அலுவலகங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவருமே விரும்பும் ஒரு விஷயம் நல்ல பணியாளர் என்று பெயர் வாங்க வேண்டும் என்பதே. அதற்கான எளிய வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்குச் செல்லுங்கள். முடிந்தால் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அலுவலகத்திற்குள் காலையில் நுழைந்ததும் அனைவருக்கும் புன்னகையோடு காலை வணக்கம் சொல்லுங்கள்.
அன்றைய வேலைகளை அன்றே செய்து முடித்து விடுங்கள். என்றைக்கிருந்தாலும் உங்கள் வேலைகளை நீங்கள்தானே செய்ய வேண்டும். மாலை வீட்டிற்குப் புறப்படும் முன்னால் உங்கள் மேலதிகாரியை சந்தித்து அன்று நீங்கள் செய்த பணிகளைக் கூறுங்கள். ஏதேனும் அவசரமான பணி இருக்கிறதா என்று கேட்டு விட்டுப் புறப்படுங்கள்.
எந்த ஒரு வேலையையும் மிக வேகமாகச் செய்யாதீர்கள். மிகவும் தாமதமாகவும் செய்யாதீர்கள். ஒவ்வொரு பணிக்கும் அதைச் செய்து முடிக்க ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படும். அதைப் பின்பற்றி நிதானமாகச் செயல்படுங்கள். தவறுகள் ஏற்படுவதைத் தடுக்க இது உதவும்.
நீங்கள் செய்த பணியில் ஏதேனும் தவறு ஏற்பட்டு அதை உங்கள் மேலதிகாரி சுட்டிக்காட்டினால் உடனே அவரிடம் தேவையின்றி வாக்குவாதம் செய்யாதீர்கள். “இனி இதுபோல நடக்கமால் பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறிவிடுங்கள். அந்த பிரச்னை அத்தோடு முடிந்துவிடும். உங்கள் மீது மேலதிகாரிக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட இது வழிவகுக்கும்.
உங்கள் சக பணியாளர்கள் அலுவல் தொடர்பாக ஏதேனும் உதவிகள் கேட்டால் தயங்காமல் மறுக்காமல் செய்யுங்கள். இது உங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும். சக பணியாளர்களுக்கு உங்கள் மீது மரியாதை ஏற்படும்.
உங்கள் மேலதிகாரி ஏதாவது கடினமான பணியைச் செய்யுமாறு உங்களிடம் கூறினால் முகத்தில் அடித்தாற்போல உடனே முடியாது என்று கூறாதீர்கள். செய்து முடிக்கிறேன் சார் என்று சொல்லி பின்னர் அந்த பணியிலுள்ள சிரமங்களை எடுத்துக் கூறுங்கள். அவர் புரிந்து கொண்டு அந்த பணிக்கு உங்களுக்கு உதவியாக யாரையேனும் நியமிக்கலாம். அல்லது அந்த பணியை வேறு ஒருவரைச் செய்யுமாறு அவர் கூறலாம்.
தேவையின்றி விடுப்பு எடுக்காதீர்கள். அவசியத் தேவையானால் மட்டுமே விடுப்பு எடுங்கள். அதுவும் உங்கள் மேலதிகாரியின் முன் அனுமதியோடு விடுப்பு எடுங்கள். நீங்கள் தேவையின்றி விடுப்பு எடுக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் உங்கள் மேலதிகாரிக்குத் தெரிந்தால் உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும்.
அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவரைப் பற்றி மற்றொரு பணியாளரிடம் குறை ஏதும் கூறாதீர்கள். நீங்கள் கூறியதை அவர் சம்பந்தப்பட்ட பணியாளரிடம் தெரிவிக்கும் பட்சத்தில் உங்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படும். நட்பில் விரிசல் ஏற்படும்.
சக பணியாளர் யாருக்காவது சிறிது உடல் நிலை சரியில்லை என்றால் “ஏதாவது உதவு தேவையா? இன்று உங்கள் பணியை நான் செய்யட்டுமா ?” என்று கேளுங்கள். செய்யுங்கள் என்று கூறினால் மேலதிகாரியின் அனுமதியோடு அந்த பணியைச் செய்யுங்கள்.
மேலே உள்ள வழிகளை கடைபிடித்துப் பாருங்களேன். உங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. நமது வேலையை நாம் சரியாகச் செய்கிறோம் என்ற ஒருவித மனதிருப்தி நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கையில் மனத்திருப்தி என்பது மிக முக்கியம் நண்பர்களே!