
இறை பக்தர்கள் அன்பே தெய்வம். அன்பே கடவுள் என்று சொல்லிக் கொண்டுஇருக்கின்றார்கள். ஆனால் எத்தனை பேர் அந்த தூய அன்பை தனக்குள்ளும், தன் குடும்பத்தாருடனும், மற்றவர்களுடனும் பகிர்ந்து கொண்டு வருகின்றார்கள்?.
தனக்குத்தான் யாருமே அன்பு கொடுக்கவில்லை என்று மற்றவர்கள் மீது கோபப்பட்டும், குறை கூறியும், வருத்தப் பட்டும், நொந்து கொண்டும் இருக்கிறார்கள். மற்றவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் அன்பைக் கொடுக்கிக்கிறார்கள். அன்பைக்கொடுத்து அன்பை வாங்குகிற பண்டமாற்றாக செய்கிறார்கள்.
இதனால் அன்பின் இலக்கணத்திற்கே இழுக்காகிறது முதலில் யாருக்கு யார் உண்மையான தூய அன்பு கொண்டிருக்க வேண்டும்? அன்பே இறைவன், அன்பே கடவுள் என்று சொன்ன அந்த நபரிடமே அன்பு இல்லை, அன்பு கொடுக்கத் தெரியவில்லை என்றால் இறைவனைப் போற்றிப் பேசியும், துதிபாடியும் என்ன பயன்.
"அருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை" என்பார்கள். ஆனால் அன்பு இல்லாதவர்களுக்கு எவ்வுலகமும் இல்லை என்பதை ஒவ்வொருவரும் அறிந்து, தெரிந்து புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படியென்றால் முதலில் ஒவ்வொருவருக்குள்ளும் உள்மனம் நிறைய அன்பு இருக்கவேண்டும். அந்த அன்பு எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் நிறைந்த உண்மையான உணர்வோடு கலந்து இருக்க வேண்டும். அந்த உண்மையான அன்பை தனக்குள்ளும் அனுபவித்து பிறருடனும் பகிர்ந்து அனுபவித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்கு உண்மையான இறைத்தன்மை உருவாகும். அந்த வேளையில்தான் இறைவனை உணரமுடியும்.
காரணம் மானிடராய் பிறந்த ஒவ்வொருவருமே அன்புக்காக ஏங்குகின்றார்கள். தவிக்கிறார்கள், துடிக்கிறார்கள். அன்பு எங்கே கிடைக்கும் என்று தேடி நாடி ஓடுகின்றார்கள். ஓடிக்கொண்டிருந்த வர்கள், ஓடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர, இவர்கள் தங்கள் அன்பை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை. அதனால்தான் யாருக்குமே யாரிடமிருந்தும் அன்பு கிடைப்பதில்லை.
அன்பு கொடுத்தால்தானே அன்பு கிடைக்கும். உண்மையான அன்பு நிறம், மொழி, ஜாதி, மத பேதம் பார்க்காது. அள்ள அள்ளக் குறையாது. கொடுக்கக் கொடுக்க வற்றாது. அத்தகைய அன்பைக் கொடுக்கக் கொடுக்கத்தான் ஒவ்வொருவருக்குள்ளும் அன்பு பெருகிக் கொண்டிருக்கும். பெருகி வழிந்தோடிக் கொண்டேயிருக்கும். இறை பக்தர்கள் இதை நன்றாக புரிந்து, உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.