
வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு எளிதான வழிகள் நிறைய உள்ளன. முதலில் நம்முடைய வாழ்க்கையில் எந்தத் துறையை நோக்கி செல்ல விரும்புகிறோம் என்பதை சரியாக அறிந்துகொள்ள வேண்டும். பாதையை நேராக்கினால் வழிகள் தானாக கிடைத்துவிடும். அடுத்து இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அதில் முதலாவதாக நம் நினைவுக்கு வருவது கடினமாக உழைக்க வேண்டியது தான். இலக்கை நிர்ணயித்தவுடன் அதற்காக உழைக்க தயாராக வேண்டும். நாம் செயலாற்ற வேண்டிய இலக்கின் பாதையில் இருந்து விலகாமல் பயணிக்க ஆரம்பிக்க வேண்டும்.
நாம் அடைய வேண்டிய இலக்கை அடைவதற்கு நம்மை எப்பொழுதும் உந்துதலாக வைத்திருக்கப் பழகவேண்டும். உந்துதலை உயர்வாக வைத்திருக்க என்ன செய்ய விரும்புகிறோமோ அதை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஊக்கமளிக்கும் வாசகங்களை படிப்பதும், உந்துதலை ஏற்படுத்தும் வீடியோக்களை பார்ப்பதும், ஊக்கமூட்டும் புத்தகங்களை படிப்பதும் நம் இலக்கை நோக்கி செல்வதற்கும், அதை அடைவதற்குமான வழியை எளிதாக்கும். முக்கியமாக நம்பிக்கையை இழக்காமல் இருப்பது அவசியம்.
நம் இலக்கை அடைய முயற்சிக்கும் பொழுது சில சமயம் தோல்வி ஏற்படுவது சகஜம்தான். தோல்வியும் வெற்றியின் ஒரு பகுதி தான் என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து இலக்கை அடைய முன்னேறிச் செல்வது அதை அடைவதற்கான எளிதான வழியாகும்.
எடுக்கும் செயலில் தோல்வி ஏற்பட்டால் அதற்காக வகுத்த திட்டத்தை மாற்றலாமே தவிர இலக்கை ஒருபொழுதும் மாற்றக்கூடாது. சவால்களை எதிர்கொள்வதும், நம்பிக்கையுடன் முன்னேறுவதும் முக்கியம். அதற்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை என்றும் கைவிடக்கூடாது. விவேகானந்தர் கூறியது போல் நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை தான். எடுக்கும் செயலில் தோல்வி ஏற்பட்டாலோ அல்லது தடைகள் வந்தாலோ அவற்றைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டுமே தவிர துவண்டு போய்விடக் கூடாது.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை மனதில் கொண்டு இலக்கை நோக்கி நகர வேண்டியதுதான். குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொண்டு அவற்றை அடைவதற்கு தவறாது முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். இலக்கை அடைவதற்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தால் மட்டும் போதாது. அதை அடைவதற்கு அயராது உழைப்பதும், அதற்காக நேரம் செலவழிப்பதும், அதனை அடைந்தே தீர வேண்டும் என்ற வலுவான எண்ணமும் வேண்டும். நம் கனவுகளுக்கு வடிவம் கொடுத்து தொடர்ந்து போராடி கனவை நினைவாக்க முயற்சிக்க வேண்டும்.
இலக்கை அடைவதற்கு எளிதான வழி நம் முழு சக்தியையும், ஆர்வத்தையும் அதில் செலுத்த வேண்டியதுதான். அப்படி செய்யும் பொழுது ஒரு போதும் நாம் சலிப்படைய மாட்டோம். இலக்கை அடைவதற்கு நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு ஒரு கால அட்டவணையை உருவாக்கி அதை கண்டிப்பாக பின்பற்ற இலக்கை அடைவது மிகவும் எளிதாகிவிடும்.
இலக்கை அடைவதற்கு முதலில் அதை மனதில் விருப்பமாக கொண்டு வரவேண்டும். பின்பு அதை அடைவதற்கான நுட்பத்தை ஆராய வேண்டும். இலக்கை அடையத் தேவையான விஷயங்களை தேடிப் பெற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கடினமான முயற்சியும், உழைப்பும் இருந்தால் இலக்கை எளிதாக அடையலாம்.
விரும்பிய இலக்கை அடைவதற்கு வாழ்த்துக்கள்!