
நினைத்ததை சாதித்துகாட்ட வேண்டும் என்றால் அதற்கு படிப்படியாக முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும்.
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகழ் வெல்லல் யாருக்கும் அரிது என்கிறார் வள்ளுவர்.
சோர்வு என்பதை வெளிக்காட்டக்கூடாது. முயற்சிக்கு தடை சோர்வு என்பதால் அதை வெல்லும் வழியை கண்டுபிடித்து எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கவேண்டும்.
விளையாட்டு வீரர்கள், பெருந்தலைவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உணர்த்தும் பாடம் என்னவென்று நோக்கி, அவர்களின் செயல்களை ஆராய்ந்து பார்த்தால் ,அவர்கள் இலக்கை நோக்கி அடைய, நினைத்ததை சாதிக்க எடுத்த முயற்சிகளில் முக்கியமானது சோர்வின்றி உழைத்ததுதான்.
மேலும் முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை அவர்கள் அகராதியிலிருந்து தூக்கி எறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
வாய்ப்புகளை தவறவிடாமல் சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்திருப்பதை அவர்களைப் பற்றிய குறிப்புகளை படிக்கும்பொழுது தெரிந்து கொள்ள முடிகிறது.
எந்த செயலை அவர்கள் செய்தாலும் அதில் 100% ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் எவ்வளவு கடினமான பணியையும் மிகவும் சுலபமாக முடிக்க முடிந்திருக்கிறது.
காலம் பொன் போன்றது என்பதை உணர்ந்து நேர நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் அவர்கள். நேரத்தை உருப்படியாக செலவு செய்து செயலாற்றியவர்கள்தான் அவர்கள். இதனால் அவர்கள் விருப்பப்பட்டதை சாதிக்க முடிந்திருக்கிறது.
எதிலும் எப்பொழுதும் துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய மனவலிமை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.
சாதிப்பதற்கான முதல் சாவி உழைப்பு தான் .அதனால் தினமும் குறைந்தது பத்திலிருந்து 12 மணி நேரம் உழைக்க வேண்டும் .இதற்கு மேலும் அவர்கள் உழைத்திருக்கிறார்கள்.
கவலை, பயம், தயக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்களை எல்லாம் விட்டுவிட்டு எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே என்று விழுவதைப் பற்றி கவலைப்படாமல் எவ்வளவு மோசமாக விழுந்தாலும் உடனே எழுந்துவிடும் எண்ணம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.
மற்றவர்களிடம் துணிச்சலாக வேலை வாங்குவது, அவர்களை தங்களுக்காக உழைக்க வைக்க புத்திசாலித்தனமாக நடந்து கொள்வது போன்ற தலைமை பண்பு உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே என்பதை உணர்ந்து வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் தேங்கி விடாமல், எப்பொழுதும் புதிய புதிய முயற்சிகளை மட்டுமே கையாண்டு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக பிடித்த செயலையே செய்யாமல், தான் செய்யும் செயலை பிடித்தமானதாக மாற்றிக்கொண்டு அதன் மூலம் வாழ்வில் மாற்றத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை எப்போதும் மனதிற்குள் எண்ணிக் கொண்டு அயராது புதுப்புது விஷயங்களை தெரிந்து கொண்டு புத்துணர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்கள். இதனால் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.
நினைத்ததை சாதிக்க...
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உடைந்து போகாதே,
உன்னை உடைப்பதற்கு ஒரு தருணம் உண்டென்றால்
உன்னை உருவாக்குவதற்கும்
பல தருணங்கள் காத்திருக்கும்!