வாயுள்ள பிள்ளை எங்கு சென்றாலும் எக்காலத்திலும் பிழைத்துக் கொள்ளும் என்பார்கள். இதேபோல அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும் என்கிற பழமொழியும் நம்மிடம் உண்டு.
சில குழந்தைகள் மிகச்சிறப்பாக, தெளிவாகப் பேசுவார்கள். அது போன்ற குழந்தைகளுக்கு சிறிது பயிற்சி கொடுத்தால் போதும், நல்ல பேச்சாளர்களாக வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
படிப்பு, வேலை, குடும்பம் என்பதற்கு அப்பாற்பட்டு, பேச்சுத் திறமை என்பது சிறந்த மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு திறமை என்பது நிரூபணமான உண்மை! இந்தத் திறமைக்கு இந்தக் காலகட்டத்தில் மிகவும் மதிப்பு உள்ளது. இதை வைத்து நிறைய சம்பாதிக்கவும் செய்கி றார்கள்.
ஆங்கிலேயர் ஆண்டபோது, அவர்களது மொழியை, அவர்களை விட சிறப்பாகப் பேசியவருக்கு 'சில்வர் டங்' (Born with Silver Tongue) என்று அடைமொழி கொடுத்து கௌரவித்தார்கள். அப்படிப்பட்ட அடைமொழியைப் பெற்றவர் வலங்கைமானைச் சேர்ந்த சீனிவாசன். இவர் 'சில்வர் டங் சீனிவாசன்' என்று அழைக்கப்பட்டார்.
தமிழக அரசியலைத் தங்களது பேச்சால் மாற்றியமைத்த தலைவர்களை நாம் அறிவோம். இன்று பட்டிமன்றங்கள், சொல் அரங்கங்களில் பேசி மகிழ்விக்கும் பேச்சாளர் களையும் பார்க்கின்றோம். தமது ஆன்மிகச் சொற்பொழிவால் தமிழக மக்களை மகிழ்வித்த சொற்பொழி வாளர்களும் நிறையப் பேர் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
இப்படி அரசியல், ஆன்மிகம், பொழுது போக்கு, இலக்கியம், தன்னம்பிக்கை என பல்வேறு தளங்களில் தங்களது நாவன்மையால் சிறந்து விளங்கும் பேச்சாளர் என்பது தமிழகத்தின் மதிப்பிற்குரிய கலையாகவே மாறி வருகிறது.
ஒரு நல்ல பேச்சாளராக விரும்புபவர். தங்களது ஆர்வம், கிடைக்கும் வாய்ப்பிற்கு ஏற்ப தங்களுக்கென ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் நல்ல புலமைபெற வேண்டியது அடிப்படையாகும்.
எனினும் பேச்சுத்திறமை என்பது நேற்று ஆரம்பித்து, இன்று பழகி, நாளை கைவந்து வெற்றி பெறுவது அல்ல. வழக்கமான படிப்பு, தேர்வு, வேலை என்பனவற்றிற்கு அப்பால், சிறு வயதிலிருந்தே இந்தப் பேச்சாற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். குறைந்தது பள்ளிக் கல்வியை முடித்த பிறகாவது இதில் தேர்ச்சி பெற முயற்சிக்கத் துவங்க வேண்டும்.
மிகச் சிறந்த பேச்சாளர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் உலகளவிலும் வரவேற்பு உள்ளது. வளைகுடா நாடுகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், கிழக்காசிய நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறந்த சொற்பொழிவாளர்களை வரவழைத்து தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்து கேட்டு மகிழ்கின்றனர்.
இன்று துவக்கும் மேடைப் பேச்சுப் பயிற்சி, வேலை, தொழில், வருமானம் என்பனவற்றிற்கு அப்பால் நல்ல மரியாதையையும் மதிப்பையும் மட்டுமல்லாது பொருளையும் கொடுப்பதாக உள்ளது.
எனவே உங்களிடம் பேச்சுத் திறமை இருந்தால் அதை வளர்த்து கொள்ளுங்கள்.