பழிவாங்குவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கலாசாரமாகவே ஆகிவிட்டது. நீங்கள் யாரைப் பற்றி கவனமாக இருக்கிறீர்கள்? உங்கள் எதிரியைப் பற்றித்தானே. உங்கள் சந்தோஷத்தை களவாடிப் போகிற அளவுக்கு நீங்கள் அல்லவா அவருக்கு அந்தஸ்து தந்து விட்டீர்கள். நீங்கள் எதிரி என்று முடிவு கட்டியவரை உங்கள் உள்ளே சிம்மாசனம் போட்டு அமரவைத்து உள்ளீர்கள். உங்கள் எதிரிக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேறு யாரோ அல்ல நீங்கள்தான்.
யாரைப் பழி வாங்க வேண்டும் நினைத்தீர்களோ, உண்மையில். அவர்தான் உங்களைப் பழிவாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?.
வெளிநாட்டில் வேலைதேடிப் போனான் ஒரு நேபாளி. ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியன். அந்த நாட்டில் மது அருந்தக் கூடாது என்பது சட்டம். மூவரும் ரகசியமாக குடிக்க பிடிபட்டனர். ஆளுக்கு 20 அடி கசையடி தர நீதிபதி கட்டளையிட்டார். கூடவே "இன்றைக்கு என் மனைவியின் பிறந்தநாள். அதனால் தண்டனையில் ஏதாவது சலுகை வேண்டுமானால் கேளுங்கள்" என்றார்.
கசையடி கொடுக்கும் தன் முதுகில் ஒரு தலையணை கட்டிக்கொள்ள அனுமதி கேட்டான் நேபாளி. எட்டு பிறகு அடிகள் தாக்குப் பிடிக்காமல் தலையணை பிய்ந்ததுதான் மிச்சம். முதுகு தோல் உரிந்தது. பாகிஸ்தானி இதைப்பார்த்து என் முதுகில் இரண்டு தலையணைக் கட்ட அனுமதியுங்கள் என்றான். உனக்கு என்று இந்தியனைக் கேட்க என் முதுகில் இந்த பாகிஸ்தானியைக் கட்டு என்றானாம். அடுத்தவருக்கு வலி ஏற்படுத்துவதுதான் சந்தோஷம் என யோசிக்கும்போது நம் வாழ்க்கையின் நோக்கம் சிதைந்து போகிறது என்பதை உணரவேண்டும்.
பழி வாங்கும் உணர்ச்சி என்பது ஒரு நோய். அது உள்ளே புகுந்து விட்டால் உங்களையே தின்று ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிடும். எதிரி வெளியில் இருந்தாலாவது அவரை சமாளிக்க வாய்ப்பு இருக்கிறது. அவர் உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து ஆட்டுவிக்க ஆரம்பித்தால், அதன் பின் மலையிலிருந்து உருட்டிவிடப்பட்ட கல்லும், உங்கள் வாழ்க்கையும் ஒன்றுதான். சரசரவென்று விழுந்து அதலபாதாளத்துக்கு இழுத்து போய்விடும்.
சந்தோஷத்தை அழிப்பதற்கு வெளியிலிருந்து இன்னொரு எதிரி எதற்கு? மாறாக உங்கள் சந்தோஷத்தை வெளிச் சூழலுக்குப் பணயம் வைக்காமல், உள்ளே அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டால் உங்கள் முழு திறமையும் வெளிப்பட்டு,வெற்றி உங்களைத் தேடிவரும்.