
வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் ஒரு உண்மை (The secret of success) நமக்குத் தெளிவாகப்புரியும்.
ஒரேநாளில் ஒரு மாளிகையை எழுப்பிட முடியாது. ஆயிரம் நாட்களுக்கும் மேலாக செங்கல், மண், சிமெண்ட் என பலவித கலவைகளால் உருவாக்கப்பட்டதுதான் மாளிகை.
இதைப்போலவே, ஒரே நாளில் வெற்றியை பெற்றுவிட முடியாது. ஒரு வெற்றிக்குப்பின்னால் எத்தனையோ விதமான அனுபவங்களும், தோல்விகளும், அவமானங்களும் மறைந்து கிடப்பதை வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
முதன் முதலில் தண்டவாளங்களைக் கண்டுபிடித்தார்கள். அதன் மீது புகைவண்டிகளை இயக்க முடியும் என்று பின்னர் அறிந்தார்கள். இரயில் தண்டவாளங்களின் மீது புகைவண்டி செல்லும்போது பல இடங்களில் தண்டவாளங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. சூரியஒளி தண்டவாளத்தின் மீது படும்போது இரும்பால் செய்யப்பட்ட தண்டவாளங்கள் பாதிப்படைந்தன. இவ்வாறு, மிகப்பெரிய இரயில் போக்குவரத்துக்கு சோதனை அந்தக்காலத்தில் "தண்டவாளம்" வழியாக வந்தது. இரயில்வே என்ஜினியர்கள் அதிர்ந்து போனார்கள், தண்டவாள விரிசலை சரிசெய்யும் விதத்தில், தண்டவாளங்கள் மீண்டும் புதிய வடிவில் வடிவமைக்கப் பட்டது. அதன் பின்னர்தான், ரயில் போக்குவரத்து வளர்ச்சி அடைந்தது.
தோல்வியை சந்திக்கும்போதே, தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்குபவர்கள் வெற்றியின் ரகசியத்தை அறிந்துகொள்கிறார்கள்.
தவறுகள் செய்வதும், அந்தத் தவறுகளை எதிர்காலத்தில் தவிர்ப்பது பற்றி சிந்திப்பதும்" 'கற்றல் (Learning) என்பதன் முக்கிய குறிக்கோளாக விளங்குகிறது.
சைக்கிள் ஓட்டப்பழகும்போது எத்தனையோ முறை கீழே விழுந்திருக்கும் வாய்ப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
விழுவதெல்லாம் அழுவதற்கு அல்ல. எழுவதற்கே" - என்னும் கருத்தை நெஞ்சில் நிறுத்திக்கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
ஒவ்வொரு அனுபவங்களும் நமக்குப் பலவித பாடங்களை கற்றுத் தருகிறது.
தோல்வி வருகின்றபொழுது சிலர் உருளைக் கிழங்கைப்போல உருக்குலைந்து போகிறார்கள். தங்களின் தனித்தன்மையை இழந்துவிடுகிறார்கள். வேறுசிலர் தோல்வியை சந்திக்கின்றபொழுது தங்களின் இளகிய மனதை கடினமாக்கி முரட்டுத்தனமாக மாறிவிடுகிறார்கள். ஆனால், காப்பி கொட்டை தோல்வி வருகின்றபொழுது அந்தத் தோல்வியை ஒரு பிரச்னையாக மாற்றாமல் மாறிவரும் சூழலுக்குஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு சுடுநீரூடன் ஒன்றாகக் கலந்து சுவையான காப்பியாக மாறி, பிறருக்கு பயன்படுகிறது.
இதைப்போலத்தான் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு அந்த மாற்றத்தை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றம் ஏற்படுத்துவதுதான் வெற்றியாளர்களின் நோக்கமாக அமையும்.
தோல்வியை உருவாக்கும் காரணிகளை அறிந்து கொண்டு அவற்றை நீக்க முயற்சி செய்யவேண்டும். தோல்விக்கு காரணமாக அமையும் மனிதர்களை சந்திப்பதை தவிர்க்கலாம்.
தோல்விகள் ஏற்படும் சூழல் உருவானால், அதனை தள்ளிப்போடும் நிலையை எப்படி உருவாக்க வேண்டும்? என்றும் சிந்திக்கலாம்.
தோல்வி நெருங்கிறது என்றால், அதனை எதிர் கொள்வதற்கும், மாற்று வழியில் சந்திப்பதற்கும் மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகம் இருந்தால் வெற்றியின் தூரம் வெகுதொலைவில் இல்லை.