
உங்கள் வாழ்க்கையில் நல்ல முடிவுகளையும் நல்ல முயற்சிகளையும் எடுக்கும் தருணம் இதுவே. எனவே சரியான நேரத்திற்காக காத்திராமல் நல்ல விஷயங்களை உடனடியாகத் தொடங்குங்கள்.
"கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்பதற்கிணங்க உங்களுடைய இளமை பருவத்திலேயே உங்களுடைய கடமைகளையும் கனவுகளையும் நனவாக்கிக்கொள்ள அதற்கான முயற்சிகளை எடுங்கள்.
எனது வாழ்க்கை இப்படி இருந்திருந்தால் நன்றாக இருக்கும், நான் இன்னார் மகனாக பிறந்திருந்தால் இப்படி வாழ்ந்திருப்பேன், என்னிடம் அவனிடம் இருப்பதுபோல பணம் இருந்தால் நான் எங்கேயோ இருந்திருப்பேன், எனக்கு அந்த நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பகல் கனவு காண்பதை விடுத்து, இவற்றையெல்லாம் அடைவதற்கு ஏதுவான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" கற்றலுக்கு ஒரு முடிவு என்பதே இருக்கக்கூடாது. வாழ்க்கையில் முடிந்தவரை புதிய விஷயங்களை தானாக முன்வந்து கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களின் உடல்நலத்தின் மீது அக்கறை காட்டுங்கள். உண்மையில் சொல்லப்போனால் நீங்கள் இறக்கும்வரை உங்களுடன் இருக்கப்போவது உங்கள் உடல் மட்டும்தான். அதனைப் பேணிப் பாதுகாத்தால் இறக்கும்வரை இன்பமே.
வாழ்க்கையை எப்போதும் ஒரே இடத்தில் கழிக்காதீர்கள். எப்போதும் ஓடுகிற நீருக்குதான் ஆற்றல் அதிகம். புதிய முயற்சிகளை மேற்கொண்டு தோற்றுப் போங்கள், ஏனெனில் நமக்கு ஏற்படும் தோல்விகளைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியாது.
எனவே முயற்சி செய்யுங்கள்,
தோற்றுப் போங்கல்,
ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுந்து நின்று, வெற்றி காணும் வரை முயற்சித்துக் கொண்டே இருங்கள்.