சுட்டெரிக்கும் தீச்சுடராய், வேகத்தில் விவேகமாய், உண்மையின் உருவமாய் கொண்டு விண்ணை தொட முயன்றுபார். உன்னால் முடியும். வீழ்வது எழுவதற்காக மட்டும் அல்ல. உன்னாலும் எழ முடியும் என்பதற்காகத்தான். உன்னை நீயே செதுக்கிக்கொள். முடியும் என்று கூறிப்பார். துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டைவிட வேகமாக செயல்பட முடியும். நீ ஒவ்வொரு நாளும் கண்ணாடியின் முன் முகத்தை பார்க்கும்போது இந்த முகம் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு கண்ணாடியை பார்.
கிணற்றில் குதிப்பவன் தன் கையை கீழே தள்ளினால் தான் மேலே எழ முடியும். ஆம் உன்னுடைய தோல்வியில் இருந்து மேலே எழுவதற்கு முயற்சி என்ற ஏணிப்படி தேவைப்படுகிறது. முடியாது என்று நினைப்பவன் இறகு இல்லாத பறவை போன்றவன். ஜன்னல் இல்லாத வீடு போன்றவன். தோல்வியில் வீழ்பவன் சிரித்துக் கொண்டே எழவேண்டும். உளியின் காயம்படும்போதுதான் ஒரு கல் சிலையாக மாறுகிறது. என்னால் சாதிக்க முடியாது, நான் எல்லா செயல்களிலும் கடைசியாகத்தான் வருகிறேன் என எண்ணாதே. ஸ்லோ சைக்கிள் ரேஸில் கடைசியாக வருபவன்தான் வெற்றி பெறுகிறான் என்பதை மறவாதே.
அறிவு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். அலையை பார்; ஓய்ந்து விடுவதில்லை. நீர் வீழ்ச்சியை பார்; நின்று விடுவதில்லை. சூரியனை பார்; மறைந்து மறுபடியும் தோன்றாமல் இருப்பதில்லை. ஆம். உன் தோல்வியும் மறைந்து வெற்றி என்னும் கொடியை நிலை நாட்டுவோம்.
மண்ணில் பிறந்த நீ முடியும் என்று உறுதியோடு இருந்தால் தோல்விக்கே பயம் காட்டலாம். நினைப்பதே வெற்றிதான். ஒரு சிறிய செடிதான் பின்னாளில் பெரிய ஆலமரமாக வளர்கிறது. ஆம். தோல்வியை கண்டு துவண்ட நீயும் வாழ்க்கையில் மேம்பட்டு காணப்பட போகிறாய் என்பதை மறவாதே. சுனாமியை பார்த் தவனுக்கு புயல் ஒன்றும் பெரிதில்லை. தோல்வியை கண்டவனுக்கு வெற்றி ஒன்றும் தூரமில்லை; உன் அருகில்தான் உள்ளது. தேடு... தேடு... தேடிக் கொண்டே இரு.உன்னால் ஜெயித்துவிட முடியும்.
இந்த உலகம் உன்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறது. அதை உன்னால் மட்டுமே செய்ய முடியும். அது என்ன என்று தேடி செய்து முடி; வெற்றி பெறுவாய். பயன்படாது என நினைப்பதிலும் பயன் இருக்கிறது என நினைவில் வைத்துக்கொள். தோல்வி என்பது வீழ்வதும், வெற்றி என்பது எழுவதும் அல்ல. அது நம்மை நாமே செதுக்கி கொள்ள பயன்படும் தூண்டுகோள். வெற்றி உன்னை உற்சாகப்படுத்தும்; தோல்வி உன்னை ஊக்கப்படுத்தும். இரண்டுமே உன் வாழ்க்கையை மேன்மைப்படுத்தும். உன்னில் உள்ளது உந்து சக்தி; அதை உசுப்பி விடு.
ஜெயிக்க முடியும், போராட முடியும், எதிர்க்க முடியும், நிமிர முடியும், உயர முடியும், சாதிக்க முடியும், முயற்சிக்க முடியும், ஜொலிக்க முடியும், முன்னேற முடியும், வாழ முடியும் என கூறிப் பார்; உன்னாலும் தோல்வியை விரட்டியடிக்க முடியும்.