பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கற்றுக்கொள்வது நல்லொழுக்கமா? ரௌடியிஸமா?

Students
Students
Published on

பண்டைக்காலத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் நிலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தெய்வத்திற்கு சமமாக கருதப்பட்டார்கள். பெற்றோர்களை முதல் நிலை ஆசிரியர்களாகவும், ஆசிரியர்களை இரண்டாம் நிலை பெற்றவர்களாகவும் கருதுவது நமது சமூகத்தின் மரபாகும். இந்நிலையில் மாணவர்களின் சமீபகால ஒழுக்கக்கேடுகள் பெற்றவர்களுக்கும், பள்ளிகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு மாணவனுக்கு படிப்புடன், ஒழுக்கமும் மிகவும் முக்கியம். ஒன்று இருந்து மற்றொன்று இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கையின் நிலை பரிதாபகரமானதாக மாறிவிடும். ஒழுக்கமும், அறிவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இரண்டு பக்கங்களும் ஒழுங்காக இருந்தால்தான், அந்த நாணயத்தின் மதிப்பு ஏற்கப்படும். இல்லை என்றால் மறுக்கப்படும்.

இந்த நிலையில் தற்காலங்களில் ஊடகங்களில் நாம் காணும் மாணவர் சார்ந்த நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவையாக இருக்கின்றன. பார்வை குறைபாடு உள்ள ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியரை மிகவும் அநாகரிகமான முறையில் கேலி செய்து, அதை ஒளிப்பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவு செய்தது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். அந்த மாணவர்கள் பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு உள்ளார்கள் என்பது ஒரு ஆறுதலான தகவல் என்றாலும் இப்படிப்பட்ட செயலை செய்ய அந்த மாணவர்களுக்கு எப்படி துணிவு வந்தது என்பது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

மேலும் ஒரு பள்ளியில் ஒழுக்கத்தையும், அறிவையும், ஒற்றுமையையும் கற்றுக்கொள்ள வேண்டிய மாணவர்கள், கஞ்சா பயன்படுத்துதல், மது குடித்தும், புகை பிடித்தும் தெருவில் ரவுடிகள் போன்று சண்டை போட்டுக் கொள்வதும் மாணவ சமூகத்தின் மோசமான பிரதிபலிப்புகளாக காணப்படுகின்றன. இதில் படிக்கும் பெண்களும் ஈடுபடுவது பெற்றொர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருத்த வேதனையை அளிக்கின்றன. கரோனா காலத்தில் பள்ளிகள் நீண்டநாள் மூடப்பட்டதால் ஒழுக்கம் என்றால் என்ன என்பதையே இவர்கள் மறந்து விட்டார்களோ?

இதேபோன்று தான் பேருந்து தினத்தை கொண்டாடும் கல்லூரி மாணவர்கள் அந்த நாள் முழுவதும் சென்னை மாநகரத்தில் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை எல்லாம் புறந்தள்ளி பயணம் செய்து போக்குவரத்திற்கும், சட்ட ஒழுங்கிற்கும் சிக்கல்களை ஏற்படுத்துவது ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாகி வருகிறது. இவை யாவும் மாணவர்களின் ஒழுக்க சீர்கேட்டின் அடையாளமே ஆகும்.

சிவகங்கை அரசு கலைக் கல்லூரி ஒன்றில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டு கல்லூரி நிர்வாகம் சமரசம் பேச வந்தபோது மோதல் ஏற்பட்டு, காயமடைந்த மாணவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் தான் எதிர்கால தலைவர்கள். பெற்றோர்களின் நம்பிக்கைகள். சமூகத்தின் தூண்கள். பொறுப்பின்றி நடந்து கொள்ளும் இவர்கள் கையில் எதிர்கால இந்தியா சிக்கினால் நம் நாட்டுக்கு என்ன ஆகும் என்ற பயம் பொறுப்புள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட மாணவர்களுடைய மாற்றுச் சான்றிதழில் ஒழுக்கமின்மை என்று சிவப்பு மையில் எழுதப்பட்டால், அவர்கள் எதிர்காலம் ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதை ஒவ்வொரு மாணவனும் உணர வேண்டிய காலம் இது. பதின்ம பருவத்தில் இயல்பாக வரும் ஆசைகளுக்கு மாணவர்கள் ஒழுங்காக படிப்பதன் மூலமும், படிப்பு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதன் மூலமும் தன்னுடைய நடத்தை கோளாறுகளை மடைமாற்றம் செய்து கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
தவறுகள் கற்றுத்தரும் பாடங்களை அறிந்தால் வெற்றிதான்!
Students

மேலும் மாணவன் என்பவன் மாண்பு உடையவன். பல பெற்றோர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாடி தம் வாயையும் வயிற்றையும் கட்டி தம்முடைய குழந்தைகளை படிக்க அனுப்புகிறார்கள். மாணவர்கள் தம் குடும்பத்தின் நிதி முன்னேற்றத்திலும் பங்கேற்றுக்கொள்வதை முக்கிய கடமையாக கருத வேண்டிய காலம் இது.

இந்த சிக்கலான தொழில்நுட்பக் காலத்தில் பெற்றோர்களுடைய மற்றும் ஆசிரியர்களுடைய மனம் காயப்படாமல் நடந்துகொள்வதை இன்று ஒவ்வொரு மாணவனும் தன்னுடைய தனிமனித வாழ்க்கை கொள்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய வாழ்க்கை இருண்ட, வறண்ட பாலைவனமாக மாறிவிடும். எங்கும் வேலை கிடைக்காது. குற்றவாளிகளாக மாறி, வருவாய் ஈட்டவேண்டிய காலத்தை சிறையில்தான் கழிக்க வேண்டியிருக்கும். இந்த எண்ணத்தை மனதில் கொண்டு இன்று முதல் ஒவ்வொருமாணவனும் தம் நடத்தைக் கோலங்களை நல்ல முறையில் மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்கால இந்தியா அப்துல் கலாம் எதிர்பார்த்ததுபோல் ஒரு வல்லரசாக மாறும். இல்லையென்றால் வன்முறை கொண்ட தீவிரவாத நாடாக மாறும்.

கீழ்படிதல், அன்பு பாராட்டி கூடி வாழ்தல், உதவி செய்தல், நட்பு பாராட்டுதல் போன்ற நல்ல குணங்களை பள்ளியில் உள்ள செஞ்சிலுவை சங்கம், சாரணர் படை போன்ற இயக்கங்கள் மூலம் மாணவர்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒரு பள்ளி நிர்வாகம் திறம்பட செயல்பட பாரபட்சமற்ற கண்காணிப்பு, கல்வி அதிகாரிகளின் ஆண்டாய்வு, திடீரென்று பள்ளியை பார்வையிடுதல் போன்றவை மிகவும் முக்கியம். பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும், பிற ஆசிரியர்களுக்கும் அவர்கள் மாணவர் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகளில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை தகுந்த அரசாணைகள் மூலம் அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த சிக்கலான நேரத்தில் நாம் யாவரும் ஒன்று சேர்வோம். மாணவர்களுக்கு நல்வழிகாட்டுவோம். அப்போதுதானே எதிர் கால இந்தியா வளம் பெறும்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com