இதுவும் கடந்து போகும்!

Motivational articles
Motivational articles
Published on

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வந்து கொண்டிருக்கும. துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமலும், இன்பத்தைக் கண்டு அகந்தை கொள்ளாமலும் நாம் நமது மனதை சலனமற்றதாகவும் விசாலமானதாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

அத்தகைய சலனமற்ற மனதை அடைவதன் மூலம் ஒரு மனிதன் ஞானி ஆக முடியும். 

ஒரு கதையைப் பார்ப்போம்.

ஒரு அரசன் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தான். அப்பொழுது அந்த நாட்டிற்கு ஒரு ஞானி விஜயம் செய்தார்.‌ அந்த அரசன்அந்த ஞானியைச் சந்தித்தான். அப்பொழுது அந்த ஞானி அவனுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசளித்தார். 

"அரசரே! இந்த மோதிரத்தில் ஒரு பெட்டகம் உள்ளது.‌ நீங்கள் மிகவும் துன்பமாக இருக்கும் பொழுதும், மிகவும் இன்பமாக இருக்கும் பொழுதும் இந்த மோதிரத்தைப் பிரித்து பாருங்கள். மற்ற நேரங்களில் பிரிக்க வேண்டாம். அது உங்களுக்கு சலனமற்ற மனதை கொடுக்கும்" என்றார் ஞானி.

அரசனும் அந்த மோதிரத்தை வாங்கி அணிந்து கொண்டான். சில காலம் சென்றது. எதிரி நாட்டு மன்னன் அரசன் மீது படையெடுத்து அரசனை வெற்றி கொண்டான். ‌தோற்ற அரசனை தனது படையைக் கொண்டு துரத்தினான்.

தனது படையை பிரிந்த அரசன் காடு மேடுகளில் எல்லாம் குதிரையைச் செலுத்தி எதிரி நாட்டு படைகளிடமிருந்து தப்பிக்க சென்றான். அப்போது ஒரு மலையின் உச்சியில் மலை முகடுக்கு முன்னர் அவனது குதிரை வந்து நின்றது. தனக்கு முன்பு அதள பாதாளம். பின்பு எதிரி நாட்டுப் படை. தனது காலம் முடிந்து விட்டது என எண்ணினான். தனக்கு நேர்ந்த துன்பத்தை எண்ணி துவண்டான்

அப்போது சூரிய ஒளிபட்டு அவனது கையில் இருந்த மோதிரம் பிரகாசித்தது. உடனே ஞானி சொன்ன வாக்கு நினைவுக்கு வந்தது. அந்த மோதிரத்தைப் பிரித்தபோது அங்கு ஒரு சிறிய துணியில் பின்வரும் வாசகம் இருந்தது.

இதுவும் கடந்து போகும்… 

துவண்ட மன்னன் உடனே நம்பிக்கை கொண்டு வேறு திசையில் பயணித்து ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். 

மன்னனை தேடிய எதிரி நாட்டுப்படை மன்னனைக் காணாமல் பின்வாங்கியது. தப்பித்த மன்னன் மறுபடியும் தனது படைகளைத் திரட்டி தனது நாட்டை கைப்பற்றிய எதிரி நாட்டு மன்னனின் படையை வெற்றி கொண்டான். மறுபடி தனது நாட்டின் அரசனானான்.

இதையும் படியுங்கள்:
தயங்காமல் பாராட்டி உற்றசாகப்படுத்துங்கள்!
Motivational articles

தனது கோட்டைக்குள் மறுபடி பரிவாரங்களுடன் நுழைந்த பொழுது அவனுக்கு மக்கள் மாலை சூடி வரவேற்றனர். அவனுக்கு இனிப்புகள் ஊட்டினர். இன்பமான அந்த தருணத்தில் தனது நிலையை எண்ணி மகிழ்ச்சி அடைந்த அவனது மனதில் தன்னைப் பற்றி அகந்தை வந்தது. அப்போது மறுபடியும் சூரிய ஒளிபட்டு அந்த மோதிரம் பிரகாசித்தது. ஞானி சொன்ன வாசகம் நினைவுக்கு வந்தது.

மறுபடி அந்த மோதிரத்தைப் பிரித்து அந்த வாசகத்தைப் படித்தான். 

இதுவும் கடந்து போகும்... 

அரசனின் மனதில் மறுபடி அமைதி குடிகொண்டது. இன்ப துன்பங்களைக் கண்டு உணர்ச்சிவயப்படாமல் சலனமற்று அவற்றை நோக்கும் எண்ணம் அவனுக்கு வந்தது. 

நாமும் இன்ப துன்பங்களைச் சமமாக பாவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக் கொள்வதன் மூலம் நாமும் ஞானியாக முடியும்.

நாமும் ஒருமுறை படிப்போம். 

ஞானி கொடுத்த வாசகம் - இதுவும் கடந்து போகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com