நம்பிக்கையின்மை வெற்றிக்கு வழி வகுக்காது. முயற்சி செய்வதற்கான அச்சத்தையும் , தோல்வி குறித்த எண்ணத்தையுமே தன்னம்பிக்கையற்றவர்கள் எல்லா செயல்களிலும் காண்கின்றனர். தான் செய்த செயல்களுக்கும் பொறுப்பேற்க அவர் தயங்குகிறார். குறிக்கோள் உயர்வாக இல்லாமல் இருப்பதற்கும், சாத்தியமானவைகளைக் கூட செய்யத் தவறுவதற்கும் தன்னம்பிக்கையின்மையே காரணமாகிறது.
தன்னம்பிக்கை குன்றும்போது சுயமாக முடிவுகள் எடுப்பதில் தொடர்ந்து சந்தேகங்கள் ஏற்படும். மற்றவர்கள் மீது ஒட்டுண்ணியாகவே சவாரி செய்ய மனம் ஆணையிடும். மற்றவர்களின் ஒப்புதலுக்காகவே காத்திருப்போம். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாகத் தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினைச் சுவைக்க முடியாது. வாழ்க்கையில் தன்னம்பிக்கை இல்லாமல் முன்னேற்றத்தினை பெற முடியாது.
உயர்ந்த தன்னம்பிக்கை என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. நம் வலிமை மீது நாம் நபிக்கை கொள்வதால் வெற்றி நம் மிக அருகாமையிலேயே வந்து விடுகிறது. புத்தர் தம் சீடர்களைப் பல் வேறு ஊர்களுக்கு உபதேசம் பண்ணுவதற்காக அனுப்பி வைத்தார். காஷ்யபர் என்ற சீடனை மட்டும் எங்கு அனுப்பப் போகிறார் என்று புத்தர் கூறவில்லை.ஆவலுடன் அவர் நான் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார்.
புத்தர் நீயே தேர்வு செய் என்றார். காஷ்யபர் தான் ஒரு குறிப்பிட்ட கிராமம் செல்ல விரும்புவதாகத் கூறினார். உடனே புத்தர் "அந்தக் கிராமத்தினர் மிகவும் முரட்டு குணம் உடையவர்கள். பக்தியோ,தி யான உணர்வோ அவர்களிடம் துளியும் இல்லை. இப்படிப்பட்ட இடத்திற்கா போக விரும்புகிறாய்?" என் கேட்டார்.
சரி உன்னிடம் 3 கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியாக பதில் கூறினால் அங்கு செல்லலாம் என்றார்.
அங்கே நீ செல்லும்போது மக்கள் வரவேற்பதற்கு மாறாக அவமானப் படுத்தினால் என்ன செய்வாய்" என்றார்.
அதற்கு காஷ்யபர் "அவர்கள் என்னை அடிக்கவில்லையே, அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே" என்று நன்றி சொல்வேன் என்றார்.
"ஒருவேளை உன்னை அடித்து விட்டால் நீ என்ன செய்வாய்" என்று இரண்டாவது கேள்வி கேட்டார்.
அதற்கு காஷ்யப்" என்னைக் கொல்லாமல் அடிப்பதோடு நிறுத்தி விட்டார்களே என மகிழ்ச்சி கொள்வேன்" என்றார்.
கடைசியாக "உன்னைக் கொன்றுவிட்டால்" என புத்தர் கேட்க அவர், "நிலையான மகிழ்ச்சியடைவேன். வாழ்க்கையிலிருந்து சுதந்திரம் தந்து விட்டார்கள். இனி கவலைப்பட அவசியமில்லை" என்று பதில் கூறினார்.
உடனே புத்தர் அவரை "நீ எந்த கார்யமும் செய்ய தகுதி படைத்தவன் சென்று வா "என ஆசீர்வதித்து அனுப்பினார்.
எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக அணுகக் கற்றுக்கொண்டால் எல்லா சூழ்நிலைகளும் மகிழ்ச்சியாகவே முடியும். கெட்ட நிகழ்வுகள் இவர்களை அதிகம் பாதிக்காது. எல்லா நிலையிலும் அவர்கள் வெற்றியையே காண்பர்.