
நீங்கள் கடந்த காலத்தில் எவ்வளவு கடினமான சூழல்களை வேண்டுமானாலும் எதிர் கொண்டிருக்கலாம். துரோகத்தால் வீழ்த்தப்பட்டிருக்கலாம். தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். தீய பழக்கங்களால் சீர்குலைந்திருக்கலாம். வாழ்க்கையை வீணடித்திருக்கலாம். எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்திருக்கலாம். நேரத்தின் முக்கியத்துவத்தை உணராமல் இருந்திருக்கலாம்.
ஆனால், தற்போது நினைத்தாலும் நம்முடைய வாழ்க்கையை நம்மால் சிறப்பாக மாற்ற முடியும் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே பலரும், ஒரு பிரச்சனை என்றால் உலகமே இருண்டுவிட்டது போல் துவண்டு விடுகிறார்கள். இதில் பெரும்பாலான மக்கள் கூறுவது என்னவென்றால், காலம் கடந்து விட்டது, இனி என்னால் எதையும் மாற்ற முடியாது என்று மனம் தளர்ந்து விடுகிறார்கள்.
இதிலும் சிலர் இந்த வயதில் இந்த விஷயங்களை செய்து நான் என்ன செய்யப் போகிறேன்? என்று வயது வரையறைக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட வயதிற்குள் ஒவ்வொரு விஷயங்களை அடைந்துவிட வேண்டும் என்று அனைவருமே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த குறிப்பிட்ட வயதிற்குள் அதை அடையாத பட்சத்தில் நாம் தோல்வியுற்றதாக எண்ணி வெட்கிப்போகிறோம். அவ்வாறு நாம் கடந்து வந்த பாதையைக் கண்டு காயம் கொள்வதால், இனி இருக்கும் நம் வாழ்வில் எவ்வித மாற்றமும் நிகழப்போவது கிடையாது என்பதை உணர வேண்டும்.
தற்போது நாம் இருக்கும் இடத்தில் மாற்றத்திற்கான விதை விதைக்கப்பட்டால், அடுத்து வரும் காலங்களில் நம்மை நாம் சிறப்பாக மாற்றிக்கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளது என்பதை ஆழமாக நம்புங்கள்.
குறிப்பாக உங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு பிறரிடம் அறிவுரை கேட்காதீர்கள். அது அவர்களுடைய அனுபவத்தை உங்களுக்கு திணிப்பதாகவே அமையுமே தவிர, உங்களுக்கான தீர்வை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான்.
பிறருடைய தவறான வழிகாட்டுதல் தான், ஒருவருடைய வாழ்க்கையை அதிகமாக சீர்குலைக்கிறது என நினைக்கிறேன்.
நிச்சயம் உங்களால் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும். தேவையில்லாமல் சாக்குப் போக்குகளின் பின்னால் ஒளியாதீர்கள்.