

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். இருக்கும் என்பதைவிட இருக்கவேண்டும். லட்சியமில்லா வாழ்க்கையானது அச்சாணி இல்லா சக்கரம்போல ! சாட்டையில்லா பம்பரம் போல! சுவரில்லா சித்திரம்போல! உப்பில்லாத உணவுபோல…
ஆக, லட்சியமே மிகவும் முக்கியமானது. ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம் என்ற நிலைபாடு களுக்கிடையில் சாதிக்கத்தானே வேண்டும். அதிலும் லட்சியம் கடைபிடித்து சாதிக்க வேண்டும்.
அதேபோல தளராத உறுதி, மற்றும் நம்பிக்கையுடன் செயல்படும் எந்த ஒரு காாியமும் தோற்றுப்போனதாக வரலாறே கிடையாது.
இதைத்தான் "ரிக்விட்டி" எனும் அறிஞர் தனது கூற்றாக தளராத உறுதியுடன் நம்பிக்கையுடன் செயல்படும் மனிதனுக்கு வெற்றிஎன்பது எட்டாக்கனி அல்ல என கூறியுள்ளாா்.
அதேபோலவே நான் அதைச் செய்துவிடுவேன், இதைச் செய்து விடுவேன் என பந்தா காட்டி லட்சியமில்லாமல் சிலர் எடுத்தேன் கவிழ்த்தேன் என சில விஷயங்களில் அகலக்கால் வைப்பதும் பின்னர் சேற்றில் காலையேவைத்துவிட்டுவிட்டது போல புலம்பவதும் உண்டே!
எதற்கும் ஒரு எல்லை, வரம்பு என்பது உண்டல்லவா, அதைமீறாமல் எடுத்த காாியங்களில் கொண்ட லட்சியங்களில் சிறப்பாக, நோ்மறை ஆற்றல்மற்றும் நல்ல எண்ணங்களுடன் அனைவரையும் அனுசரித்துப்போகும் பக்குவம் கடைபிடிக்கவேண்டும்.
ஒரு பானை சோற்றுக்கு எப்படி ஒரு சோறு பதமோ என்பதுபோல நமது செயல்பாடுகளில் கவனச்சிதறல் இல்லாமல் பாா்த்துக்கொள்ளவேண்டும். அதேபோல மேலே வானம் கீழே பூமி என ஒற்றைக்கம்பியில் எப்படி கழைக்கூத்தாடியால் லாவகமாக நடக்கமுடிகிறது? அது அவருக்கு தொழிலாக இருந்தாலும் அந்தரத்தில் கம்பியின் மேல் எந்த ஆதாரமும் இல்லாமல் எவ்வாறு அவரால் நடக்க முடிகிறது!
உடலை வளைத்துக் கொடுத்து நெளிவு சுளிவுபாா்த்து லாவகமாய் லட்சியம் தவறாமல் எடுத்துக்கொண்ட விஷயத்தில் கவனமுடன் செயல்படுகிறான், ஆக அந்த கழைக்கூத்தாடியால் கீழே விழாமல் நடக்க முடிகிறது என்றால் நல்ல சாலையில் நடந்து போகும் நம்மால் நமது லட்சியத்தில் வெற்றிபெற முடியவில்லையே!
ஒரு காாியத்தில் தோல்வி அடையாமல் விடாமுயற்சியுடன் அனைவரையும் மதிக்கும் பண்பாடுகளை வளா்த்துக் கொண்டு, தான் என்ற அகம்பாவம் இல்லாமல் நமது வேலைகளைச் சரிவர செய்தாலே நமது லட்சியத்தால் நாம் வகுத்த நோ்பாதையில் பயணித்தாலே போதுமானதாகும்.
லட்சியத்திற்கு தோல்வியே இல்லை எனலாம். ஆக லட்சியமே லட்சணம். லட்சியமில்லாதவை அனைத்துமே அவலட்சணம்தான் என்பதை அறிவோமா..?