சரணடைவது என்றால் வரலாறுகளில் படித்த சரணடைந்த சம்பவங்களும், சினிமாக்களில் பார்த்த வெள்ளைக்கொடி காட்சிகள்தான் நினைவுக்கு வரும். இதில் சமாதானக் கொடியை உயர்த்திய நாடு பலவீனமானதாக கருதப்பட வாய்ப்புண்டு. ஆனால் வல்லமையில் சிறந்தவர்கள் கூட சமாதானத்தை நாடுவது உண்டு. வல்லமையான அதியமான் மூதாட்டி அவ்வையின் அறிவுரையை ஏற்று அனுபவம் அல்லாத போருக்குப் தயாராயிருந்த தொண்டைமானிடம் சமாதானம் ஆனார்.
வீரத்தின் உச்சமே சமாதானம் என்பதை சரித்திரம் சொல்கிறது. இந்த உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் சாதிக்க, நல்ல வேலை கிடைக்க, படிக்க, பதவிக்காக என்று ஓயாமல் போராடுகிறார்கள்.
இதில் விட்டுக் கொடுப்பதென்றால் தோல்விக்கு சமம் என்று தோன்றும். உங்களுக்குத் தெரியுமா?. வெளியே நடத்தும் போராட்டங்களை விட மனப் போராட்டங்களால் தான் சக்தி வீணாகிறது. பொதுவாக ஒருவருடைய மனது தன்னைச் சுற்றி நிகழும் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயலும். நாம் எதிர்பார்ப்பது போலவே எல்லோரும் நமக்கு நடக்க வேண்டும் என்றும்,நமக்கு வேண்டாத அனுபவங்கள் நடந்தால் அந்த நினைவே வருத்தம் என்பதே இயல்பாகக் தோன்றுகிறது.
நீங்கள் எதனுடன் போராடுகிறீர்களோ அதுவே முழுமையாக உங்களிடம் நிரம்பிவிடும். அது இறுக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.நீங்கள் சுதந்திரமாக உணரமாட்டீர்கள். தவிர ஒவ்வொன்றுக்கும் மனம் போராடுவது கற்பனைக்கெட்டாத அளவு உங்கள் சக்தியை உறிஞ்சும். அதனால் மீண்டும் மீண்டும் எண்ணச் சுழற்சியில் இருந்து கொண்டு முன்னேற முடியாமல் போகிறது. இவை அனைத்துக்கும். காரணம் விட்டுக் கொடுப்பது பலவீனம் என்றும் தோல்வி என்றும் மனதில் பதிய வைத்திருப்பதுதான். நீங்களே சமாதானத்தை விரும்பினாலும் பிறர் நம்மை இழிவாகப் பார்ப்பாரோ என்ற எண்ணம் மேலோங்குகிறது.
மேலும், நமக்கு பிடிக்காத ஒன்று நடக்கும்போது மனம் அதை நமக்குப் பிடித்த மாதிரி மாற்ற நினைக்கிறது. அதற்காகப் போராடி மனமும் உடலும் சோர்ந்து போகும் போது அதிலிருந்து தப்பிக்க சமாதானம் என நினைக்கிறது. ஆனால் உண்மையில் சரணடைவது என்பது என்ன தெரியுமா? எந்த ஒன்றையும் உங்களால் முடியாது என நீங்கள் உணரும்போது உடனடியாக அதை சர்வ ஆற்றலும் படைத்த இந்தப் பிரபஞ்சத்திடம் ஒப்படைப்பதுதான். அப்படி ஒப்படைத்தால் உங்களுக்கான நல்லவற்றை, உங்களுக்கான தேவையை ஈடேறச்செய்வதற்கான சந்தர்ப்பங்களை இந்தப் பிரபஞ்சமே உங்களிடம் சேரச் செய்யும்.
அதனால் உங்கள் லட்சியங்களும் ஈடேறும். மனதில் என்றும் மகிழ்ச்சி நிலைக்கும். பிரச்னைகள் உங்களை எவ்வளவு அழுத்தினாலும் உங்களுக்குள் மென்மையாக சிரித்துக் கொண்டு சரண்டர் அடைந்து விடுங்கள். அப்படிச் செய்தால் அடுத்து என்ன செய்யலாம் என்று நிதானமாக சிந்திக்க முடியும். அதைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலும் இருக்கும். அதனால் வெற்றியும், வெற்றியால் மகிழ்ச்சியும் கிடைக்கும்.