"நீங்கள் நினைப்பதும் பேசுவதும் செய்வதும் இணக்கமாக இருப்பதிலேயே உங்கள் மகிழ்ச்சி இருக்கிறது" இது காந்தியடிகள் சொன்னது.
என்னால் முடியாது. இது எனக்கு எப்படி நேர்ந்ததோ? நான் மொத்தத்தில் தோற்றுவிட்டேன். எனக்கு நம்பிக்கை இல்லை. இதைப் போன்ற சொற்றொடர்களை நீங்கள் உங்களிடம் கூறுவதை கேட்டிருக்கிறீர்களா? இவற்றில் ஏதாவது ஒரு கூற்றிற்கு, 'ஆம்' என்று நீங்கள் பதில் தந்தால் உங்களை அறியாமலேயே உங்களின் வெற்றிக்கு நீங்கள் தடை போட்டீர்கள் என்றுதான் அர்த்தம். உளவியல் ஆராய்ச்சி இதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
எந்த சொற்களை திரும்பத் திரும்ப பயன் படுத்துகிறோமோ, தொடர்ந்து சிந்திக்கின்றோமோ, விடாது பேசுகின்றோமோ அச்சொற்களை ஆழ்மனது உண்மை என்று நம்பி வேலை செய்யும். மனதும் உடலும் அந்த சொற்களை நிஜப்படுத்தும் வேலைகளை செய்ய மனம் ஏவி விடும். எனவே வெற்றிகரமாக செயல்களை செய்ய வேண்டும் என்று விரும்பினால் நாம் பயன்படுத்தும் சொற்கள் நம்பிக்கையை வளர்ப் பதாகவும், முயற்சியை தொடர தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். நாம் எழுதும் ஒவ்வொரு சொல்லும் நேர்மறையாக துணிவுடையதாக ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
நாம் பயன்படுத்தும் சொற்கள் மகத்தான சக்தியை கொண்டிருக்கும். நம்மை உலகிற்கு அடையாளம் காட்டுவது நமது சொற்கள் தான். மற்றவர்கள் நம்மை ஆதரிப்பதும், பின்பற்றுவதும் ,உயர்வாக கருதுவதும் சொற்களாலேயே. நம்மை உயர்த்தும் சக்தியும் ,தாழ்த்தும் சக்தியும் சொற்களுக்கு உண்டு. வலுவான நற்பெயரை பெற்று தருவதும் மற்றவர்கள் மத்தியில் சிறந்தவராக கருதப்படுவதும் நம்முடைய சொற்களாலேயே. புது வாய்ப்புகள் நம்முடைய வழியில் வருவதற்கு காரணமும் நம் சொற்களே. எனவே தகுந்த திறன் மிகுந்த சொற்களையே தினமும் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
"நாம் பேசும் சொற்களே நாம் கட்டி வாழுகின்ற வீடாக மாறுகிறது" என்கிறது எகிப்து பழமொழி. நம்முடைய சொற்கள் மற்றவர்களுக்கு நம்மை வெளிப்படுத்துகிறது. அவற்றின் மூலமே நாம் உலகைப் பார்க்கிறோம். நம்மைப் பற்றியும் நம்முடைய திறன்கள் பற்றியும் தொடர்ந்து நேர்மறையாக பேசிக் கொண்டிருந்தால் ,அந்த சொற்கள் நம்மிடத்தில் திடமான நேர்மறை மனோபாவத்தையும் ,நேர்மறை அணுகுமுறையையும் ஏற்படுத்தும். அதைப்போன்றே அச்சப்படுவதாகவும் நம்பிக்கை இல்லை என்றும் எதிர்மறையாக சிந்தித்துப் பேசியும் வந்தால் அந்த சொற்களின் அர்த்தங்கள் நம் வாழ்வில் தொடர்ந்து பிரதிபலிக்கும்.
மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களுடைய வார்த்தையே தீர்மானம் செய்கிறது. மற்றவர்கள் நம்மை உயர்வாக எண்ணவில்லை என்று தோன்றினால், அவர்களது உதடுகளில் இருந்து உதிக்கும் சொற்களைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும் .நம்முடைய சொற்களை மாற்றும்போது மற்றவர்கள் நம் மீது கொள்ளும் அபிப்பிராயம் மாறும். நல்ல நம்பிக்கை தருகின்ற தொண்டுள்ளம் கொண்ட நேர்மறை சொற்றொடர்களை தொடர்ந்து பேசுகிறவர்களிடம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் சக்தி உண்டு. அவர்களின் நட்பு வட்டம் பெரிதாக இருக்கும். எனவே சமூகத்தில் உயர்ந்தவர்களாக நாம் கருதப்பட விரும்பினால் அவ் விருப்பத்திற்கு உகந்த சொற்களை மட்டுமே பேசவேண்டும். எழுதவும் வேண்டும்.
நம்முடைய வெற்றிப் பயணத்தில் என்னால் முடியும். நான் செய்து முடிப்பேன். எல்லாவற்றிலும் நல்லது உண்டு. எதிர்காலம் இன்னும் சிறப்பாகவே இருக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முயன்றால் எல்லாம் முடியும். உலகம் ஒரு மகிழ்வான இடம். ஒவ்வொரு நாளும் வெற்றிக்கான புதிய வாய்ப்பு. சோதனைகள் கடந்து போகும் இவற்றை சொல்லிப் பாருங்கள். வாழ்வு வளமாவதை கண்கூடாக காண்பீர்கள்.