'வொர்க் அவுட்' இருந்தால் வெற்றி நிச்சயம்!

motivation Image
motivation Imagepixabay.com

முதல் தடவை மேடை ஏறுகிறார் அந்த நபர். மைக்கைப் பிடித்தவுடன் கைகள் உதறுகிறது. கூட்டத்தைப் பார்த்தவுடன் கால்கள் நடுங்குகிறது. வணக்கம்  சொன்னவர் மயங்கி சாய்கிறார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆசவாசப்படுத்தி மயக்கம் தெளிவித்து "என்ன விஷயம்?" என்று கேட்டால் "மேடைக்கு நான் புதிது சரியாக பயிற்சி இன்றி வந்ததுதான் இந்த மயக்கத்திற்கு காரணம் " என்று வெட்கத்துடன் கூறினார்.

பிறிதொரு நாள் அதே மேடையில் அன்று மயக்கம் போட்டு விழுந்த நபர் எவ்வித அச்சமும் இன்றி தான் சொல்ல வந்த கருத்துக்களை தெள்ளத் தெளிவாக உறுதியான குரலில் பேசி பலத்த கைதட்டல் வாங்கினார். மயக்கம் போட்டு விழுந்த நபரா இவர் என்ற ஆச்சரியத்துடன் அனைவரும் பார்த்தனர். காரணம் வேறு ஒன்றும் இல்லை அவர் செய்த ஒர்க் அவுட்தான்.

எந்த ஒரு செயலுக்கும் ஒர்க் அவுட் எனப்படும் பயிற்சி இருந்தால் மட்டுமே அந்த செயல் வெற்றி பெறும். "சித்திரமும்  கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம்" என்று சொல்லக் கேட்டிருப்போம். முறையான இடைவிடாத பயிற்சி இருந்தால் நாளடைவில் அதுவே பழக்கமாகி நம் மூளையில் அழுந்தப் பதியவைத்து தன்னிச்சையாக வெற்றிக்கு உதவுகிறது.

முயற்சிகளை விதைத்தவுடன் வெற்றிகள் முளைப்பதில்லை. பயிற்சி எனும் நீரூற்றி காத்திருந்தால் காலம் கனியும் போது வெற்றி மரமாக வளர்ந்து உங்களுக்கு சாமரம் வீசி சிம்மாசனத்தில் அமர வைக்கும்.

உலகின் முதல் பெண்மணி எனப் பெருமை கொண்ட எலினோர் ரூஸ்வெல்ட் சொன்ன புகழ்பெற்ற மொழி இது “உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்வாக உணர முடியாது”.  ஆம். வெற்றியும் அப்படித்தான். நமது சம்மதம் இருந்தால்தான் உயரத்தில் கொண்டு செல்லும். கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம். கனவு நிஜமாக மதிப்பு மிக்க வொர்க் அவுட் இருந்தால் தான் வெற்றி நம் வசமாகும்.

நமது வெற்றியும் தோல்வியும் தெளிவான வொர்க் அவுட்டின்  அஸ்திவாரத்திலேயே அமைகிறது.
வொர்க் அவுட்டிற்கும் தன்னம்பிக்கைக்கும் தொடர்பு உண்டு. ஒருவருக்கு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற் கான இலக்குகளை நிர்ணயிக்க தன்னம்பிக்கை உதவுகிறது. ஆனால் தன்னம்பிக்கை இருந்தாலும் சுயசந்தேகத்தைத் ஏற்படுத்தும் விதமாக சூழல்கள் அமைவதுண்டு. சுயசந்தேகமானது நம்மிடம் நேர்மறை உணர்வைக் குறைத்து சவால்களை எதிர்கொள்ளும் வலிமையை வளரவிடாமல் தடுக்கிறது. ஆனால் தீவிர பயிற்சியானது அந்த சூழல்களில் இருந்து மீண்டு வர வைத்து நேர்மறை எண்ணங்கள் வளர உதவுகிறது.

விளையாட்டு வீரர்கள் தங்கள் இலக்கைத் தொட்டு வெற்றிக் கோப்பைகளை முத்தமிட  தினம் விடியற்காலை எழுந்து மைதானத்தில் வொர்க் அவுட் செய்வதைப் பார்த்திருப்போம். அவர்கள் விளையாட்டையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர்கள். மற்றவர்கள் வாழ்க்கை எனும் விளையாட்டில் வெற்றி பெறத் துடிப்பவர்கள்  அவ்வளவே. இருவருக்குமே பொதுவானது தான்  வொர்க் அவுட்.

இதையும் படியுங்கள்:
குளிர்கால சுவாசக் கோளாறுகளில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்!
motivation Image

பரீட்சைக்குப் படிக்கும் இரு மாணவர்களில் ஒருவர் கவனம் முழுவதும் புத்தகத்தின் மீது. மற்றொருவர்  கவனமோ அங்கு திறந்திருக்கும் ஜன்னல் வழியே தெரியும் காட்சிகள் மீது. அரைகுறையான வொர்க் அவுட் அந்த மாணவருக்கு பின்னடவைத் தந்தது. முன்னவரின் முழுமையான பயிற்சி அவரை முன்னணியில்  நிறுத்தியது.

ஆகவே, மனம் தளராமல் வலை பின்னும் சிலந்திகளைப் போல் முறையான வொர்க் அவுட் செய்து சக்சஸ் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com