

மனநிறைவு என்பது ஒருவரது வாழ்க்கையில் உள்ள சூழ்நிலைகள், இருப்பவை போன்றவற்றில் திருப்தி அடைந்து, ஆழ்ந்த உள் அமைதியுடனும், 'இதைவிட வேறு எதுவும் தேவையில்லை' என்ற மனப்பான்மையுடனும் இருக்கும் உயர் பண்பாகும். இது மகிழ்ச்சியை விட நிலையானது. நன்றியுணர்வு, சுயகட்டுப்பாடு, இலக்கு நிர்ணயம் போன்ற பயிற்சிகளால் இதை வளர்க்க முடியும். இது குறுகிய கால இன்பங்களைத் தள்ளிவைத்து நீண்ட கால இலக்குகளை அடைய உதவுகிறது.
மனநிறைவு என்பது வெறும் திருப்தி மட்டுமல்ல, அது நம் வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதனுள் அமைதியைக் கண்டறிவதாகும். நம்மிடம் உள்ளவற்றிற்காக நன்றி செலுத்துவதும், நீண்ட கால இலக்குகளை அமைத்து அவற்றை நோக்கி செயல்படவும், நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதும் மனநிறைவை வளர்ப்பதற்கான சிறந்த வழிகளாகும்.
வாழ்வில் பெறவேண்டிய உயர்ந்த இன்பம் என்பது அவரவர் தனிப்பட்ட பார்வை, நம்பிக்கை போன்றவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்றாலும், பொதுவாக மன நிறைவு, பிறருக்கு உதவுவதால் ஏற்படும் இன்பம் மற்றும் தன் அறிவை உணர்ந்து தெளிவு பெறுதல் ஆகியவை உயர்ந்த இன்பங்களாகும்.
ஏனென்றால் இவை நிலையானவை மற்றும் வெளிப்புற விஷயங்களை சார்ந்து இருப்பதில்லை. வெளிப்புற சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல், எல்லா சூழ்நிலைகளிலும் நிலையான, நிபந்தனையற்ற உள் அமைதியை உணர்வது அதாவது உள்ளுக்குள் இருக்கும் அமைதி மற்றும் திருப்தி போன்றவை இருப்பதிலேயே உயர்ந்த இன்பமாக கருதப்படுகிறது.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். இதை உண்மையில் மனநிறைவு பெற்றவர்களால்தான் உணரமுடியும். எழுத்துகளில் வடிப்பது கடினம். வயிறு நிரம்பியவுடன் போதும் என்று தோன்றுகிறது அல்லவா? அவ்வாறே மனம் கிடைத்ததை வைத்து மனநிறைவு கொண்டுவிடும். இது வெறும் பொருள் சம்பந்தப்பட்டது அல்ல. உணர்ச்சிகள், உறவுகள், நம் செயல் சாதனைகள் எல்லாவற்றிலும்
மனநிறைவு கொள்ள முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமும், தர்மத்தை செய்வதன் மூலமும் கிடைக்கும் மகிழ்ச்சியானது நிறைவான மனதைத் தரும்.
மனநிறைவை அடைவது எளிதான காரியமா என்றால் மன நிறைவுக்கான முக்கியமான ஒன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வதுதான். மனநிறைவு என்பது வளமுடன் வாழ்வதல்ல, வாழ்வில் இருக்கும் வளத்தால் கிடைத்த வாழ்க்கையை அனுபவிப்பதே. மனதில் அமைதியை உணர்ந்தால் நாம் மனநிறைவை அடைந்ததாக அர்த்தம் கொள்ளலாம்.
அதேபோல் வாழ்கின்ற வாழ்க்கையில் திருப்தியை, மகிழ்ச்சியை உணர்ந்தால் மனநிறைவை அடைந்துள்ளோம் என்று கூறலாம். இதற்கு பிறர் வாழ்க்கையை நம்முடன் ஒப்பிட்டு பார்த்து வருந்தாத மனநிலை வாய்க்குமானால் மனநிறைவான வாழ்வைப் பெறலாம்.
ஒருவன் கல்யாண வீட்டில் வயிறு முட்ட விருந்து சாப்பிட்டு, அதனால் ஏற்பட்ட வயிற்று வலியைத் தாங்க முடியாமல் டாக்டரிடம் ஓடினானாம். அவர் இரண்டு மாத்திரையை கொடுத்து விழுங்கச் சொல்ல அவனோ 'போங்க டாக்டர், மாத்திரை சாப்பிட இடம் இருந்தால் அங்கே கொடுத்த லட்டுவை தின்றிருக்க மாட்டேனா என்றானாம்! இது எதிலும் மனநிறைவு இல்லாத மனநிலையை காட்டுகிறதல்லவா.
மனநிறைவே மகிழ்ச்சி தரும்! உண்மைதானே நண்பர்களே!