
அலுவலகத்திலோ வீட்டிலோ அவசியம் செய்ய வேண்டிய வேலைகள் ஏகத்திற்கும் இருக்க, ‘அப்புறம் பார்த்துக் கலாம்’ என்று வேலைகளைத் தள்ளிப் போடும் குணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. ஆங்கிலத்தில் இதற்கு ‘procrastination’ என்று பெயர்.
தள்ளிப்போடுவதற்கான காரணங்கள் எவை?
1. செய்யப் போகும் வேலை கடினமாக இருத்தல்,
2. இதை எப்படி செய்து முடிக்கப் போகிறோமோ என்ற மலைப்பு
3. கடைசி நிமிடத்தில் செய்யலாம் என்ற அலட்சியம்
4. நேரம் இருந்தும், செய்வதற்கு சோம்பேறித்தனம்
5. இது என் சக்திக்கு மீறியது. என்னால் செய்யமுடியாது என்ற அவநம்பிக்கை
இந்த பழக்கத்தை மாற்ற சில யுக்திகள் (Simple ways to beat the challenge);
1. வீடோ, அலுவலகமோ எதுவாயினும் இன்று செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடுங்கள். எந்த வேலையை முதலில் செய்யவேண்டும், அடுத்து என்ன என்பவற்றை தெளிவாக வரிசைப்படுத்துங்கள்.
2. அலுவலகத்தில் உங்கள் மேசை மேல் வைத்திருக்கும் தேவையற்ற காகிதங்கள், கோப்புகள், புத்தகங்கள் எல்லாவற்றையும் எடுத்து வேறிடத்தில் வைத்து விடுங்கள். பட்டியலில் முதலில் உள்ள வேலைக்குத் தேவையான பொருட்கள் மட்டும் மேசை மேல் இருக்கட்டும். வீட்டில் சமையல் செய்யப் போகிறீர்கள் என்றால் மேடை மீது அப்போதைய சமையலுக்கான பொருட்களும் உபகரணங்களும் மட்டும் இருக்கட்டும்.
3. செய்யும் வேலை கடினமாக இருக்கும் பட்சத்தில், பிறரிடம் யோசனை கேட்டு தெளிவுபெறுங்கள்.
4. உங்களுடைய வேலைகளை நீங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்காமல் அதை பிறரிடம் பிரித்துக் கொடுக்க வேண்டும். அலுவலகம் எனில் சக பணியாளர் அல்லது உங்களுக்கு கீழ் பணிபுரிகிறவர், வீடென்றால் பிள்ளைகள், வாழ்க்கைத் துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவ்வப்போது அவர் நன்றாக வேலை செய்கிறாரா என்று மேற்பார்வை பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை எனில் உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். ‘’நான் திறமைசாலி, இந்த வேலையை மிக சுலபமாக செய்து விடுவேன்’’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
6. இந்த வேலையை செய்து முடித்தால் ஏற்படப் போகும் விளைவுகளை எண்ணிப் பாருங்கள். மேலதிகாரி பாராட்டுவார், வேலை முடிந்த மனநிம்மதியும் திருப்தியும் கிடைக்கும்.