறை யோசிக்கும்போதும் ஒரு நோயாளியின் அருகே அமர்ந்துகொண்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்தான் ஞாபகத்திற்கு வருவார். திரைப்படங்களிலும், நிஜ உலகிலும் இத்தகைய காட்சியை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இவரது கூற்றுப்படி, நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் ஏதோ ஒரு வகையில் பாலியல் உணர்ச்சிகளே காரணமாக இருக்கிறது என்பதை இவர் நம்புகிறார்.
அதேபோல 'பிராய்டியன் ஸ்லிப்' என்று ஒன்றுள்ளது. அதாவது ஒருவர் தன்னையும் மீறி தன் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களை அல்லது ஆசைகளை ஒரு தருணத்தில் வெளிப்படுத்திவிடுவது. நம்முடைய ஆழ்மனதில் இருக்கும் விஷயங்கள், நிஜ உலகைப் பொருட்படுத்தாமல் இது நிகழ்கிறது. இதன் விளைவாகவே 'பிராய்டியன் ஸ்லிப்' ஏற்படுகிறது. இத்தகைய நிகழ்வு பலமுறை பிறருக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாகவே இவர் கூறுகிறார்.
உதாரணத்திற்கு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்களையே அறியாமல் தன்னிச்சையாக உங்கள் முன்னாள் காதலன்/காதலியின் பெயரைக் கூறுவது 'பிராய்டியன் ஸ்லிப்' எனப்படும். இது அந்த முன்னாள் நபர் மீதான ஆழ்மனதில் ஒளிந்திருக்கும் உண்மையான உணர்வுகளின் வெளிப்பாடாகும்.
சிக்மண்ட் பிராய்ட் ஒரு ஆஸ்திரேலிய நரம்பியல் நிபுணர் மற்றும் மனோ தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர். ஒரு மனநோயாளி மற்றும் ஒரு மனோதத்துவ ஆய்வாளர் இடையே, உரையாடல் மூலமாகவே மனநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒரு மருத்துவ முறையை கண்டுபிடித்தது இவர்தான். இவரது பணி உளவியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி மனநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான நவீன கால அணுகுமுறைகளை பெரிதும் பாதித்தது.
பிராய்ட் மனித மனதின் சிக்கலான தன்மை பற்றி அதிகம் கூறியுள்ளார்.
"மனித மனம் ஒரு பனிப்பாறை போன்றது. அது தண்ணீருக்கு மேலே ஏழில் ஒரு பங்கை மட்டுமே வெளிப்படுத்தி மிதக்கிறது" என அவர் கூறுகிறார்.
இவரின் கூற்றுப்படி ஏறக்குறைய எல்லா மக்களுக்குமே மனப்பிரச்சனைகள் அல்லது நரம்பியல் நோய்கள் உள்ளன. அவை சப்கான்சியஸ் மைண்ட் மற்றும் நிஜ உலகிற்கு இடையே தீர்க்கப்படாத எண்ணப் போராட்டங்களால் ஏற்படுகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு சாதாரண மனிதனும் ஏதோ ஒரு வகையான கவலையை கையாளுகிறார்கள் என பிராய்டு கூறுகிறார்.
இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்றால், நாம் யாருமே சரியானவர்கள் அல்ல. நம் அனைவருக்கும் பிரச்சனைகள் உள்ளது. அதுதான் நம்மை மனிதர்கள் ஆக்குகிறது. நம் மனித இனமே புரிந்துகொள்ள முடியாத சிக்கலான மனநிலையைக் கொண்ட உயிரினங்கள் எனலாம். இதை ஒரு பலவீனம் என எடுத்துக்கொள்ளாமல், நமது தடைகளைப் புரிந்துகொண்டு முழு திறனையும் திறக்கும் திறவுகோலாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
So, இந்த உலகத்துல பிரச்சனை இல்லாத மனுஷனே இல்ல. பிரச்சனை இல்லாதவன் மனுஷனே இல்ல.
இதைத்தான் Sigmund Freud சுற்றி வளைத்துக் கூறுகிறார்.