
வாழ்க்கையை அவரவர் எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அவரவர் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது. மரணம் எப்படி வேண்டுமானாலும் வந்து சேரலாம். இயற்கையாக நீங்கள் சாகலாம் அல்லது நீங்கள் செய்வதை பொறுக்க முடியாமல் பக்கத்து வீட்டுக்காரர் உங்களை சுட்டுத் தள்ளலாம். தவறான பழக்கங்களுக்கு அடிமையாகாமல், ஆரோக்கியமாக உடலைப் பராமரித்தால் மட்டும் மரணம் நேராதா? நேரும். தெருவில் நிற்கும்போது ஒரு மின்னல் தாக்கி கூட இறக்கலாம்.
ஒரு சிறுவன் தவறான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி வந்தான். இதைக் கவனித்த ஒரு பாதிரியார் அவனை கூப்பிட்டு "கடவுள் உன்னை கவனித்துக் கொண்டு இருக்கிறார். கெட்ட வார்த்தைகள் கூறுபவரை அவர் தண்டிப்பான்" என்றார்.
சிறுவன் அவரை பொருட்படுத்தாமல் அவரிடமே கெட்ட வார்த்தைகளை கூறினான். பாதிரியார் கோபமாகி மின்னல் உன்னைத் தாக்கட்டும் என சாபமிட என்ன அதிசயம். வானத்தில் மின்னல் பாய்ந்தது அது சிறுவனை விட்டு விட்டு பாதிரியாரை தாக்கியது. ஆகாசத்திலிருந்து ஒரு குரல் "அடடா குறிதவறிவிட்டது என்று கூறியது.’’ நெருக்கமானவர்களுக்கு மரணம் நேருகையில் கடவுள் குறி தவறிவிட்டதாகவே மனித மனதிற்கு தோன்றுகிறது.
உங்களுக்கு பிரம்மாண்டமாக தோன்றுகிறதே சூரியன். அதற்கு கூட வாழ்நாள குறிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு 100 வருடங்கள். சூரியனுக்கு சில லட்சம் வருடங்கள். அவ்வளவுதான். சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்களோடு ஒப்பிட்டால் நீங்கள் சிறிய துரும்பு. அப்புறம் எதற்காக உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?.
ஒன்பதாம் லூயி மன்னன் ராணியுடனும் மற்றும் இளவரசர்கள் உடனும் ஃப்ரான்ஸ் பிரயாணம் புறப்பட்டார். கப்பல் நடுக்கடலில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. கப்பலில் ஒரே படகுதான் இருந்தது. கப்பல் செலுத்திய தலைவன் "மன்னா நீங்கள் இந்தப் படகில் குடும்பத்தினருடன் தப்பிச் செல்லுங்கள்" என்றான். ஆனால் மன்னரோ "அது எப்படி சரியாகும். இந்தப் படகில் உள்ள அத்தனை உயிர்களும் தப்பிக்க வேண்டும். என் உயிர் முக்கியமானது என்று கடவுள் நினைத்தால் அத்தனை உயிர்களையும் கடவுள் காப்பாற்றட்டும்" என்றாராம்.
மன்னன் லூயியைப் போன்று உங்கள் உயிரை மற்ற உயிர்களுக்குச் சமமாக நீங்கள் நினைத்துவிட்டால் இறப்பை பற்றி கவலைப் படமாட்டீர்கள். போய்ச் சேரமாட்டோமோ என்று ஏங்குவதால் உயிர் போய்விடாது. 96 வயதிலும் ஒரு பாட்டி உயிரோடு இருக்கிறார் என்றால் ஏதோ ஒரு காரணத்தால் உயிரைப் பிடித்துக்கொள்ளும் தகுதியை அந்த உடல் இயந்திரம் இழக்கும்போது அவளுக்கான மரணம் நேரும்.
மரணம் பற்றி நீங்கள் ஓரளவு நெருக்கமாக அறிவதற்கு ஒரே வாய்ப்பு உங்கள் உறக்கம்தான். உறக்கம் என்பது ஒரு தாற்காலிக மரணம். ஒன்று செய்யுங்கள் இன்று உறங்கப் போகும்போது விழிப்பிலிருந்து தூக்கத்திற்கு நழுவும் அந்த தருணத்தை முழு விழிப்புணர்வுடன் கவனியுங்கள். அப்படி முழு விழிப்புணர்வுடன் அந்த தருணத்தை கவனிக்க முடிந்தால் மிக சக்திவாய்ந்த ஒரு அனுபவத்தைப் பெறுவீர்கள்.
மனம் முழுவதும் அன்பை நிரப்பியபடி தூங்கப்போனால் அந்த உணர்வே விழிப்புவரை நிறைந்து இருக்கும். உறங்கப்போகும் அந்தத் தருணங்களில், தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி, அவற்றை மிகத் தரமுள்ள கணங்களாக மாற்றப் பாருங்கள்.