
தடுமாறி வீழ்வதில் தவறில்லை; எழுந்திருக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான் தவறு... இந்த வாக்கியத்தை திரு. அப்துல் கலாம் அவர்கள் மிக அழகாக கூறியிருக்கிறார். இந்த வசனத்திற்கான விளக்கத்தை பார்க்கலாமா..?
வாழ்க்கையில் எல்லோருமே எதாவது ஒரு கட்டத்தில் தெரிந்தோ தெரியாமலோ தவறி வீழ்வது சகஜம்தான். ஆனால் அவ்வாறு வீழ்ந்த பிறகு உடனே சமாளித்து கொண்டு எழுவதுதான் புத்திசாலித்தனம். வீழ்ந்து விட்டோமே என்று அதையே நினைத்துகொண்டு எழுந்து கொள்ள முயற்சிக்காமலோ அல்லது எழுவதை பற்றி கொஞ்சம்கூட எண்ணாமலோ இருப்பது மிகவும் தவறாகும். கீழே விழ்ந்துவிட்டால் நாம் தானாகவே முயற்சி செய்தோ அல்லது அடுத்தவர்களின் உதவியை நாடியோ எழுவதுதான் சரியான ஒன்றாகும்.
எதற்காக வீழ்ந்து விட்டோம், ஏன் வீழ்ந்து விட்டோம் என்று நினைத்து கொண்டிருந்தால் நஷ்டம் நமக்குத்தான். உதாரணத்திற்கு நாம் சாலையில் நடந்து செல்லும்போது கால் இடறி கீழே வீழ்ந்துவிட்டால் என்ன செய்வோம்? தானாகவோ அல்லது அடுத்தவர்களின் உதவியுடனோ எழுந்திருக்க முயற்சி செய்வோம்.
பிறகு காயம் எதாவது ஏற்பட்டிருந்தால் மருத்துவரை நாடி அதற்கான சிகிச்சையை பெறுவோம் இல்லையா.. அதைப்போல, ஒரு வியாபாரத்திலோ அல்லது தொழிலிலோ தீடிரென சரிவு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்? அதையே நினைத்துகொண்டு உட்கார்ந்திருந்தால் பிரச்னை தீர்ந்துவிடுமா? வீழ்ச்சிகான காரணத்தை தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
அப்படி காரணம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, மேற்கொண்டு அந்த நஷ்டத்தை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதை, சிறந்த ஆலோசகர்களின் உதவியையோ அல்லது நண்பர்களின் உதவியையோ நாடி கேட்டு கொண்டு சரிசெய்ய முயற்சிப்பதுதான் சரியான தீர்வு. அதை விட்டு வீழ்ந்த நிலையிலையே அமர்ந்துகொண்டு யோசித்து கொண்டிருந்தால் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம்தான் வருமே ஒழிய பிரச்னை தீராது.
இதைப் போலவே மாணவர்களும் சிந்திக்க வேண்டும். ஒரு தேர்விலோ அல்லது ஒரு வகுப்பிலோ தோல்வி அடைந்து விட்டால், அதை பற்றியே எண்ணி கொண்டிருக்காமல், இனி எப்படி படிக்கலாம், என்ன தவறு செய்தோம்? என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தால்தான் அடுத்த கட்டத்தில் வெற்றி அடையமுடியும்.
ஒரு மரத்திலிருந்து கனியானது பழுத்து அதிலிலுள்ள ஒரு விதையானது கீழே விழுந்துவிட்டது என வைத்துகொள்வோம். அந்த விதை கீழே விழுந்து விழுந்துவிட்டது என்று எண்ணி அப்படியே நிலத்திலியே இருந்து விடுகிறதா? இல்லையே.. அந்த விதையானது பூமியிலுள்ள சத்துகளையும் கனிமங்களையும் உறிஞ்சிகொண்டு மறுபடியும் ஒரு புதிய கன்றாக உருவெடுக்கிறது இல்லையா?? பிறகு மெது மெதுவாக வளர்ந்து பெரிய மரமாகி பூக்களையும் கனிகளையும் கொடுக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அந்த விதையின் எழுச்சிதானே.
ஆகவே நிலை தடுமாறி விழுவது என்பது வாழ்க்கையில் எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அதிலிருந்து மீள எண்ணுவதுதான் ஒவ்வொருவரின் தனிப்பட்ட மற்றும் வேறுபட்ட சிந்தனையாகும். அவ்வாறு எழுவதற்காக எண்ணினால் நல்லது இல்லை என்றால் மேற்கொண்டு உங்களால் ஒருபோதும் முன்னேற முடியாது.