புதிய விஷயங்களை தைரியமாக முயற்சி செய்யுங்கள்! 

Try new things.
Try new things.
Published on

ங்கிலத்தில் Patterned Life என்ற ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒருவருடைய வாழ்க்கை முறை ஒரே மாதிரியான நிர்ணயிக்கப்பட்ட சுழற்சியில் சுற்றிக் கொண்டிருப்பது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டாக, காலையில் எழ வேண்டும் > பணிக்கு செல்ல வேண்டும் > மாலை வீடு திரும்ப வேண்டும் > டிவி/திறன்பேசி பார்த்துவிட்டு > தூங்க வேண்டும்.

இது தான் இவ்வுலகில் வாழும் பெரும்பாலான மனிதர்களின் சராசரி வாழ்க்கைமுறை. இதை மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை விட, அதன் உள்ளே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

இதிலிருந்து வெளியே வரமுடியாமல் இருப்பதற்கு இரு காரணங்களைக் கூறலாம்.

  1. Bandwagon விளைவு.

  2. சுகத்திற்கு அடிமையாதல்.

Bandwagon விளைவு என்பது, பெருவாரியான கூட்டம் எதை பின்பற்றுகிறதோ அதையே சரி என ஏற்றுக்கொள்ளும் தன்மை. அதாவது நீங்கள் ஒரு கடைக்கு செல்கிறீர்கள் என்றால், ஆயிரம் பேர் வாங்கும் பொருளை நீங்கள் வாங்குவீர்களா, அல்லது வெறும் 10 பேர் மட்டும் வாங்கும் பொருட்களை வாங்குவீர்களா? நிச்சயம் ஆயிரம் பேர் வாங்கும் பொருட்களின் மீதுதான் உங்களுடைய சிந்தனை செல்லும். ஏனென்றால், அவ்வளவு பேர் வாங்குகிறார்கள் என்றால் அதனுடைய தரம் நன்றாக இருக்கும் என்று உங்கள் மனம் நினைக்கும்.

நீங்கள் சராசரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றும்போது, சவாலான விஷயங்கள் உங்களுக்கு அதிகமாக இருக்காது. எப்போது உங்கள் வாழ்வில் சவாலான விஷயங்கள் இல்லையோ அது மிகவும் இன்பமான நிலையிலேயே உங்களை வைத்திருக்கும். சிறுக சிறுக அந்த இன்பத்திற்கு நீங்கள் அடிமையாகி, எந்த புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளாதபடி உங்களுடைய சிந்தனைகள் அடிமைப்பட்டுபோகும். இதுவே போதும் என்று உங்களுடைய ஆற்றல்களை நீங்களே பூட்டிக் கொள்வீர்கள்.

நான் என்ன கூறுகிறேன் என்றால் நாம் யாரும் இவ்வுலகில் சராசரியாக இருந்து மடிந்து போவதற்கு பிறக்கவில்லை. உலகமே உங்களை எதிர்த்தாலும் பிடித்த விஷயத்திற்காக போராடுவது தவறில்லை. உங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதால் உங்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை என்றாலும், அதை முயற்சித்து அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் நிச்சயமாக மதிப்பில் அடங்காதது. அது உங்களுடைய வாழ்க்கையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வழி நடத்த உதவிபுரியும்.

எதையுமே முயற்சிக்காமல் மூளைக்குள்ளேயே அடிமைப்பட்டு முடங்கி கிடப்பதை விட, பிடித்த விஷயத்தை முயற்சி செய்து தைரியமாய் அடிவாங்குவது எவ்வளவோ மேல்.

அந்த சராசரி கூட்டத்திலிருந்து இந்தப் பக்கம் சற்று வாருங்கள். நீங்கள் நினைத்துப் பார்த்ததைவிட அபரிமிதமான சந்தோஷம் இங்கே ஒளிந்துள்ளது.

ஒரு தைரியமான முடிவு, இத்தனை நாள் நீங்கள் பூட்டி வைத்திருந்த அத்தனை கதவுகளையும் திறந்து விடும். அதன் உண்மை நிலையை உங்களுக்குப் புரிய வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com