

"வாழ்க்கை என்பது ஒரு கிரிக்கெட் மைதானத்தைப் போன்றது; இங்கே பந்துகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம், ஆனால் மட்டையை வீசும் நம் கைகள் பதட்டப்படக்கூடாது."
இளம் கிரிக்கெட் நட்சத்திரம் அபிஷேக் சர்மா(Abhishek Sharma's Success Formula) சமீபத்தில் பகிர்ந்த ஒரு கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த 10-ஆவது டி20 உலகக்கோப்பை தொடரில், துவக்க வீரராகவும் அதிரடி ஆட்டக்காரராகவும் களமிறங்கிய அபிஷேக் சர்மா (25), எதிரணியினருக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த உலகக்கோப்பைத் தொடர் அவருக்கு ஒரு சோதனைக் களமாக மாறியது. அவர் பங்கேற்ற முதல் மூன்று போட்டிகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி ஏமாற்றமளித்தார்.
அதன்பிறகு நடைபெற்ற சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. இருப்பினும், முக்கியத்துவம் வாய்ந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் குவித்து மீண்டும் பார்முக்குத் திரும்பினார்.
அபிஷேக் சர்மா மீண்டு வந்துவிட்டார் என ரசிகர்கள் நம்பிய வேளையில், அடுத்த இரண்டு போட்டிகளில் முறையே 10 மற்றும் 9 ரன்கள் எடுத்து மீண்டும் ஏமாற்றமளித்தார். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான மிக முக்கியமான இறுதிப் போட்டியில், 21 பந்துகளில் 52 ரன்கள் விளாசி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உறுதுணையாக இருந்தார்.
வெற்றி குறித்து அபிஷேக் சர்மா கூறியதாவது:
"உலகக்கோப்பை இறுதிப் போட்டி என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பது இயல்புதான். ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டிக்கு முந்தைய நாள் என் மனநிலை மிகவும் அமைதியாக இருந்தது. எப்போதும் போல இது ஒரு சாதாரண போட்டி என்ற எண்ணத்தோடு என்னைத் தயார்படுத்திக் கொண்டேன். போட்டியின் பல்வேறு சூழல்களைக் கற்பனை செய்து, அதற்கு ஏற்ப எப்படி விளையாட வேண்டும் என்று திட்டமிட்டதால், இறுதிப் போட்டியில் நிதானமாகச் செயல்பட முடிந்தது."
"ஒரு சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினால் அதிகக் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது; அதே சமயம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மனம் உடைந்து போகாமல் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த உலகக்கோப்பைத் தொடரில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம். மனவலிமையும், திட்டமிட்டுச் செயல்படுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டேன்," என உலகின் நம்பர் ஒன் பேட்டர் அபிஷேக் சர்மா தெரிவித்தார்.
உலகக்கோப்பைத் தொடரில் கற்ற இந்தப் பாடங்களை வைத்து, எதிர்காலத்தில் ஒரு சிறந்த வீரராக உருவெடுக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அபிஷேக் சர்மா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.