இன்றைய காலத்தில் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாகவும், குறிப்பாக அமெரிக்க இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ். தற்போது அதிகப்படியான தொழில் முனைவோர்கள் உருவாவதற்கு இவர்தான் காரணமாக இருக்கிறார். இவரது அமேசான் நிறுவனம் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யமாக எப்படி உருவானது என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1990களின் தொடக்கத்தில் இணையம் என்ற ஒன்று இவ்வுலகை மாற்றத் தொடங்கியது. இதன் மீது நம்பிக்கை வைத்த ஜெஃப் பெசாஸ் இணையத்தில் ஒரு தொழிலைத் தொடங்க விரும்பினார். அந்த நேரத்தில் இணையத்தில் என்னென்ன பொருட்களை வாங்க முடியும் என அவர் தேடியபோது, வெறும் 20 பொருட்கள் மட்டுமே இணையத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி இருந்தது. அதில் அவர் புத்தக விற்பனையை தேர்வு செய்து, இணையத்தில் புத்தகங்கள் விற்பதற்காக 'கடாப்ரா' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இதற்காக வெறும் 10,000 டாலர்கள் முதலீடு செய்து, ஒரு சிறிய அறையில் தன் நிறுவனத்தைத் தொடங்கினார். அச்சமயத்தில் மக்களுக்கு அந்த நிறுவனத்தின் பெயரை உச்சரிக்க கடினமாக இருந்தது. எனவே அதை மாற்ற நினைத்த ஜெஃப் பெசாஸ், அமெரிக்காவிலேயே மிகப்பெரிய அமேசான் ஆற்றின் பெயரை தன் பிராண்டுக்கு வைத்தார். இது எதிர்காலத்தில் மிகப்பெரிய புத்தக விற்பனை தளமாக இருக்கும் என நினைத்தார்.
இந்த பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் பிரபலம் அடையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இணையம் வழியாக அதிகப்படியான புத்தக ஆர்டர்கள் குவியத் துவங்கியது. பின்னர் மக்களிடம் நேரடியாக முதலீடுகளைக் கோரி பங்குச் சந்தையில் இறங்கினார். இதனால் 1995இல் ஒரு மில்லியன் ஆன்லைன் ஆர்டர்களைப் பூர்த்தி செய்தது அமேசான் நிறுவனம். இதனால் பூமியின் மிகப்பெரிய புத்தகக் கடை என அமேசான் தன்னை அழைத்துக் கொண்டது.
இதைத்தொடர்ந்து எலக்ட்ரானிக் பொருட்கள், குறுந்தகடுகள் என கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பொருட்களும் அமேசான் தளத்தின் உள்ளே நுழைந்தது. அதன் பிறகு அவர் அமேசான் பிரைம் திட்டத்தை செயல்படுத்தினார். அதன் பின்னர் அமேசானில் புத்தகங்கள் விற்பனை செய்வது மூலம் கிடைத்த வாடிக்கையாளர்களை தக்கவைக்க, புத்தகங்களை இணையத்தில் படிக்கும் அமேசான் கிண்டல் என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்தார். இதனால் புத்தக வாசிப்பையே நிறுத்தியவர்கள்கூட அமேசான் கிண்டில் பயன்படுத்தி தனது வாசிப்பைத் தொடர்ந்தனர்.
அதன் பிறகுதான் அமேசான் பிரைம் ஓடிடி தளம் அறிமுகமானது. இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களை அவர் தொடங்கினார். அவரது வளர்ச்சிப் பாதையில் பல சர்க்கல்கள், போட்டிகளைக் கடந்து தற்போது அமேசான் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பு 252 பில்லியன் டாலர்களை எட்டி உலகிலேயே தவிர்க்க முடியாத சாம்ராஜியமாக உருவாகியுள்ளது.
ஜெஃப் பெசாஸின் சிறிய மாற்று சிந்தனை மற்றும் கடினம் உழைப்பு இன்றளவும் அவர் தன்னுடைய பயணத்தை வெற்றிகரமாகத் தொடர உதவியுள்ளது.