நமது வாழ்வில் சிலவற்றில் நம்மை அறியாமலே நம்பிக்கை வைக்கிறோம். நமக்கு நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. இருப்பினும் அதைப்பற்றி நினைக்காமல் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்கிறோம். நல்ல நேரங்களில் கடவுளை நினைக்கிறோமோ இல்லையோ ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நிச்சயம் கடவுளை நினைப்போம். ‘அதை கடவுள் பார்த்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம்.
எந்த சூழ்நிலையாயினும் நாம் பார்க்கும் மனிதர்களை விட பார்க்காத கடவுளை நம்புகிறோம். ஏன் தெரியுமா? மனிதன் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை காயப்படுத்தும். ஆனால் கடவுள் மேல் வைக்கும் நம்பிக்கை எப்போதும் ஒரு நேர்மறை ஆற்றலை மட்டுமே தருகிறது.
அந்தவகையில் நம்பிக்கைப் பற்றிய ஆறு எடுத்துக்காட்டுகள்:
1. ஒரு கிராமத்தில் அனைவரும் மழைப் பெய்ய வேண்டும் என்று கடவுளை தரிசிக்க சென்றார்கள். அந்த கிராமத்தில் இருந்த ஒரு சிறுவன் மட்டும் குடை எடுத்துக்கொண்டு சென்றானாம். அதற்கு காரணம் இறை நம்பிக்கை.
2. உங்கள் குழந்தையை மேலே தூக்கிப் போட்டு விளையாடினால் அக்குழந்தை சிரிக்கும். ஏனெனில் நீங்கள் அதனை எப்படியும் பிடித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை. அதற்கு பெயர் உறவின் மேல் உள்ள நம்பிக்கை.
3. அடுத்த நாள் காலையில் உயிரோடு இருப்போமா என்று தெரியாமல் தினமும் இரவு அலாரம் வைத்துக்கொண்டு தூங்குகிறோம். அதற்கு பெயர் காலத்தில் மேல் உள்ள நம்பிக்கை.
4. எதிர்காலத்தில் நாம் இந்தத் துறையில் வெற்றிப் பெறுவோமா என்று தெரியாமல் முயற்சிகளை மேற்கொள்கிறோம். அது நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை.
5. எப்போது வேண்டுமென்றாலும் உலகம் அழியலாம். ஆனால் அதைப் பறறி நினைக்காமல் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளை சரியாக செய்கிறோம். இயற்கை மேல் உள்ள நம்பிக்கை அது.
6. ஒரு வயதானவர் நான் இளைஞன் என்று ஆங்கிலத்தில் ஒரு டீ ஷர்ட் அணிகிறார். அதற்கு காரணம் அவர் ஆரோக்கியத்தின் மேல் உள்ள நம்பிக்கை.
இந்த ஆறு நம்பிக்கைகளில் ஒன்று கூட மற்ற மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கைப் பற்றி இல்லை. ஏனெனில் நம்மீதும், நமது குடும்பத்தின் மீதும், இயற்கை மற்றும் காலத்தின் மீதும் வைக்கும் நம்பிக்கையே பலம் வாய்ந்தது.
கடவுள் மீது உள்ள நம்பிக்கை நமது மன அமைதியை காக்கும் நம்பிக்கை. ஆனால் மற்ற மனிதர்கள் மீது வைக்கும் நம்பிக்கை மட்டுமே நஞ்சை அமிர்தம் என்று நம்புவதற்கு சமமானது.