இல்லாதப்ப தான் பொருளின் அருமை தெரியுமா? மனசைத் தொடும் உண்மை!

நம்மிடம் இருக்கும்போது புரியாத பொருளின் அருமை, அது இல்லாத போது மட்டுமே புரிகிறது; மனித மனதின் இந்த அலட்சியத்தைப் போக்கி உண்மையான மனநிறைவையும் மகிழ்ச்சியையும் பெற உதவும் வாழ்க்கைச் சிந்தனைகள்.
பொருளின் அருமை Value of Things
பொருளின் அருமை Value of ThingsGemini Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

எதுவும் இல்லாத ஒருவருக்கு சிறிய உதவி அல்லது பொருள் கிடைத்தாலும், கிடைக்கும் அந்த எளிய பொருளும் அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் தெரியும். அதுவே எல்லாமே உள்ளவர்களுக்கு எதையும் அலட்சியமாகவே பார்க்கத் தோன்றும். இது மனிதர்களின் தேவைகளையும் மனநிலையையும் காட்டும் ஒரு ஆழமான வாழ்க்கை உண்மையாகும். வறுமை அல்லது தேவையாக இருக்கும் சமயத்தில் கிடைக்கும் சிறு விஷயம் கூட நமக்கு பெரிய சந்தோஷத்தை பெற்றுத் தரும்.

சமயமறிந்து கிடைக்கும் சிறிய உதவியும் பெரிய மகிழ்ச்சியைத் தரும். ஆனால் எல்லாமே மிகுதியாக இருப்பவர்களுக்கு எந்தப் பொருளின் மதிப்பும் பெரிதாகத் தெரிவதில்லை. வசதியானவர்களுக்கு எதற்கும் பஞ்சமில்லை என்பதால் எதுவும் பெரிதாகத் தோன்றாது போலும்.

அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்படும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் சிறிய உதவியோ அல்லது பொருளோ மாபெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. இதைத்தான் தாகத்தோடு இருப்பவனுக்கு ஒரு சொட்டு நீர் அமிர்தம் போல் இருக்கும் என்றும், எங்கு பசி உள்ளதோ அங்கு உணவின் அருமை தெரியும் என்றும் சொல்வார்கள். இல்லாதவர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

சின்ன சின்னத் தேவைகள் பூர்த்தியானாலும் அது அவர்கள் முகத்தில் பெரிய புன்னகையை வரவழைக்கும். எல்லாவற்றையும் எளிதாகப் பெற்று பழகியவர்களுக்கு எவ்வளவு பெரிய நன்மைகள் அல்லது பொருட்கள் கிடைத்தாலும் அதன் அருமை தெரிவதில்லை. மனித வாழ்க்கையில் கிடைக்கும் பொருட்களின் எண்ணிக்கையை விட நம்மிடம் இருக்கும் திருப்தி என்ற குணமே உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.

ஒரு பொருளின் மதிப்பு அதன் தேவையைப் பொறுத்து தான் அமையும். தேவைகள் இல்லாத பொழுது மிக விலையுயர்ந்த பொருட்களும் சாதாரணமாகத்தான் தெரியும்.

பொருளின் அருமை Value of Things
பொருளின் அருமை Value of ThingsGemini Image

எந்த ஒரு பொருளும், குணமும் அல்லது வாய்ப்பும் யாரிடம் ஏற்கனவே அதிகமாக இருக்கிறதோ, அவருக்கு அதன் உண்மையான மதிப்பு தெரிவதில்லை. அதை அவர்கள் மிகச் சாதாரணமாக அல்லது அலட்சியமாகத்தான் நினைப்பார்கள். ஒரு பொருளின் அருமை அது இல்லாத போது தான் புரியும். பசி உள்ளவனுக்கு தான் உணவின் மதிப்பு தெரியும்; பசி இல்லாதவனுக்கு அது வெறும் சாப்பாடு.

வாழ்க்கையில் எல்லாமே எளிதாகக் கிடைத்து விடும்போது, மனித மனம் அதை ஒரு சலுகையாக பார்க்காமல் தனக்கு கிடைத்த உரிமை என்று நினைத்து அலட்சியப்படுத்தத் தொடங்கும்.

தங்களிடம் இருப்பதைவிட இல்லாத ஒன்றை நோக்கி எப்போதும் நம் மனம் ஓடுவதால் கையில் இருப்பவற்றின் மீது அலட்சியம் பிறக்கிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழி இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. இல்லாதவன் ஏங்கும் ஒரு வாழ்க்கை இருப்பவர்களுக்கு சாதாரணமாகத் தெரியும்.

ஒரு விஷயம் எளிதாகக் கிடைக்கும் போது அதன் மதிப்பு மனதுக்குத் தெரிவதில்லை. ஆடம்பரமோ, வசதியோ எப்போதும் கூடவே இருக்கும் பொழுது அது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிடுகிறது. இருப்பதை ரசிப்பதை விட இல்லாத மற்றொன்றின் மீதுதான் மனித மனம் அதிகம் ஆசைக்கொள்ளும்.

மொத்தத்தில் மனித மனம் தனக்கு எளிதாகக் கிடைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் மிக வேகமாக பழகிக் கொள்கிறது. ஒருமுறை ஒரு வசதி அல்லது பொருள் கிடைத்து விட்டால் அதன் மீதான ஈர்ப்பு மறைந்து அலட்சியம் பிறக்கிறது. ஆனால் அது கிடைக்காத தூரத்தில் இருக்கும் வரை அதன் மீதான ஏக்கம் ஒரு அதிசயம் போல் நீடிக்கிறது.

"திருப்தியை விட பெரிய செல்வமும் இல்லை; பொறுமையை விட மேலான குணமும் இல்லை" என்ற கூற்றின் படி இருக்கும்பொழுது அதன் மதிப்பை உணர்வதே புத்திசாலித்தனம். நம்மிடம் இருக்கும் சிறிய விஷயங்களுக்கும் நன்றி செலுத்தப் பழகும் பொழுது அலட்சியம் மறைந்து எல்லாமே அதிசயமாய் மாறும். செய்வோமா?

logo
Kalki Online
kalkionline.com