நம்முடைய கடந்த கால மனவேதனைகளிலிருந்து விடுபட்டு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான அம்சம் இக்கணத்தில் வாழ்தல். நாம் நம்முடைய விழிப்புணர்வையும்,கவனத்தையும் இக் கணத்தின் மீது குவித்து வாழும்போது நம் கற்பனையை நம் கட்டுப்பாட்டில் வைக்கிறோம். நாம் கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. நிகழ்வுகளை சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. ஜென் தியானத்தின் மைய நோக்கமே இதுதான்.
தியானம் என்பது நிகழ்காலக் கணத்தின் மீது நாம் கவனம் செலுத்தும்படி செய்கின்ற உத்தியாகும். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கும், அவற்றை எடை போடுவதற்கு பதிலாக வாழ்க்கையை ஒரு சமநிலையான விதத்தில் பார்க்கின்ற பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதற்கு இந்த தியானப் பயிற்சி உதவுகிறது. தியானம் என்பது வாழ்க்கையிலிருந்து தப்பி ஓடும் வழி அல்ல. மாறாக வாழ்வில் உண்மையிலேயே இருப்பதற்கான முன் தயாரிப்புதான்.
தற்காப்புக் கலைகளை பயிற்சி செய்யும்போது நீங்கள் எப்பொழுதும் இக்கணத்தின் மீதே கவனம் செலுத்தவேண்டும். ஏதோ ஒன்று ஒரு குறிப்பிட்ட வழியில் வரும் என்று நீ எதிர்பார்த்தால், அதற்குத் தயாராக நீங்கள் உங்களை நிலைப்படுத்திக் கொள்வீர்கள். அது இன்னொரு விதத்தில் வந்தால் நீங்கள் உங்கள் ஆற்றலை மறுநிலைப்படுத்துவதற்குள் மிகவும் தாமதமாகி இருக்கும். எனவே மைய நிலையில் இருந்தால் எந்த திசைக்கு வேண்டுமானாலும் தயாராக இருப்பீர்கள். நீங்கள் மைய நிலைலிருந்து வாழும்போது எதிர்பாராத நிகழ்வுகளைக் கண்டு கவலைப்படுவதற்கு பதிலாக, அவற்றைக் கையாளக்கூடிய சிறந்த நிலையில் நீங்கள் இருப்பீர்கள்.
தியானத்தின் பலனை அடைவதற்கு நீண்ட நேரம் அதில் ஈடுபடத் தேவையில்லை. ஐந்து நிமிடங்கள் செய்தாலும் போதும். ஐந்து நிமிடங்களுக்கு உங்கள் சுவாசத்தின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் எண்ணம் வேறு எங்காவது சென்றால் மீண்டும் உங்கள் கவனத்தை உங்கள் மூச்சின் மீது நிலைப்படுத்துதான். நீங்கள் இருக்குமிடம் எதுவானாலும் அது ஞானோதயத்திற்கான இடம்தான். இக்கணம் என்பது முடிவுற்றது. எப்போதுமே நீடித்திருந்ததுதான் இக்கணம்.