சதுரமான துளைக்குள் வட்டமான ஆணியைப் பொருத்த முடியுமா? அது அந்த ஆணியின் தவறா?

உங்களுக்குக் கூட்டத்தில் சேரப் பிடிக்காதா? நீங்கள் பலவீனமானவர் அல்ல... உங்களுக்குள் இருக்கும் 'சூப்பர் பவர்' பற்றித் தெரியுமா?
loneliness is strength
loneliness is strengthcredits AI Image
Published on

‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பது காலம் காலமாகச் சொல்லப்படும் ஒரு பழமொழி. சமூகத்தோடு இயல்பாகக் கலந்து, எல்லாரோடும் ஜாலியாகச் சிரித்துப் பேசிப் பழகுவதுதான் ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி என்ற பொதுவான கருத்தும் நிலவுகிறது. ஆனால், ஒரு கூட்டமான இடத்திலோ, அலுவலக விருந்திலோ அல்லது குடும்ப விசேஷத்திலோ சிலரால் மட்டும் மற்றவர்களோடு எளிதில் ஒட்ட முடிவதில்லை. ஒருவித அந்நிய உணர்வும், விலகலும் அவர்கள் மனதிற்குள் நிழலாடும். இது ஒரு பலவீனமாகப் பார்க்கப்பட்டாலும், உண்மையில் இது ஒரு மிகப்பெரிய பலம் (loneliness is strength) என்பதும் உண்மை.

குறை அல்ல; ஒரு தனிச்சிறப்பு!

எல்லோருடனும் எளிதாகக் கலந்து பழகுவது சமூகத் திறமையாகக் கருதப்பட்டாலும், அதில் ஒருவரின் தனித்துவம் சில நேரங்களில் கரைந்து போக வாய்ப்புண்டு. புகழ்பெற்ற மனநல மருத்துவர் ராமி கமின்ஸ்கி (Rami Kaminski) தனது ‘The Gift of Not Belonging’ என்ற புத்தகத்தில் ஒரு மாற்றுச் சிந்தனையை முன்வைக்கிறார்.

ஒரு கூட்டத்தில் ஒட்ட முடியாமல் போவது என்பது ஒரு குறையல்ல; அது ஒரு 'ஸ்பெஷல்' குவாலிட்டி என்கிறார் அவர்.

தனிமை தரும் கவனிப்புத் திறன்

கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளி நிற்கும் நிலை, ஒருவரின் மூளையை இன்னும் கூர்மையாக்குகிறது என்று அறிவியல் கூறுகிறது. கூட்டத்தோடு டக்கென்று ஐக்கியமாகி விடுபவர்கள் பல விஷயங்களை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் செல்ல வாய்ப்புண்டு. ஆனால், தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் 'அவுட்சைடர்'களுக்கு (Outsiders) என்று ஒரு தனிக்குணம் உண்டு. மற்றவர்கள் கவனிக்கத் தவறும் நுணுக்கமான விஷயங்களை இவர்கள் எளிதில் கண்டறிவார்கள்.

மனிதர்களின் உண்மையான முகபாவனை மற்றும் உடல்மொழி, ஒரு சூழலில் நிலவும் நுட்பமான மாற்றங்கள்,யார் உண்மையாகப் பேசுகிறார்கள், யார் நடிக்கிறார்கள் என்பதை எளிதாகக் கண்டறியும் தெளிவு, இது போன்ற அபாரமான கவனிப்புத் திறன்தான் இவர்களை ஒரு சிறந்த படைப்பாளியாகவோ அல்லது புத்திசாலியாகவோ மாற்றுகிறது.

தனித்து நிற்பதால் கிடைக்கும் 3 முக்கிய நன்மைகள்:

சுயமரியாதை மற்றும் நேர்மை:

கூட்டத்தோடு இருப்பவர்கள், மற்றவர்களின் கருத்துக்களுக்குத் தலையாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகலாம். ஆனால், தனித்துவமாக இருப்பவர்கள் மற்றவர்களுக்காகத் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். எதற்கும் வளைந்து கொடுக்காமல், தன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நேர்மையான குணம் இவர்களிடம் காணப்படும்.

எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறன்:

இவர்கள் ஒரு குறிப்பிட்ட சிறிய வட்டத்திற்குள் மட்டும் அடைபடுவதில்லை. புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்கிருப்பவர்களைச் சீக்கிரம் புரிந்து கொள்ளும் பண்பு இவர்களுக்கு உண்டு. தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அது அந்த வடிவத்தை எடுத்துக் கொள்வது போல, எந்தச் சூழ்நிலையிலும் தங்களைப் பொருத்திக் கொண்டு வாழும் நெகிழ்வுத்தன்மை இவர்களிடம் இருக்கும்.

மனநிறைவு:

அடுத்தவர்களைக் கவர வேண்டும்என்ற கட்டாயம் இவர்களுக்கு இல்லை. தனக்குப் பிடித்த வேலையைச் செய்வதில் கிடைக்கும் மனநிறைவே இவர்களுக்குப் போதுமானது.

நல்வாய்ப்பு:

தனிமை என்பது மற்றவர்களை வெறுப்பதோ அல்லது சமூகத்தை விட்டு ஓடுவதோ அல்ல. அது தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு. ‘யாரும் தன்னைக் கண்டு கொள்ளவில்லையே’ என்று வருத்தப்படாமல், அந்தத் தனிமையைப் பயன்படுத்தித் திறமைகளை வளர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனம். தனிமையில் கற்றுக்கொண்டு செதுக்கும் ஒரு விஷயம்தான், ஒரு நாள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் சக்தியாக மாறும்.

இதையும் படியுங்கள்:
இரவுப் பயணமும் இளையராஜாவின் இதமான இசையும்: ஆழ்மன அமைதி தரும் ஆன்மீக அனுபவம்!
loneliness is strength

ஒரு சதுரமான துளைக்குள் வட்டமான ஆணியைப் பொருத்த முடியாது. அதற்காக அந்த ஆணி தவறானது என்று அர்த்தமல்ல; அந்த ஆணியின் வடிவமே தனித்துவமானது என்று பொருள். கூட்டத்தில் ஒருவராகக் கரைந்து போவதை விட, தனித்துவமான அடையாளத்துடன் இருப்பதே ஒரு சிறந்த ஆளுமையின் அடையாளம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com