
காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்வது வரை, நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களுக்காக செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நாம் நமது எண்ணங்களுக்கு ஏற்ப பல நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டாலும், ஒரு சில சமயங்களிலும் நேரங்களிலும், சின்ன சின்ன நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க மறந்து விடுகிறோம்.! அல்லது தட்டிக் கழித்து விடுகிறோம்..!
சிறு துளியே பெருவெள்ளம் என்பார்கள். அதேபோல், சிறிய பழக்கவழக்கங்களே பெரிய மாற்றத்திற்கும், மன அமைதிக்கும் வழி வகுக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. கட்டுப்பட்டு செய்வதை விட, உட்பட்டு மனமகிழ்ச்சியோடு சிறிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
பெரிய தேருக்கு ஒரு சிறிய அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அதேபோல், வாழ்க்கையில் பெரிய சாதனைகளை புரிவதற்கு சிறிய பழக்கவழக்கங்கள் அடித்தளமாக அமைகின்றன. இது எல்லோருக்கும் புரிவதில்லை! இப்போது நாம் கைவிட்ட அல்லது ‘இத செய்றதுனால நமக்கு என்ன கிடைக்கப் போகுது’ என்று எண்ணி தட்டிக்கழித்த ஒரு சில சிறிய பழக்கவழக்கங்களை இப்போது பார்ப்போம்.
•குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட கற்றுக்கொள்ளுங்கள். மக்கும் மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுங்கள். இதன் மூலம் பகுத்தறியும் சிந்தனை மேம்படுகின்றன.
•வீட்டில் ஆளில்லாமல் இருக்கும் அறையில் ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறியை அணைக்க கற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் நமக்கு எது தேவை தேவையில்லை என்பதை தீர்மானிக்க முடிகிறது.
•சாலையில் செல்லும்போது, தண்ணீர் ஒழுகும் குழாயைக் கண்டால் திருகை சரி செய்து தண்ணீரை நிறுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் வாழ்வில் தேவையான சிக்கனத்தை கடைபிடிக்க மறக்க மாட்டோம்.
•டிவி பார்த்துக்கொண்டோ, போனை பார்த்துக்கொண்டோ அல்லது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டோ சாப்பிடாமல், தரையில் உட்கார்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் செரிமான மண்டலம் ஆரோக்கியமடையும்.
•வீட்டிற்கு வருபவர்களை உள்ள வாங்க என்று அன்புடன் அழையுங்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து கீழ்ப்பணிந்து நடந்து கொள்ளுங்கள். இதன் மூலம் நல்ல நிலையில் கட்டளையிடும் அதிகாரம் தானாக வரும்.
•புறம் பேசுவதை நிறுத்துங்கள். இதன் மூலம் நமக்கு நேரம் மிச்சமாகும்.
•தெரிந்தவர்களை கடந்து செல்லும்போது ஒரு சிறு புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். இதன் மூலம் நமக்குள்ளே ஒரு நல்ல பரவசம் ஏற்படும்.
•ஒரு செயலை எவ்வளவு நேரத்தில் சீக்கிரமாக முடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, அந்த செயலை எவ்வளவு நன்றாக முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
•தினமும் காலையில் பறவைகளுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள். இதன் மூலம் நமக்குள் மன நிம்மதி உருவாகும்.
•கடைக்குச் சென்றால் துணிப்பையை எடுத்துச் செல்லுங்கள். அதேபோல் டீக்கடைக்கு சென்றால் ஒரு செம்பை எடுத்துச் செல்லுங்கள். இதனைப் பின்பற்றினால் சுற்றுச்சூழல் மேம்படும்.
•போனிலே நேரத்தை கழிக்காமல், புத்தகத்தை எடுத்து குறைந்தது ஐந்து பக்கங்கள் வாசிப்பது, மனதில் தோன்றியதை (கதை, கவிதை, கட்டுரை) எழுதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதன் மூலம் சிந்திக்கும் திறன் அதிகமாகும்.
இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்! மன அமைதியை பொறுத்துதான் உடல் ஆரோக்கியம் மேம்படும். எந்த ஒரு பெரிய செயலை செய்தாலும், நாம் கற்றுக்கொண்ட சிறிய பழக்கவழக்கங்களும், பக்குவமும் நிதானமும்தான் கைக் கொடுக்கும்!
வார்த்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கின்றன. வடிவத்திற்கும் பிம்பங்கள் இருக்கின்றன. அதேபோல் ஒருவரின் வாழ்க்கைக்கும் மன அமைதி இருக்கின்றன. அது வேறு எங்கேயும் இல்லை நமக்காக நம்மிடமே இருக்கிறது!
இன்று முதல் சின்ன சின்னதாய் தொடங்குவோம், அது சீக்கிரம் கை கொடுக்காவிட்டாலும், கண்டிப்பாக வாழ்க்கையில் சிறக்க வைக்கும்!