-ம. வசந்தி
வளமுடன் வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவார்கள், வறுமையில் நீ நண்பர்களை அறியலாம் என்பது டூமாஸ் அவர்களின் கருத்து. மனிதன் தனித்து வாழ முடியாது . நல்லோர் துணை தேவை. உறவுகள் மட்டும் போதாது. நட்பும் வேண்டும். துயர் வந்தபோது ஆலோசனை தர, ஊக்கம் தர, அன்பு காட்ட, பதிவு காட்ட நட்பு தேவை. அது நல்ல ஒரு நட்பாக இருக்க வேண்டும். தீய நட்பு நம்மை தீய வழியில் செலுத்தும். நல்ல நட்பே நல்வழிப்படுத்தும். நாம் தீயவழி சென்றாலும் தடுக்கம்.
சில சமயங்களில் மிகவும் சலிப்பூட்டுகிற எரிந்து விழுகின்ற நண்பன்தான் உனது நண்பர்களில் சிறந்தவனாக இருக்கலாம். நல்ல நட்பை நாம் துயரில் அறியலாம். வளமையில் பழ மரம் நாடும் பறவையாய் நண்பர்கள் சேரலாம். வறுமையிலும் - துயரிலும்தான் நாம் நல்ல நட்பை இனம் காண முடியும். நாம் தீயவை செய்யும் போது நம்மை இடிக்கும் நட்பே நல்ல நட்பு.நமக்கு ஏற்ப பேசுகிறவன் நண்பன் அல்ல. பகையாளி.
உடுக்கை இழந்தவன் கை போல நம் இடுக்கண் களைபவர்கள்தான் நல்ல நண்பர்கள். கேளாமல் உதவி செய்கிறவன் உற்ற நண்பன். வெளிப்படையான பகைவனை விட போலி நண்பன் ஆபத்தானவன். எனவே நட்பில் நல்ல எச்சரிக்கை, கவனம் தேவை என உணர்ந்து செயல்பட வேண்டும்.
யார் எட்டப்பன்! என அறிந்து நட்பு கொள்ள வேண்டும். விரோதிகளை அறிந்தால் நாம் எச்சரிக்கை கொள்ளலாம். நட்பே விரோதமானால் நம்மால் தடுக்க முடியாது.
"நட்பை பெறுவதில் நிதானமாய் இரு நட்பை பெற்ற பின்பு உறுதியுடன் நீடித்து காப்பாற்று."- என்ற சாக்கரட்டீசின் சொற்களை மனதில் நன்கு பதிய வைத்து நட்புக் கொள்வதே சிறந்ததாகும்.
ஜூலியஸ் சீசர் நண்பனான ப்ரூட்டஸ் கத்தியால் குத்த வரும்போது "you too Brutus?"என்று கேட்கும் காட்சியை ஒவ்வொருவரும் மனதில் கற்பனை செய்து பாருங்கள். நண்பனாக இருந்து துரோகியாக மாறி குத்தும் அளவுக்கு வருவதுதான் நட்பின் அடையாளமா? சற்று சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.
அப்போதுதான் போலி நண்பனின் துயர் எத்தனை என்பது தெரியும். அகத்தில் அன்பு கொண்ட நட்புதான் தேவை. முகஸ்துதி செய்யும் நட்பு தேவையில்லை. கசப்பாக இருந்தாலும் தக்க ஆலோசனை தந்து நம்மை தீய வழியில் செல்லாது தடுக்கும் நட்பே நல் நட்பு. அதனை நாம் நாடி பெற்று போற்ற வேண்டும்.
நட்பும் ஒரு புனிதமான உறவே தாய் தந்தைக்கு அடுத்த உறவு நட்பு எனலாம்.