உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னை வந்துவிட்டால், கடவுள் ஏன் நமக்கு உதவுவதில்லை? என்று கடவுளை குறை கூறிக்கொண்டு அவரை திட்டித்தீர்ப்பவரா நீங்கள்? அப்போ இந்த கதையை கண்டிப்பாக படியுங்கள்.
ஒரு ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும்போது அவருடைய ஆட்டோ ஒரு பெரிய பள்ளத்தில் மாட்டிக்கொள்கிறது. ஆட்டோ ஓட்டுனர் வெளியிலே வந்து பார்க்கும்போது, ‘நம் ஒருவரால் மட்டுமே இந்த ஆட்டோவை வெளியிலே தூக்கிவிட முடியாது. யாராவது கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்’ என்று நினைக்கிறார்.
யாராவது அந்த வழியாக வந்து தனக்கு உதவ மாட்டார்களா? என்று நினைத்து ரொம்ப நேரம் அதே இடத்தில் நிற்கிறார். ஆனால், அந்த பக்கம் ஆள் நடமாட்டமேயில்லை. கடவுளிடம், 'எனக்கு எப்படியாவது உதவி செய்யுங்கள்’ என்று வேண்டுகிறார். அப்போதும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. கடைசியாக, வேறு வழியேயில்லை. நாம்தான் இறங்கி நேரடியாக முயற்சி செய்யவேண்டும். யாரை நம்பியும் பிரயோஜனம் இல்லை என்று நம்பிக்கையுடன் ஆட்டோவை கயிறுக்கட்டி வெளியே இழுக்க ஆரம்பிக்கிறார்.
சில நிமிடங்கள் கடுமையாக முயற்சி செய்கிறார். திடீரென்று அந்த ஆட்டோ பள்ளத்திலிருந்து மேலே வருகிறது. பின்னாடி பார்த்தால், ஒரு வயதானவர் இவருக்கு உதவி செய்திருக்கிறார். இதை பார்த்த அந்த ஆட்டோக்காரர் அந்த கடவுளே எனக்கு உதவி செய்யவில்லை. ஆனால், யாரென்று தெரியாத நீங்கள் எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி என்று கூறுகிறார்.
அப்போது அந்த வயதானவர் சொன்னாராம், 'நீ முயற்சி செய்ததால்தான் அந்த கடவுளே உனக்கு உதவி செய்வார். நீ முயற்சியே செய்யவில்லை என்றால் அந்த கடவுள் மட்டுமில்லை. யாருமே உனக்கு உதவி செய்ய மாட்டார்கள்' என்று கூறினார்.
இதுபோலதான் நம் வாழ்வில் நாம் எந்த முயற்சியுமே செய்யாமல், கடவுள் நமக்கு உதவவில்லையே? என்று வருத்தப்படுகிறோம். முயற்சி என்ற ஒன்றை செய்யுங்கள். உங்களுக்கு தேவையானது தானாகவே உங்களை வந்து சேரும். என்ன நான் சொல்வது சரிதானே? முயற்சித்துப் பாருங்கள்.