
நீங்கள் சூப்பர்மேனாக விரும்புகிறீர்களா? எப்போதுமே ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பது அல்லது அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது என்பது மன அழுத்தத்திற்கு காரணமாக அமையும் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆனால் ஒரு 'சூப்பர் மேன்' அல்லது 'சூப்பர் வுமன்' என்ற தகுதியில் இருப்பவர்கள் இதையே விரும்புகிறார்கள். எப்பொழுதுமே தங்களை ஒரு எல்லைக்கு கொண்டு சென்று நிறுத்திக்கொண்டு யாராலும் பெறமுடியாத ஒரு அபரிமிதமான வெற்றியைகாண முயற்சிப்பது அவர்களின் குறிக்கோளாகவே இருக்கிறது. ஆனால் இதனால் அவர்கள் பெறப்போவது என்ன?
சில நேரங்களில் அமைதியின்மை மற்றவர்களுடன் இணைந்து இயங்க இயங்க முடியாமல் தவிப்பது, சின்ன சின்ன மகிழ்ச்சிகளையும் இழப்பது, போன்றவைகளை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த சூப்பர்மேன் அல்லது விமன் ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை கூட்டத்திலும் எளிதாக இனம் காணலாம்.
எப்போதும் எந்த சூழலிலும் ஒவ்வொருவரும் அவர்களை நேசிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கான கவனஈர்ப்பு செயல்களில் ஈடுபடுவர். மற்றவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளாமல் தன் கருத்தை வலியுறுத்திவார்கள்.
சுற்றி இருக்கும் நண்பர்கள் இடையே தான் மட்டுமே மிக அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்களைவிட பழகுவதில் வல்லமை படைத்த ஒருவரை காணும்போது தன்னைப் பற்றிய கீழான மதிப்பு தோன்றும். அவருக்கு தெரியாத ஒரு உண்மை பிறருக்கு தெரிந்திருக்குமேயானால் அதைப் பொறுக்காமல் தங்களையே நொந்து கொள்வர்.
அவர்கள் செயல்படும் காரியங்களில் எல்லாம் ஒரு சாதனையை ஏற்படுத்தி காண்பிக்கவில்லை எனில் அவர்களால் முழு திருப்தி அடைய முடியாது இப்படி எல்லாவற்றிலும் தாங்களே முதன்மையானவராக இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான செயல்களில் எந்நேரமும் ஈடுபட்டு சிந்தனையை அதற்கு செலவழிப்பவர்களே சூப்பர்மேன் ஆக சொல்லப் படுகிறார்கள்.
ஆனால் முழுமையான வெற்றியை அவர்கள் பெறுகிறார்கள் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
உதாரணமாக ஒரு விஷயத்தை மட்டும் இங்கு காண்போம். சிறந்த எல்லாவற்றையும் அடையவேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களுடைய வாழ்க்கை அணுகுமுறை உங்களுடைய வாழ்க்கை முறையை விட வேறுபட்டு இருக்கலாம். ஒரு சிலர் கார்கள், வீடுகள் மற்றும் வருமானம் இவற்றுக்கு முன்னுரிமை தந்து மதிப்பிடலாம். சிலர் குடும்பம் குழந்தைகள் என மகிழ்வைக் கணக்கிடலாம். இந்த மாதிரி முறைகள் எதுவுமே மகிழ்ச்சியை கொடுத்துவிடுமா? யோசித்துப் பாருங்கள். ஒவ்வொருவருக்கும் இது எவ்வளவு சாத்தியப்படும் என்று.
ஆதலால் இது போன்று சிறந்ததாகக் தோன்றும் விஷயத்தை நாடி நம் மன அமைதிக்கு ஊறு விளைவிக்க விடுவது நமது வெற்றிக்குத் தடையாகத்தானே அமையும்? எதார்த்த வாழ்க்கைக்கு பொருந்தாத கனவு போன்று எதிர்பார்ப்புகள் நம்மை ஒரு மோசமான அழுத்தத்திற்கு கொண்டு சென்றுவிடும்.
நீங்கள் சூப்பர்மேன் ஆக விரும்புவதின் உள் அர்த்தம் நீங்கள் உங்களை குறைவாக மதிப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான். அதைவிட்டு வெளியே வாருங்கள்.
சூப்பர்மேன் அல்லது வுமன் கனவுகளை எல்லைக்குள் வைத்து வாழ்க்கையை சூப்பராக மாற்ற முயல்வோம். சூப்பர்மேன் சூப்பர் விமன் எனும் அந்தஸ்தை பெறுவதற்கு மன அழுத்தத்துடன் பாடுபடுவதை விடுத்து நம்மால் முடியும் இலக்குகளை வகுத்துக் கொண்டு வெற்றியை நோக்கி மன நிம்மதியுடன் பயணிப்பதே வெற்றிக்கு உதவும் வழியாகும்.