
ஒரு செயலில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போது, அதை நினைத்துக் கொண்டே அவ்வலியை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டாம். அவ்வாறு நமக்குள்ளே தேக்கி வைக்கும் வலியினால், நம் பிரச்சினைக்கான தீர்வுகளை அளிக்கவே முடியாது.
உதாரணத்திற்கு, நீங்கள் அடுப்படியில் சுடச்சுட காபி தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது தெரியாத்தனமாக உங்கள் கையில் நெருப்பு பட்டுவிடுகிறது. உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்?, வெடுக்கென்று கையை எடுத்து, இனி இதுபோன்று கையை அருகில் கொண்டு செல்லக்கூடாது, அப்படியே கொண்டு சென்றாலும் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள். இல்லை, "ஐயோ சுட்டு விட்டதே. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. என்னை சுற்றியுள்ள யாருக்கும் இப்படி சுட வில்லையே" என்று நெடுநேரம் அந்த வலியைப் பற்றி யோசிப்பீரா?. நிச்சயமாக கிடையாது தானே.
இதேபோன்று உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போன்று சில விஷயங்கள் நடக்காதபோது, அந்த வலியினை ஒரு சமிக்ஞையாக, அல்லது மாற்றுவழியில் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்து செயல்படலாம்.
நான் அறிந்தவரை, வெற்றி நம்மை ஒரு இடத்தில் கட்டிப் போட்டுவிடும். தோல்விதான் நம்முள் இருக்கும் நமக்கே தெரியாத பல ஆற்றல்களை வெளிக்கொணர உதவும்.
குறிப்பாக, உங்களுடைய எதிர்பார்ப்புகளை பிறர் மீதோ, அல்லது பிறவற்றின் மீதோ வைப்பதற்கு பதில், உங்களை முதல் நிலைப்படுத்தி, உங்கள் மீது வைத்துக் கொள்ளுங்கள்.
என்னிடம் பிறர் இப்படி நடந்து கொள்ள வேண்டும். என்னிடம் அவர்கள் அன்பு செலுத்த வேண்டும். எனக்கு அவர்கள் மரியாதை தரவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு பதில்,
நான் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும். நான் பிறரிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டும். நான் என்னுடைய செயலை சிறப்பாக செய்ய வேண்டும் சிந்திக்கப் பழகுங்கள்.
அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எதைப் பற்றியும் சிந்திக்காமல் உங்களுக்கு நன்மை தருவது பற்றி மட்டும் சிந்தியுங்கள்.