இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கு மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகள் பொதுவாகவே இருக்கிறது. இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு மனோரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நாம் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். இந்தப் பதிவில் மனோ ரீதியான மற்றும் உணர்வு ரீதியான வலிமையை அதிகரிக்க உதவும் சில வழிகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
மனுரீதியான வலிமை என்பது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை எதிர்கொள்ளவும், பிரச்சனைகளை தீர்க்கவும், நேர்மறையான மனப்பான்மையை பராமரிக்கவும் உதவும் ஒரு திறன். உணர்வு ரீதியான வலிமை என்பது நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிர்வகிக்கவும் சவாலான சூழ்நிலைகளில் நம்மை தைரியமாக வைத்திருக்கவும் உதவும் ஒரு திறன்.
மனோ ரீதியான வலிமையை அதிகரித்தல்:
நேர்மறையான எண்ணங்கள் மற்றும் செயல்கள் நம் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, மனோரீதியான வலிமையை அதிகரிக்க நீங்கள் நேர்மறையான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் திறமைகள் மற்றும் வலிமைகளை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்துக் கொள்ளும்போது, நம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரித்தால் மனவலிமையுடன் இருக்கலாம்.
மன அழுத்தத்தை நிர்வகிக்கும் யோகா, தியானம், சுவாசப் பயிற்சி போன்றவை உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவும். இத்துடன் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மேலும், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களுக்கு முழு பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இத்துடன், உங்கள் உடல் நலனில் கவனம் செலுத்தி போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதால், மன ஆரோக்கியம் மேம்படும்.
உணர்வு ரீதியான வலிமையை அதிகரித்தல்:
நம் உணர்வுகளை சரியாக அடையாளம் கண்டு அவற்றை புரிந்து கொள்ளும்போது அவற்றை நம்மால் சிறப்பாக நிர்வகிக்க முடியும். நமது உணர்வுகளை அடக்கி வைக்காமல் சரியான முறையில் அவற்றை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
கோபம், வருத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் வரும்போது அவற்றை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்தவும் நிர்வகிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். கடந்த காலத் தவறுகள் மற்றும் வருத்தங்களை விட்டுவிட்டு, தற்போது உங்களால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது மன அமைதியை ஏற்படுத்தும். மேலும், உங்களுக்கு தீங்கு இழந்தவர்களுக்கு கருணை காட்டுவது உங்களின் உணர்வு ரீதியான வலிமையை அதிகரிக்கும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை உங்கள் அன்றாட வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம், மிகவும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை நீங்கள் வாழ முடியும்.