

நாம் எல்லோருமே வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள், யாரோ ஒருவரை முழுமையாக நம்பி ஏமாந்திருப்போம். "அவர் சொன்னா கரெக்டாதான் இருக்கும்," என்று நினைத்து பணத்தையோ, நேரத்தையோ இழந்த பிறகுதான், "அடடா, நம்மள ஏமாத்திட்டாங்களே" என்று புலம்பி இருப்போம்.
இந்தப் பதிவில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எப்படி நம் மனதை மாற்றி, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி மிகத்தெளிவாகப் பார்க்கலாம்.
CONFIDENCE எனும் மாயை!
நம்மை ஏமாற்றுபவர்களிடம் இருக்கும் ஒரு முக்கிய ஆயுதம், Over Confidence. அவர்கள் சொல்வது பொய்யாகவே இருந்தாலும், அதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், ஆணித்தரமாகச் சொல்வார்கள். "நான் சொல்றதை மட்டும் நம்புங்க, கண்டிப்பா ஜெயிச்சுடலாம்," என்று அவர்கள் பேசும்போது, நாமும் அறியாமல் அவர்கள் மீது ஒரு நம்பிக்கை வைப்போம்.
ஆனால், உண்மையிலேயே புத்திசாலிகள், நேர்மையானவர்கள் எப்போதுமே அப்படிப் பேசமாட்டார்கள். "என் அறிவுக்கு எட்டிய வரை இது சரி, ஆனால் நீங்களும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்," என்றுதான் சொல்வார்கள். எனவே, ஒருவர் அதீத நம்பிக்கையுடன் பேசினால், உடனே எச்சரிக்கையாகி விடுவது நல்லது.
டன்னிங்-குரூக்கர் எஃபெக்ட் (Dunning-Kruger Effect)!
இது ஒரு சுவாரஸ்யமான உளவியல் தத்துவம். அறிவு குறைவாக இருப்பவர்களுக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பு அதிகமாக இருக்குமாம். ஆனால், உண்மையிலேயே அறிவு அதிகம் இருப்பவர்களுக்கு, தனக்குத் தெரிந்தது குறைவு என்ற எண்ணம் இருக்குமாம். நம்மைச் சுற்றி இருப்பவர்களில் பலர், அரைகுறையாகத் தெரிந்து வைத்துக்கொண்டு, தன்னை ஒரு பெரிய நிபுணர் போலக் காட்டிக்கொள்வார்கள். நாமும் அவர்களின் அந்த பில்டப்பை பார்த்து மயங்கிவிடுவோம். இதுதான் 'டன்னிங்-குரூக்கர் எஃபெக்ட்'. எனவே, இனிமேல் யாராவது "எனக்கு எல்லாம் தெரியும்" என்று சொன்னால், கொஞ்சம் உஷாராக இருங்கள்.
ஹாலோ எஃபெக்ட் (Halo Effect)!
அடுத்து, நம்மை ஏமாற்றும் இன்னொரு விஷயம் 'ஹாலோ எஃபெக்ட்'. அதாவது, ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்தே அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது. ஒருவர் கோட்-சூட் போட்டுக்கொண்டு டிப்டாப்பாக வந்தால், அவர் புத்திசாலி என்று நினைத்துக்கொள்வோம். அழுக்குச் சட்டை போட்டிருந்தால், அவரை மதிக்கமாட்டோம்.
இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டுதான் பலர் நம்மை ஏமாற்றுகிறார்கள். "நான்தான் அத்தாரிட்டி, நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்," என்ற தோரணையில் அவர்கள் பேசும்போது, நாம் கேள்விகள் கேட்கத் தயங்குகிறோம்.
ஒருவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
யாராவது உங்களிடம்தான் சொல்வதற்கு "100% கேரண்டி," என்று அடித்துச்சொன்னால் உஷாராகுங்கள்.
கேட்பதற்கே ரொம்ப இனிமையாக, நம்ப முடியாத அளவுக்கு ஒரு விஷயம் இருந்தால், அது பெரும்பாலும் பொய்யாகத்தான் இருக்கும்.
நீங்கள் ஏதாவது கேள்விகள் கேட்டால், அதற்குப் பதில் சொல்லாமல், உங்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கினால், அவர்கள் சரியான ஆட்கள் இல்லை என்று அர்த்தம்.
உங்கள் வாழ்க்கையில் முடிவெடுக்கும் உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்காதீர்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், என்று நம்பி முடிவெடுப்பதை விட, நீங்களே சிந்தித்து, ஆராய்ந்து முடிவெடுப்பதுதான் சிறந்தது. தப்பான முடிவாகவே இருந்தாலும் பரவாயில்லை, அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளலாம்.