அன்றாட வாழ்வில் நாம் செய்ய வேண்டிய நமக்கான வேலைகள் அதிகமே. பொதுவாக நாம் தினமும் என்ன செய்வோம்?
காலை எழுந்திருப்போம், வேலைக்குச் செல்வோம், அங்கே சக மனிதர்களுடன் பழகுவோம், வீட்டுக்கு வருவோம், சாப்பிடுவோம், தூங்குவோம் அவ்வளவுதான். மேலோட்டமாக பார்த்தால் அவ்வளவுதான்,
இப்போது சற்று ஆழமாகப் பார்ப்போம். காலை சீக்கிரம் எழ முடியாமல் தாமதமாக எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு கிளம்புவோம். அங்கே சக மனிதர்களுடன் அன்பாக பேசுவோம் அல்லது எரிந்து விழுவோம். சாப்பாடு அந்த நேரம் பார்த்துதான் செரிக்காமல் இருக்கும். திடிரென்று நெஞ்செரிச்சல் ஏற்படும் . வீட்டுக்கு வந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் சண்டைப் போட்டு மன நிம்மதி இல்லாமல் ஆக்குவார்கள். இரவு சீக்கிரமாக தூக்கம் வராமல் சிரமப்படுவோம். ஆழமாகப் பார்த்தால் இதுதான் உண்மையாக நடப்பவை.
பெரிய பெரிய இலட்சியத்தை அடைவது மட்டுமே வெற்றி ஆகாது. சாதாரண அமைதியான வாழ்க்கை வாழ்வதும் கூட வெற்றித்தான். உண்மையில் வாழ்க்கையில் சில ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் அது வெற்றியின் ரகசியமாக இருக்கும். எப்படி என்றுத்தானே நினைக்கிறீர்கள்?
வாழ்க்கையின் சில ரகசியங்களை அறிந்து அதன்படி செயல்பட்டால் மன நிம்மதியுடன் இருக்கலாம். மனநிம்மதிதானே வெற்றிக்கானப் பாதை?
வாழ்க்கையின் ரகசியங்கள் :
1. புத்தகங்கள் படி!
2. உடலுழைப்பை அதிகரி!
3. குளிர் நீரில் குளி!
4. கொஞ்சமாய் சாப்பிடு!
5. இரவு தூங்குவதற்கு முன் நட!
6. வலித்தால் சிரி!
7. ஆத்திரம் விடு!
8. கேலி செய்தால் புன்னகை தா!
9. அன்புக்கு நன்றி சொல்!
10. கோபத்திற்கு அமைதிக்கொள்!
11. அலட்சியத்திற்கு விலகி நில்!
12. ஏமாற்றாதே! ஏமாறாதே!
13. உறக்கத்தை தள்ளி போடாதே!
14. உன்னுடன் இருப்பவர்களின் வெற்றிக்கு தட்டிக்கொடு! தோல்விக்கு தோள் கொடு!
15. இதமாக இரு!
இந்த பழக்கங்களை வழக்கமாக வைத்துக்கொண்டால் உனக்கே நீ அழகாக தெரிவாய்.
இப்போது அன்றாட வாழ்வை இதன் அடிப்படையில் பார்ப்போம்.
காலை எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் குளித்த பிறகு சிறிது நேரம் புத்தகம் படி. பின் உனக்கான உணவை நீயே செய்துக்கொண்டு வேலைக்கு செல்.
வேலையை சம்பளம் தருகிறார்கள் அல்லது மற்றவர்களுக்காக செய்ய வேண்டும் என்று செய்யாமல் உனக்கான கடமை என்று நினைத்து செய்.கடினமாக உழைப்பதை நினைத்து சலித்துக்கொள்ளாதே. பின் உன் தொழில் உன்னிடம் சலித்துக்கொள்ளும்.
அனைவரிடமும் சமமாக பேசு. அவர் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்? ஏன் இப்படி பேசுகிறார்? போன்ற யோசனைகளை கைவிட்டு அனைவருக்கும் ஏற்றவாரு பழகு.
கோபம் கொள்வதற்கு முன் சற்று யோசி. வேலை செய்த பிறகு பசித்த அளவு சாப்பிடு.
இரவு குளித்து விட்டு சிறிது நேரம் பாடலகள் கேள். பின் மிதமான உணவு எடுத்துக்கொண்ட பிறகு சிறிது நேரம் ஓய்வெடு. பிறகு இயற்கையோடு பேசிக்கொண்டு நடந்தபிறகு சரியான நேரத்தில் உறங்கு.
இப்படி செய்வதால் காலை எந்த கஷ்டமும் இல்லாமல் எழுந்திருக்க முடியும். சரியான நேரத்தில் உறக்கம் வரும். அதேபோல் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனம் நிம்மதி அடையும், மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இந்த அன்றாட வாழ்வின் ரகசியங்களே வெற்றியின் ரகசியமாகும்.