வெற்றிக்கு உதவும் உலகின் சிறந்த கேள்விகள்!

World's Best Questions...
Students and guru...Image credit - pixabay
Published on

வெற்றிக்குத் தேவை ஏட்டுக்கல்வியுடன் அனுபவக் கல்வியும் என்பார்கள். ஒருவர் கல்வியில் மட்டும் சிறந்து மற்ற பண்புகளில் தாழ்ந்திருக்கும்போது கிடைக்கும் வெற்றி நிலைக்குமா?

ஒரு மனிதருக்கு வெற்றி தேவை என்றால் அவரைச் சுற்றி இருக்கும் சூழல்களும் சரியாக அமையவேண்டும். முக்கியமாக அவர் அன்றாடம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் மகிழ்வாக இருக்கும் பட்சத்தில் அவர் வெற்றி உறுதியாகும். ஆம் சூழல்கள் ஒருவரது வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாகிறது.

அந்த குருகுலத்தில் இருந்த மாணவர்களுக்கு கல்வி நிறைவு பெற்று வெளியே செல்லும் காலம் வந்தது. குருவானவர் இறுதி உரைக்காக மாணவர்கள் முன் நின்றார்.

"சீடர்களே நீங்கள் அனைவரும் பலவித அனுபவங்கள் மூலம் இங்கிருந்து கல்வி கற்று செல்கிறீர்கள். ஆனால் உலகத்திலேயே சிறந்த கேள்விகள் என்னவென்று தெரியுமா? இதுவரை கேள்விகளுக்கான பதில்களைதான் நான் உங்களிடம் கற்றுத் தந்துள்ளேன். ஆனால் சிறந்த கேள்விகளை இப்போது உங்களிடமிருந்து நான் கேட்க விழைகிறேன்"  குரு பேசி முடித்ததும் மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். "இது என்ன புதுசா கிளப்புகிறாரே உலகத்திலேயே சிறந்த கேள்விகள் என்று எதை சொல்கிறார் இவர்? "யாருக்கும் புரியாமல் விழித்தனர்.

அப்போது அங்கு வந்த பணியாளர் ஒருவர் "குருவே மன்னிக்கவும் நான் இடையில் புகுந்து பேசுவதற்கு. என் மனதுக்குள் ஏதோ ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது இன்று நான் அமைதியை கொடுத்தேனா? யாராவது ஒருவர் முகத்திலாவது புன்னகையை கொண்டு வந்தேனா? ஆற்றிடும் வார்த்தைகள் தந்தேனா? மனகசப்பையும் கோபத்தையும் விட்டேனா? அல்லது மன்னித்து மறந்தேனா? கபடமற்று நேசித்தேனா? என்ற கேள்விகள் என் மனதை போட்டு அரிக்கிறது. நீங்கள்தான் இதற்கு ஒரு வழியை சொல்ல வேண்டும்"  என்று கேட்டார்.

இதையும் படியுங்கள்:
இருப்பதை பகிர்ந்தால் நிம்மதி வரும்!
World's Best Questions...

மாணவர்கள் ஆச்சரியத்துடன் வந்த பணியாளை நோக்கினர். பின் அதிலிருந்து ஒரு புத்திசாலியான மாணவன் எழுந்து "குருவே உலகத்திலேயே சிறந்த கேள்விகள் என்றால் இப்போது இந்த பணியாள் கேட்ட கேள்விகள்தான் என்று நினைக்கிறோம். நாங்கள் நினைப்பது சரியா?" என்று கேட்க குருவும் "ஆம் இதோ இவருக்கு நான் ஒருமுறை வெற்றி குறித்த ஆலோசனைகளை கற்றுக் கொடுத்தேன். அதில் இவர் கேட்ட கேள்விகளில்  உள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்க சொன்னேன். எப்போது அதை கடைபிடிக்க முடியவில்லையோ அப்போது நமது வெற்றி தூர தள்ளி போய்விடும் என்று அறிவுறுத்தினேன். நீங்களும் இந்தக் கேள்விகளை எப்போதும் மனதில் நிறுத்துங்கள்.

ஒவ்வோரு நாளும் இந்தக் கேள்விகளுக்காக நீங்கள் தரும் பதில்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும். வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் போதாது. சக மனிதர்களை அரவணைத்துச் செல்லத் தெரியவேண்டும். அவர்களின் புன்னகையில் இருக்கிறது உங்கள் வெற்றி."
மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி. ஏதோ பிரம்ம ரகசியத்தை அறிந்தவர்கள் போன்று குருவிற்கு நன்றி சொல்லி சென்றனர். நாமும் உலகின் சிறந்த இந்த கேள்விகளை பதிய வைத்து வெற்றிக் கனியை சக மனிதர்களுடன் ருசிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com