

வெற்றி அனைவருக்கும் எளிதாக கிடைத்துவிடுமா? இல்லை. ஏனெனில் வெற்றியைத்தேடி இறுதிவரை செல்வோர் சதவீதம் குறைவே. வெற்றிக்கு ஏதாவது விதிமுறைகள் உண்டா? இல்லை. ஏனெனில் ஒவ்வொருவரின் சூழலும் ஆர்வமும் வெவ்வேறு மாதிரி என்கிறபோது விதிமுறைகளும் மாறும்.
ஆனால் வெற்றிபெறத் துடிக்கும் அனைவருக்கும் பொதுவான ஒரு விதிமுறை உள்ளது. அது என்ன தெரியுமா?
கிரேக்க தத்துவஞானி சாக்ரடிஸ் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். அவரின் தத்துவங்களை பின் பற்றிய வெற்றியாளர்கள் பலர். 2000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அவரின் தத்துவங்கள் நாகரிகம் மாறிவிட்ட இந்த காலத்திலும் அனைவருக்கும் பொருந்துவதுதான் வியப்பு. அதில் ஒன்று இங்கு.
ஒரு முறை சாக்ரடீஸிடம் வந்த ஒரு சீடன் வெற்றிக்கான சூத்திரம் இருக்கிறதா? என்று கேட்டார். சாக்ரடீஸ் அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் "இதோ இந்த ஆற்றக் கடந்துகிட்டே பேசினால் நேரம் மிச்சம் வா" என்று அழைத்தார். சீடரும் சரி என்று இருவரும் ஆற்றைக் கடக்கத் துவங்கினர். 6 அடி உயரமான சாக்ரடீஸ் எளிதாக அந்த ஆற்றைக் கடக்க முடிந்தது. ஆனால் உயரம் குறைவான சீடரால் ஒரு கட்டத்துக்கு மேல் நீந்த முடியவில்லை. தண்ணீர் அவரின் கழுத்து வரை வந்துவிட்டது.
அப்போது உடனிருந்த சாக்ரடீஸ் திடீரென சீடர் எதிர்பாராத வகையில் அவருடைய தலையை நீருக்குள் போட்டு அமுக்க ஆரம்பித்தார். மூச்சுத் திணறிய சீடர் ஒரு கட்டத்தில் திமிறி எழுந்து நீச்சல் அடித்து சாக்ரடீஸ் வருமுன்னே கரைக்குபோய் சேர்ந்தார்.
பின் சாக்ரடீசை பார்த்து அந்த சீடர் "நீங்க என்னவோ வெற்றிக்கு நிறைய சூத்திரங்கள் சொல்லக்கூடிய தத்துவஞானி என்று நம்பி தான் நான் உங்களிடம் வந்து ஆலோசனை கேட்டேன். நீங்கள் என்னவென்றால் என்னையே சாகடிக்க பார்க்கிறீர்களே?" என்று கோபத்துடன் கேட்க அதற்கு சாக்ரடீஸ் பொறுமையாக பதில் சொன்னார்.
"உன்னை நான் தண்ணீரில் மூழ்கடித்தபோது நீ திமிறி எழுந்து நீச்சல் அடித்தாய். அப்போது உனக்கு மூச்சுவிட காற்று தேவைப்பட்டது. காற்று இருந்தால்தான் நீ உயிர் வாழ முடியும். அந்த காற்றுக்காகத்தானே நீ திமிறி நீச்சல் அடிக்க ஆரம்பித்தாய்? உயிர் வாழ எப்படி காற்று முக்கியமோ அதுபோல வெற்றிக்கு முக்கியமானது உன்னுடைய மனசுக்குள் எரியும் நெருப்பு. உனக்குள்ளே இருக்கிற அந்த பொறி அணையாமல் இருந்தாலே வெற்றிதான் உனக்கு. எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அந்த பொறியை அணையவிடாமல் உன் இலக்கு நோக்கி முயற்சித்தால் வெற்றி உறுதி. இதுதான் வெற்றியின் ரகசியம்" என்றார்.
சீடர் புரிந்து கொண்டு சாக்ரடீசிற்கு நன்றி சொன்னார். சாக்ரடீஸ் சொன்ன இந்த தத்துவம் அனைவருக்கும் பொதுவானதே. ஆம் இலக்கு இருந்தால் மட்டும் போதாது. அந்த இலக்கை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்றும் மறையாத நெருப்பு ஒன்று நம் மனதிலே இருந்து கொண்டே இருக்கவேண்டும். எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழல் அல்லது தடைகள் வந்தாலும் அந்த நெருப்பை மட்டும் அணையாமல் காத்தால் மட்டுமே நம்மால் வெற்றிக் கோப்பையை ஏந்த முடியும்.