பிரச்சனைகள் பெரிதானால் என்ன? தீர்வுகள் சிறிது தானுங்க..!

Problems & Solution
Problems & Solution
Published on

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறோம். சில நேரங்களில் பிரச்சனைகளின் தீவிரத்தை காட்டிலும் அதனால் நாம் அடையும் மன உளைச்சல்கள் மிகுந்த சிக்கலுக்கு வழிவகுத்து விடுகின்றன. எப்பொழுதும் எந்த ஒரு பிரச்சனையையும் அமைதியாக சிந்தித்து அணுக கற்றுக் கொண்டோமானால், எத்தகைய பெரிய சிக்கலாக இருந்தாலும், நம்மால் அதிலிருந்து எளிதில் விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ முடியும். எப்பொழுதுமே பிரச்சனைகள் பெரியதாக இருந்தாலும், அதன் தீர்வுகள் மிகச் சிறியதாகத்தான் இருக்கும். அந்தத் தீர்வுகளை கண்டறிவது நம்முடைய சுய சிந்தனையில் தான் உள்ளது என்பதை இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சொர்னாபுரி என்ற நாட்டை கிருஷ்ணராஜன் என்ற அரசர் ஆட்சி புரிந்து வந்தார். மிகச் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்த நிலையில் ஒருநாள் அந்த அரசருக்கு திடீரென ஒற்றை தலைவலி ஏற்பட்டது. தலைவலியால் மிகுந்த அவதிப்பட்ட அரசர், நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவர்களை அழைத்து வைத்தியம் பார்த்தார். ஆனாலும் அவருடைய தலைவலி முழுமையாய் குணமாகவில்லை. இந்நிலையில் காட்டின் மையப்பகுதியில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அவரிடம் கேட்டால் அரசரின் தலைவலிக்கு மருந்து கிடைக்கலாம் என்ற தகவலும் அரசரின் காதுகளுக்கு வரவே தன்னுடைய பணியாட்களை அழைத்து அந்த முனிவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:
இந்த 7 நபர்களை ஒருபோதும் நம்பாதீர்கள்!
Problems & Solution

அரசரின் உத்தரவுப்படி காட்டுக்கு சென்ற பணியாளர்கள் அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் விவரத்தை சொல்லி அவரை அழைத்து வந்தனர். அரசரை பரிசோதித்த முனிவர் "உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. எனவே போதிய அளவு ஓய்வெடுங்கள். மேலும் கண்களுக்கு எப்பொழுதும் பசுமையான வண்ணத்தில் காட்சிகள் தெரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிகமாக பச்சை வண்ணத்தை பார்ப்பதன் மூலம் தலைவலி சிறது சிறிதாக குணமாக வாய்ப்பு உள்ளது," என்று கூறினார்.

சிறிது காலங்கள் சென்ற பின், முனிவருக்கு மீண்டும் அரசரை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. 'கடைசியாக நாம் அரசருக்கு சில வைத்தியங்களை சொல்லி விட்டு வந்தோம். அவருக்கு தலைவலி சரியானதா? இல்லையா? என்ற தகவல் இதுவரை வரவே இல்லையே. எனவே நாமே நேரில் சென்று பார்த்து வரலாம்' என்று நினைத்த முனிவர் அரசவையை நோக்கி புறப்பட்டார்.

போகும் வழியெல்லாம் எங்கு பார்த்தாலும் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. மக்கள் வாழும் வீடுகள், தெருக்கள், அணிந்திருக்கும் ஆடைகள் என அனைத்திலும் பச்சை வண்ணமே மிகுந்திருந்தது. ஒவ்வொரு காட்சியையும் பார்த்துக் கொண்டே முனிவர் அரண்மனை வாயிலில் சென்று அரசரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அப்பொழுது அங்கு வந்த காவலர்கள் பச்சை வண்ணத்தில் வண்ணக் கலவையை எடுத்து வந்து அதனை முனிவரின் மேல் ஊற்றி அவரை முழுக்க முழுக்க பச்சை வண்ணத்திற்கு மாற்றி அரசரிடம் அழைத்துச் சென்றனர்.

அரசரை பார்த்த முனிவர், "மன்னா, உங்களுக்கு தலைவலி சரியாகி விட்டதா?" என்று கேட்டார். அதற்கு அரசரோ, "முனிவரே, தாங்கள் கொடுத்த வைத்தியத்தால் என்னுடைய தலைவலி முழுவதும் குணமாகிவிட்டது. நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன்," என்று கூறினார்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை வெல்ல உதவும் கௌதம புத்தரின் 11 பாடங்கள்!
Problems & Solution

சிறிது நேரம் அமைதியாக இருந்த முனிவர், "அது சரி, ஏன் நாடு முழுவதையும் ஒரே பச்சை நிறத்தில் மாற்றி வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசரோ சிறிதும் யோசிக்காமல், "நீங்கள் தானே என்னுடைய தலைவலி தீர வேண்டுமென்றால் அதிகமாக பச்சை வண்ணத்தில் இருக்கும் பொருட்களை பார்க்க வேண்டும் என்று கூறினீர்கள்! அதனால்தான் நான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்தேன்," என்று கூறினார்.

அதைக் கேட்ட முனிவர் சிறிது நேரம் அமைதியாக சிந்தித்துவிட்டு, "மன்னா, ஒரு பச்சை வண்ண கண்ணாடியை வாங்கி நீங்கள் அணிந்திருந்தால் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு பச்சை வண்ணத்திலேயே தெரிந்திருக்குமே! அதை விட்டுவிட்டு ஏன் மக்களின் வரிப்பணத்தை இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்து நாடு முழுவதும் பச்சை வண்ணமாக மாற்றி வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அப்பொழுதுதான் அரசருக்கு தான் எவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறோம் என்பதே புரிந்தது. தன்னுடைய புரிதல் இல்லாத சிந்தனையை நினைத்து அரசர் மிகவும் வருத்தப்பட்டார்.

இதையும் படியுங்கள்:
சுதந்திரமே உண்மையான மகிழ்ச்சி!
Problems & Solution

"முனிவரே தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்! என்னுடைய பிரச்னை எனக்கு பெரியதாக தெரிந்ததால் அதற்கான தீர்வுகளும் பெரிய அளவிலே இருக்கும் என நான் தவறாக புரிந்து கொண்டேன். 'பலம் பொருந்திய இரும்பு கதவுகளையும் சிறு துளையில் நுழையும் சாவிதானே திறக்கிறது' என்பதை தங்களுடைய வருகைக்குப் பின் நான் புரிந்து கொண்டேன். இனிமேல் இது போன்ற தவறு என்னுடைய ஆட்சியில் நடக்காது. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்," என்று கூறினார் அரசர்.

அரசரின் மனமாற்றத்தைக் கண்ட முனிவர் மகிழ்ச்சியோடு காட்டை நோக்கி செல்ல தொடங்கினார்.

பிரச்சனைகள் பெரியதாக இருந்தாலும், அதன் தீர்வுகள் மிகச் சிறியதாகத்தான் இருக்கும். அந்தத் தீர்வுகளை கண்டறிவது நம்முடைய சுய சிந்தனையில் தான் உள்ளது, இல்லையா மக்களே?!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com