
"எண்ணங்களையெல்லாம் நல்ல செயலாக்கும் ஆற்றல்தான் வெற்றியாக வளர்ச்சி பெறுகிறது" (The power of thoughts) என்பது 'வால்டேர்' என்பவரின் கருத்து ஆகும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் எண்ணங்களை செம்மைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது வெற்றிக்கான வழியாகும்.
ஒவ்வொரு 'வெற்றி'யும் வித்தியாசமானவை ஆகும். இதனால், வெற்றியின் தன்மைக்குஏற்ப, அந்த வெற்றியை அடையும் காலமும் மாறுபடுகிறது.
வெற்றியை குறுக்கு வழிகளில் பெறுவதற்கு சிலர் முயற்சி செய்வதுண்டு.
புகழ்பெற்ற 'ஜென்' கதை ஒன்று வெற்றியைப்பற்றி தெரிந்துகொள்ள உதவுகிறது.
சீனாவிலுள்ள ஒரு மன்னன் உலகத்தின் வரலாறு முழுவதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள விரும்பினான். "உலக வரலாறு அனைத்தையும் தெரிந்துகொண்டால், ஞானியாகிவிடலாம்" என்றும் நினைத்தான். அவனது அமைச்சரவையிலிருந்து அறிஞர்களையும் புலவர்களையும் அழைத்தான். உலக வரலாற்றை எழுதித் தரும்படி கட்டளையிட்டான்.
சில ஆண்டுகள் கழிந்தன.
ஆயிரக்கணக்கான பக்கங்களில் உலக வரலாற்றை எழுதிக்கொண்டு பல அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் வந்தார்கள். நூற்றுக்கணக்கான குதிரை வண்டிகளில்விரிவாக எழுதப்பட்ட வரலாற்றுச் சுவடிகள் கொண்டுவரப்பட்டன.
அரண்மனை மண்டபம் முழுவதும் நிரம்பும் அளவுக்கு வரலாற்றுச் சுவடிகள் குவிந்தன.
மன்னன் அதிர்ச்சியடைந்தான்.
உலக வரலாறு இவ்வளவு பெரியதா? இவற்றை என்னால் படித்து முடிக்க சுருக்கமாக எழுதித்தாருங்கள்" என்றான் மன்னன்.
உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை சுருக்கமுடியாது. அதிகமாக சுருக்கினால் உண்மைகளைத் தெரிய முடியாது என அறிஞர்கள் சொன்னார்கள்.
எப்படியாவது நீங்கள் சுருக்கித்தாருங்கள் என விடாப்பிடியாக விரட்டினான்.
பயந்துபோன அறிஞர்களும், வரலாற்று ஆசிரியர்களும் வாலாற்று ஆசிரியர்களும் ஒரு ஜென் குருவை சந்தித்து ஆலோசனை கேட்டார்கள். ஜென் குரு மன்னனை சந்திக்க நேரில் வந்தார்.
உலக வாலாற்றை மிகவும் சுருக்கமாக “நான் எழுதித்தருகிறேன்" என்று ஜென் குரு கூறினார்.
மறுநாள், மன்னனை சந்தித்த ஜென் குரு ஒரு ஓலையை அவனிடம் நீட்டினார். அந்த ஓலையில் "உலகில் மனிதர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள். இறந்துபோனார்கள்" எழுதப்பட்டிருந்தது.
மன்னன் ஆச்சரியமாகப் பார்த்தான். "உலக வாலாற்றை மிகவும் சுருக்கமாக இப்படித்தான் எழுதமுடியும்" என்று சொன்னார் ஜென் குரு.
மன்னனுக்கு உண்மை புரிந்தது.
எந்த வெற்றியைப் பெறுவதற்கும் முறையான வழிமுறையும், தேவையான கால அவகாசமும் தேவை" என்பதை மன்னன் புரிந்துகொண்டான்.
குறுக்கு வழியில் கிடைக்கும் 'வெற்றி' நிரந்தரமானதல்ல" - என்பதை சரியாகப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி பெறலாம்.