நம் வாழ்நாளில் ஏழில் ஒரு பகுதியை பேசியே நாம் வீணாக்குகிறோம். அதை சுயபரிசோதனை செய்தால் தெரியும். நாம் பேச்சைக் குறைக்கக் குறைக்க அதில் இருக்கும் பொருள் இன்னும் தீவிரப்படும். நாம் பேசுவதைக்காட்டிலும் பாவங்களால்தான் அதிகமாக மற்றவர்களுக்குப் புரிய வைக்கிறோம்.
வணக்கம் வைப்பது, கை குலுக்குவது, சலாம் செய்வது அனைத்துமே தன் கைகளில் ஆயுதம் எதையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான்.
தவறு நிகழ்ந்துவிட்டால் நெற்றியில் அடித்துக்கொள்வதும் தெரியாது என்பதற்குத் தோள்களைக் குலுக்குவதும் உலகெங்கும் உள்ள சமிக்ஞைகள்.
கைகளைக் கட்டிக்கொள்வது பாதுகாப்பின்மையாலும் பயத்தினாலும் ஏற்படுகிற ஒரு பிரதிபலிப்பு.
ஒருவர் உறுதியாக அழுத்திக் கை குலுக்கினால் அவர் உறுதியான மனப்பான்மை கொண்டவர் என்றும் நம் கைகளின் மேல் தன் கையை வைத்துக் கைகுலுக்கினால் மற்றவர்கள் மீது ஆளுகை செய்பவர் என்றும், நம் கைகளுக்குக் கீழ் தன் கைகளைக் கொடுத்துக் குலுக்கினால் பணிந்து செல்பவர் என்றும், விரல்களை மட்டுமே நம் கைகளில் ஒற்றி எடுத்துக் கைகுலுக்கினால் பிரச்னைகளிலிருந்து நழுவுபவர் என்றும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
நம் கண்களைப் பார்த்துப் பேசப்பயப்படுபவர் எதையோ மறைக்கப் பார்க்கிறார் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பாடி லாங்குவேஜ் என்பது பேசுகின்ற மொழியோடு இயைகின்ற போதுதான் நம்முடைய உரையாடல் எதார்த்தமாக இருக்க முடியும் . பாடி லாங்குவேஜ் குறித்து தொல்காப்பியம் திருக்குறள் போன்ற நூல்கள் எடுத்துச் சொல்லி இருக்கின்றன.
அன்பை காதலை மகிழ்ச்சியை வருத்தத்தை ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ளலை வேகத்தை விரைவில் நாம் குறிப்புகளால் கண்களால் உடல் கை அசைவுகளால் உணர்த்தி வருகின்றோம்.
இன்னா செய்தாரைத் தண்டிப்பது கூட அவர் வெட்கப் படும்படியாக நற்காரியம் செய்வதன் மூலம்தான் என்று சொல்லுவதுதான் மிகப்பெரிய positive stroke ஆக இருக்க முடியும்.
அண்ணா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். "இரவு எத்தனை மணிநேரம் பேசினாலும் நண்பர்கள் பிரியும்பொழுது 'நேரம் ஆகிவிட்டது. மறுபடியும் நாளை பேசிக்கொள்வோம்' என சொல்லிவிட்டுத்தான் பிரிவார்கள்" என்று. நம்முடைய அரட்டை அடிக்கும் மனப்பான்மையைப் பற்றி அவர் சொன்னது இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் பொருந்துவதாக இருந்தால் நாம் இன்னும் கூட வளரவில்லை என்றுதானே பொருள்?
"நான் எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுவேன் என்று தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு அடுத்தவர்களைப் புண்படுத்துவதும் தவறு தேவையில்லாமல் இனிய உயர்ந்த சொற்களை அடிக்கடி பயன்படுத்தி அவற்றின் பொருளைத் துருப்பிடிக்கச் செய்வதும் தவறு.
நம் பேச்சின் மகத்துவம் நாம் சொல்லாத சொற்களில் அடங்கியிருக்கிறது.
ஆம். சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் மட்டுமல்ல - அவை ஏற்படுத்திய காயத்தையும் கூட திரும்பப்பெற நம்மால் முடியவே முடியாது.